சென்னை, ஏப்.22 சென்னை அய்.அய்.டி.யில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் பொது இடங்களுக்கு செல்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அய்.அய்.டி.யில் விடுதியில் தங்கி படிக்கும் 12 மாணவர்களுக்கு நேற்று (21.4.2022) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இன்னும் பலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று அய்.அய்.டி.க்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
வெகு நாட்களுக்கு பிறகு சென்னை கிண்டி அய்.அய்.டி.யில் கிளஸ்டர் உருவாகி உள்ளது. ஒரே இடத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் லேசான தொற்று தான். எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை.
தற்போது வரை 365 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முகக்கவசம் கட்டாயம்
தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
No comments:
Post a Comment