சென்னை, ஏப்.4 -சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண் ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டுப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்றும், நாளையும் தென் தமிழ் நாட்டுப், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 6, 7-ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும்.
வரும் 6-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதனால் 6-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
வரும் 7-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியஅந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
No comments:
Post a Comment