சென்னை, ஏப்.5- தமிழ்நாட்டில் இதுவரை ரூ.4,805 கோடி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் அய்.பெரியசாமி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் அய்.பெரியசாமி நேற்று (4.4.2022) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து, அந்த வங்கிகளில் வைக்கப்பட்ட போலி நகைகள் மற்றும் முறைகேடாக பெற்ற நகைக் கடன் போன்ற மோசடிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்றது. அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக தகுதியானவர் களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, பயனாளி களுக்கு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 14 லட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகளுக்கு ரூ.5,296 கோடி அளவிற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் தற்போது வரை தகுதியுள்ள 12 லட்சத்து 19 ஆயிரத்து 106 பயனாளிகளுக்கு, ரூ.4,805 கோடி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, தகுதி வாய்ந்த 97 சதவீதம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மீதம் உள்ள பயனாளிகளுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். பயிர்க்கடன் அடிப்படையில் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment