'நீட்'டுக்கு எதிராக திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள்
மக்கள் சிந்தனைக்கு...
கல்வியை ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent List) கொண்டு சென்றதன் கெடு விளைவாக மாநிலங்களின் கல்வி உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டன.
அதன் ஒரு அங்கமாக மாநில அரசுகளால் நடத் தப்படும் மருத்துவக் கல்லூரிகளின் இடங்களில் 15% இடங்கள் ஒன்றிய அரசுக்கு என்று பிடுங்கப்பட்டன.
அவற்றிற்கு 1988 முதல் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு இந்த இடங்கள் நிரப்பப்பட்டன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மீதியிருந்த 85% இடங்கள் தமிழ்நாடு அரசால் நிரப்பப்பட்டன. எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் 1984ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டது. 21 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்குப் பின் போராடி 2007 ஆம் ஆண்டு சட்டரீதியாக நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு +2 தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அத்துறையில் சமூக நீதி பூத்துக்குலுங்கி பூரிப்பைத் தந்தது.
இந்த நிலையில் 2013ஆம் ஆண்டு அகில இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைப்படி அனைத்து மருத்துவ இடங்களுக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது ஒன்றிய அரசு.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து 100க்கு மேற்பட்ட மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை நீதிபதிகள் மூவர் அல்தாமஸ் கபீர், விக்கிரஜித் சிங், தவே ஆகியோர் விசாரித்தனர். இவர்களில் அல்தாமஸ் கபீர், விக்ரமாசித் சிங் ஆகியோர் தங்கள் தீர்ப்பில், ‘மருத்துவ கல்விக்கான’ நெறிமுறைகளை வகுப்பதைத் தவிர, நுழைவுத் தேர்வை நடத்திட சட்டப்படியாக அதிகாரம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கிடையாது. பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை. மாநிலங்கள் தாங்களாகவே நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளலாம் அல்லது தற்போது உள்ள நடைமுறைகளையே பின்பற்றலாம் என்று அரசமைப்பு சட்டத்தின் 19, 25, 26, 29, 30 ஆகிய பிரிவுகளை சுட்டிக்காட்டி தீர்ப்பளித்தனர். ஆர்.வி.தவே மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தையொட்டி நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி ஏற்பட்டவுடன் ஒன்றிய அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கினை விசாரிக்க முன்பே நுழைவுத் தேர்வுக்கு ஆதரவான மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய ஆர்.வி.தவே தலைமையில் அமர்வு அமைக்கப்பட்டது.
அது அப்போதே கண்டிக்கப்பட்டது. பின்னர் எதிர்ப்பார்த்தவாறே நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தன. இதற்கிடையே தமிழ்நாட்டிற்கு ஓராண்டு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
‘நீட்’ தேர்விற்கு நிரந்தர விலக்குக் கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன.
அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலிவுற்று மறைவுற்ற நிலையில் தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு திணிக்கப்படுவது உறுதியானது அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் குறுக்கு சால் மூலம்!
இதனைக் கண்டித்து திராவிடர் கழகம் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து போராட்டத் தில் ஈடுபட்டது. திராவிடர் கழகம் ஒருங்கிணைத்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ‘நீட்’ விலக்குக் கேட்டு தனி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும், என்ற திராவிடர் கழகத்தின் கருத்தினை வழிமொழிந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘நீட்’டிலிருந்து நிரந்தரவிலக்குக் கோரி இரண்டு சட்ட வரைவுகள் முழுமனதாக நிறைவேற்றப்பட்டன. அதற்கு ஒன்றிய அரசும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கக்கோரி அனைத்துக் கட்சிகளும் போராடின.
அரக்கோணத்தில் 19.11.2016 அன்று காஞ்சிபுரம் மண்டல திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் புதிய கல்வி - ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒழிப்பு மாநாட்டினை நடத்தினோம்.
19.12.2016அன்று திருச்சியில் திராவிடர் கழகம் மாணவர், பெற்றோர், ஆசிரியர்களைக் கொண்ட முத்தரப்பு மாநாட்டினை நடத்தியது.
நுழைவுத் தேர்வு ஒழிப்பு மாநாட்டினை நடத்தியது. (2017 மார்ச் 18 முதல் 21 வரை) திராவிடர் மாணவர் கழகம் இரு சக்கர வாகனப் பரப்புரை பயணத்தை அய்ந்து குழுக்களாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து தொடங்கி மூலை முடுக்கெல்லாம் நடத்தியது.
No comments:
Post a Comment