மூன்று கொள்கைகளை முன்னிறுத்தி 4700 கி.மீ. பயணித்த அண்ணன் வீரமணி எங்களுக்கெல்லாம் பாதுகாப்புக் கேடயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 26, 2022

மூன்று கொள்கைகளை முன்னிறுத்தி 4700 கி.மீ. பயணித்த அண்ணன் வீரமணி எங்களுக்கெல்லாம் பாதுகாப்புக் கேடயம்

பெரியார், அம்பேத்கர் தலைவர்களுக்குப் பெரும் சிறப்பு!
மனிதாபிமான சிகரம் நமது முதலமைச்சர் 
எல்லோரையும் ஒன்றிணைக்கும் முதலமைச்சரின் முயற்சி வெற்றி பெறுக!

“திராவிட இயக்கப் போர்வாள்” வைகோவின் விருப்பமும், வேட்கையும் - உரை வீச்சு!

சென்னை, ஏப்.26  'நீட்' எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு என்ற முத்தான கொள்கைகளைப் பரப்பிட 4700 கி.மீ. பயணித்த அண்ணன் வீரமணி எங்களுக்கெல்லாம் பாதுகாப்பு அரண் என்றார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள். நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூகநீதிக்கான சக்திகளை ஒன்றிணைக்கும் பணியில் வெற்றி பெற வேண்டும் எனறும் வாழ்த்தினார்.

பிரச்சாரப் பெரும்பயண நிறைவு விழா 

நேற்று 25.4.2022 மாலை சென்னை பெரியார் திடலில்   நடைபெற்ற பிரச்சாரப் பெரும்பயண நிறைவு விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் - திராவிட இயக்கப் போர்வாள் வைகோ எம்.பி.,  அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

சாதனை நாயகர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர்,
 என் ஆருயிர் சகோதரர்...

அலைகடல் தாண்டிய அரபு நாடுகளிலே பல்லாயிரக்கணக்கிலே தமிழர்கள் ஒன்று திரண்டு வாழ்க வாழ்க என்று முழக்கம் எழுப்ப, அடுத்து இதுவரை எவரும் சாதிக்காத விதத்தில், இங்கிலாந்து நாட்டினுடைய நாடாளு மன்றத்தில் அவுஸ் பிளாஸ்ட்டிலே பேசப் போகிறார் என்கிற செய்தி வெளியே வர, அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் உள்ள தமிழர்கள் என்றைக்கு வருவார் இந்த சரித்திர நாயகர், சாதனை நாயகர் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய இங்கு சிறப்புரை நிகழ்த்தப் போகின்ற சாதனை நாயகர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர், என் ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,

  • பத்து வயதிலேயே தந்தை பெரியார் பகுத்தறிவுப் பால் பருகிய அண்ணன் வீரமணி
  • முதலமைச்சர் பக்கத்தில் அண்ணன் வீரமணி இருப்பதால் நிச்சயமாக நமது முதலமைச்சர் வெற்றி பெறுவார்
  • அமைதியான ஆரவாரமில்லாத புரட்சியை செய்து வருகிறார் நமது முதலமைச்சர்
  • முதலமைச்சரே உங்கள் கொற்றம் வாழ்க! புகழ் வாழ்க! முயற்சிகள் வெல்கவே!

ஆருயிர் அண்ணன் மானமிகு வீரமணி

தமிழ்நாட்டு வரலாற்றில் அழியாத இடத்தை தன்னு டைய சாதனைகளால் பெற்றிருக்கின்ற - கிட்டத்தட்ட 21 நாள்களில், 4,700 கிலோ மீட்டர் பயணம் செய்து, 38 கூட்டங்களில் முழக்கமிட்டு, லட்சக்கணக்கான மக்களை ஈர்த்து, நீட்டை எதிர்ப்பதற்கு, தேசிய கல்விக் கொள் கையை எதிர்ப்பதற்கு, மாநில சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி என்ற கொள்கையை நிலைநாட்டுவதற்காக, பெரும் பயணம் நடத்தி, இன்று அனைவருடைய வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்ற ஆரூயிர் அண்ணன் மானமிகு வீரமணி அவர்களே,

வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு துரை.சந்திரசேகரன் அவர்களே,

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் ஆருயிர் சகோதரர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

திராவிடர் இயக்கத்தினுடைய சாதனையாக இங்கே உரையாற்றிவிட்டுச் சென்றிருக்கின்ற சென்னை மாநகர மேயர் பிரியா அவர்களே,

நன்றியுரையாற்றவிருக்கின்ற திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு அன்புராஜ் அவர்களே,

அமைச்சர் பெருமக்களே, மேனாள், இன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்களே, அரசியல் கட்சிகளின் தலைவர்களே,

கருப்புடை தரித்தோர் உண்டு - கொடுமையை நறுக்கியே
 திரும்பும் வாட்கள்!

பாயும் ஈட்டிகள் என, கருப்புடை தரித்தோர் உண்டு - கொடுமையை நறுக்கியே திரும்பும் வாட்கள் என்ற சொல்லுக்கு இலக்கணமான திராவிடர் கழகத்தின் தீரமிகு தோழர்களே,

பத்திரிகையாளர்களே, தொலைக்காட்சி ஊடக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண் டார் - இனி நாம் தொடர்வோம் என்று ஆருயிர் அண் ணன் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கூறினார்கள் - அந்தப் பயணத்தினுடைய  தொடர்ச்சியாகத் தான் இன்றைக்கு 4,700 கிலோ மீட்டர் பயணம் செய்து விட்டு, இன்னும் நான் பயணிக்கத் தயாராக இருக்கிறேன் - இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் என்று சொன்னார் அல்லவா நம்முடைய அண்ணன் வீரமணி அவர்கள்.

எங்களுக்கெல்லாம் ஒரு பாதுகாப்புக் கேடயமாக
 நீங்கள் திகழவேண்டும்

120 ஆண்டுகளுக்குமேலும் வாழ்ந்து, எங்களுக் கெல்லாம் ஒரு பாதுகாப்புக் கேடயமாக நீங்கள் திகழ வேண்டும் என்று அண்ணன் வீரமணி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வயது 10 - சின்னஞ்சிறுவன் - இடம் கடலூர் - திராவிட நாடு இதழுக்கு நிதி திரட்டுகின்ற நிகழ்ச்சி நடைபெற்று, 112 ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

அங்கே போட் மெயில் பொன்னம்பலமும், டி.எஸ்.பி.பொன்னப்பாவும் பேசி முடித்த பிறகு, அண்ணா உரையாற்றவிருக்கிறார்.

அப்பொழுது சிறுவன் இங்கே பேசுவார் என்று சொல்கிறார்கள். மேசைமீது ஏறி நின்று அந்த சிறுவன் பேசுகிறார். கைதட்டலை அள்ளிக்கொண்டு செல்லுகிறார். எல்லோரும் திகைக்கிறார்கள். அந்தச் சிறுவன்தான், இன்றைக்கு இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய அண்ணன் வீரமணி அவர்கள்.

அடுத்து 1944 ஆம் ஆண்டு - அதே கடலூரில், திராவிடர் கழக மாவட்ட மாநாடு - விருதுநகர் வி.வி.ஆர். திறந்து வைக்கிறார். திராவிட நாடு படத்தை அறிஞர் அண்ணா திறந்து வைக்கிறார். அங்கே அண்ணன் வீரமணி, அதே சிறுவனாகவே போய் பேசுகிறார். 

சிறுவன் பருகியது ஞானப்பால் அல்ல - 
பெரியார் புகட்டிய பகுத்தறிவுப் பால்!

பிறகு அண்ணா அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘இங்கே பேசிய சிறுவன் வீரமணி மாத்திரம், கழுத்திலே ருத்திராட்சக் கொட்டையையும், நெற்றியிலே திருநீறையும் பூசி இருந்திருப்பாரேயானால், அவரை இந்தக் கால திருஞானசம்பந்தராகவே ஆக்கியிருப்பார்கள். ஆனால், அவர் பருகியது ஞானப்பால் அல்ல; தந்தை பெரியார் புகட்டிய, பகுத்தறிவுப் பால்'' என்று சொன்னவுடன்,

அதே மேடையில் அமர்ந்திருந்த பெரியார் அவர்கள், குலுங்கி, குலுங்கி சிரித்தவாறு, மகிழ்ந்து கைதட்டினார்.

சிறுவன் வீரமணி அவர்களை அருகில் அழைத்து, ‘‘என்ன படிக்கிறாய்?'' என்று கேட்டார்.

‘‘அய்ந்தாம் வகுப்பு படிக்கிறேன்'' என்று சிறுவன் சொன்னார்.

முதுகில் தட்டிக் கொடுத்து, ‘‘நீ நன்றாகப் படி'' என்று சொன்னார் பெரியார் அவர்கள்.

அதற்கடுத்து, 1945, மே ஒன்றாம் தேதி, திருவாரூரில் தென்மண்டல திராவிடர் மாணவர் மாநாடு. அம்மாநாட் டிற்கு வருகின்றவர்களை வரவேற்பதற்கு, முத்தமிழ் அறி ஞர் கலைஞர் செல்கிறார். வந்த தலைவர்களுக்கெல்லாம் கழுத்திலே மாலை அணிவித்து, வீதி வீதியாக அழைத்து வருகிறார்கள். அதிலே வீரமணிக்கும் கழுத்திலே மாலை யிட்டு அழைத்துக் கொண்டு போகிறார்கள்.

‘‘போர்க்களத்தை நோக்கி'' என்ற தலைப்பில் உரை யாற்றி, அனைவருடைய கைத்தட்டல்களையும் பெறு கிறார் சிறுவன் வீரமணி அவர்கள்.

இன்றைக்குத் தமிழர் தலைவராக உலாவரக்கூடிய அண்ணன் அவர்கள் பல்லாண்டு வாழவேண்டும்

இப்படி படிப்படியாக வளர்ந்து, மாணவராகப் பேசி, பின்னர் கல்லூரி மாணவராகப் பேசி, அண்ணாமலை பல்கலைக் கழக மாணவராக முழங்கி, சட்டக்கல்லூரி மாணவராக முழக்கமிட்டு, இளம் பேச்சாளராக திராவிட இயக்கத்திலே உலவி, பின்னர் திராவிடர் கழகத்தினுடைய பொதுச்செயலாளராகப் பேசி, திராவிடர் கழகத்தினுடைய தலைவராக உரையாற்றி, இன்றைக்குத் தமிழர் தலைவராக உலாவரக்கூடிய அண்ணன் அவர்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்பதோடு, அவருடைய உரையைக் கேட்பதற்காக இங்கே அனைவரும் திரண்டு வந்திருக் கின்றீர்கள்.

அவருடைய உரையில், சாரம் இருக்கும்; கருத்து இருக்கும்; உலக நாடுகளுடைய வரலாற்றுச் செய்திகள் இருக்கும். அப்படிப்பட்ட அண்ணன் வீரமணி அவர்கள், நீட் எதிர்ப்பிற்காக - அவர் செய்த பிரச்சாரத்தின் விளைவாக, ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கின்றது என்பதைப்பற்றி இங்கே குறிப்பிட்டார்கள்.

அப்படிப்பட்ட அண்ணன் வீரமணி அவர்களைப் பாராட்டுவதற்காக நம்முடைய முதலமைச்சர் மானமிகு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி ஸ்டாலின் அவர்கள் வந்திருக்கிறார்கள்.

பல்கலைக் கழகத்தினுடைய துணைவேந்தரை அரசே நியமித்துக் கொள்ளலாம் என்ற சாதனை!

தளபதி ஸ்டாலின் அவர்கள் இங்கே உரையாற்றும் பொழுது, நிச்சயமாக பல்கலைக் கழகத்தினுடைய துணை வேந்தரை அரசே நியமித்துக் கொள்ளலாம் என்ற சாதனையை செய்துவிட்டு இங்கே வந்திருக்கிறார்.

அமைதியான ஆரவாரமில்லாத ஒரு புரட்சி!

அவர், நம்முடைய அண்ணன் வீரமணி அவர் களைப்பற்றி குறிப்பிடுகின்ற நேரத்தில், அவருடைய சாதனைகளை, பெருமைகளைப்பற்றியெல்லாம் பேசக் கூடிய நம்முடைய தளபதி ஸ்டாலின் அவர்கள், பெரியாரைப்பற்றி நினைத்துப் பார்த்து - பெரியார் அவர்கள் மறைந்தபொழுது, நம்முடைய டாக்டர் கலை ஞர் அவர்கள், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கொள்கை நிறைவேறாமலேயே பெரியாரை நாம் அடக்கம் செய்துவிட்டோமே என்று வேதனைப்பட்டாரே - அந்த வேதனையைப் போக்குகின்ற  விதத்தில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியவர்.

பெண்களும் தேவாரம், திருவாசகம் படித்து ஓதுவோ ராகலாம் என்ற புரட்சியை ஏற்படுத்தி, 

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களையெல்லாம் மீண்டும் கொண்டு வந்து அறநிலையத் துறைக்கே சேர்த்து, அமைதியான ஆரவாரமில்லாத ஒரு புரட்சியை செய்திருக்கின்றார்.

இந்தக் கைத்தட்டல் ஒலியைவிட, பலமான கைதட்டல் ஒலி எங்கே கேட்டது தெரியுமா?

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொன்னாரே - இதைக் கேட்டுக் கொண்டிருந்தபொழுது -

I belong to the Dravidian Stock  என்று அண்ணா அவர்கள், நாடாளுமன்றத்தினுடைய கன்னிப் பேச்சுதான் நினைவிற்கு வந்தது.

அப்படிப்பட்ட நம்முடைய முதலமைச்சர் அவர்கள், பெரியாருடைய எண்ணத்தை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அவருடைய அறிவுடைமை நூல்களை யெல்லாம் 21 உலக மொழிகளிலே மொழி பெயர்க்க 5 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறார்.

தந்தை பெரியார் பிறந்த நாள் - சமூகநீதி நாள்!

அடுத்ததாக, பெரியாருடைய பிறந்த நாளை - சமூகநீதி நாளாக அறிவித்தார். அரசு ஊழியர்கள் எல்லாம்  சமூக நீதி உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல்,

அம்பேத்கர் பிறந்த நாள் - சமத்துவ நாள்!

அடுத்து, ஒடுக்கப்பட்ட மக்களுடைய விடிவெள்ளி யாக விண்ணிலே தோன்றினாரே, அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளை, சமத்துவ நாளாக அறி வித்து, அன்றைக்கு அனைவரும் சமத்துவ உறுதிமொ ழியை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அம்பேத்கர் அவர்களுடைய நூல்களை யெல்லாம் தமிழில் மொழி பெயர்த்து நாங்கள் தமிழ்நாட்டு மக்களுக்குத் தருவோம் என்று கூறினார்.

இப்படிப்பட்ட சாதனைகளை செய்துவிட்டு சொன் னார், எங்களுக்கு வாக்களிக்காதவர்களும், நாம் இவர்க ளுக்கு வாக்களிக்காமல் போனோமே என்று வருத்தப்படக் கூடிய சூழ்நிலை உருவாகும் என்று கூறினார்.

மனிதாபிமானச் சிகரம்தான் நம்முடைய முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள்

உலகமே கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்து வருகின்ற அந்தக் காலகட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வாக்குகள் அதிகம் வழங்காத கோவை பகுதியில் இருக்கக்கூடிய இடங்களுக்குச் சென்று, உயிரை துச்சமாக மதித்து, கரோனா கவச உடை அணிந்துகொண்டு, அங்கே மருத்துவமனையில் இருந்த கரோனா நோயாளிகளைப் பார்த்து, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலையும் வழங்கி விட்டு வந்த மனிதாபிமானச் சிகரம்தான் நம்முடைய முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களாவார்கள்.

அந்த உணர்வு இருக்கின்ற காரணத்தினால்தான், பூஞ்சேரியில், அஸ்வினி என்ற நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, மாமல்லபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில், அன்னதானம் வழங்குகின்றபொழுது, அந்தப் பெண்ணுக்குக் அன்னதானம் கொடுக்கப்படவில்லை என்று குரல் எழுப்பியதைக் கேள்விப்பட்டு, அமைச்சரை அழைத்து, இதை விசாரித்துவிட்டு வாருங்கள்; அது உண்மையானால், அதே இடத்தில் விருந்து நடை பெறவேண்டும்; நீங்கள் அந்த விருந்திலே பங் கேற்க வேண்டும் என்று கூறினார்.

பிறகு, நம்முடைய தளபதி அவர்கள், அந்த ஊருக்குச் சென்று, நரிக்குறவர் காலனிக்குச் சென்று, அந்தப் பெண்ணின் வீட்டிற்கே சென்று சந்தித்தார்.

தமிழ்நாட்டு சரித்திரத்தில் சாதனைகள் மட்டுமல்ல, வேறு எவரும் நிகழ்த்திக்காட்டாத நிகழ்வுகள்

அதே போன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி- திருமுல்லைவாயலில் - நரிக்குறவர் வீட்டிற்குச் சென்ற தோடு மட்டுமல்ல, அவர்களுடைய வீட்டிலே உணவு அருந்தினார்; உணவு அருந்திய தோடு மட்டுமல்ல, அந்த உணவை அருகிலிருந்த சிறுமிக்கு ஊட்டிவிட்டார் என்று சொன்னால், இவை யெல்லாம் தமிழ்நாட்டு சரித்திரத்தில் சாதனைகள் மட்டு மல்ல, வேறு எவரும் நிகழ்த்திக்காட்டாத நிகழ்வுகளாகும்.

அப்படிப்பட்ட நம்முடைய தளபதி அவர்கள், நீட் எதிர்ப்பு மட்டுமல்ல - தேசிய கல்விக் கொள்கை என்பது, அனைவரையும் அழிக்கக்கூடியது.

தேசியக் கல்விக் கொள்கையின் மூலமாக,, இனி அனைத்துப் பாடங்களும் இந்தி மொழியில்தான். சமஸ்கிருதம்தான் பண்பாட்டை ஒருமைப்படுத்துகின்ற பண்பாட்டு மொழி என்று அவர்கள் அறிவித்துவிட்டு, இந்தி மொழியில்தான் இனி, எல்லாமே!

பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முதல் - பி.காம்., பி.எஸ்சி., பி.ஏ., டிப்ளமோ, மருத்துவக் கல்வி, சட்டக் கல்வி - அனைத்துக் கல்விகளுக்கும் இனிமேல் நுழைவுத் தேர்வுகளை எழுதித்தான் தீரவேண்டும் என்று சொல்கிறார்கள்.

நம்முடைய முதலமைச்சர் 
அவர்களால்தான் முடியும்!

அனிதா எதற்காக இறந்தார் என்று வருத்தப்பட்டார் களோ, அதுபோன்ற தேர்வுகளை எழுதித்தான் இனிமேல் நம்முடைய மாணவர்கள் மேற்படிப்புகளுக்குச் செல்ல முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார் கள்.

அதனை எதிர்க்கவேண்டும்; அவை தகர்க்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம், சாதனைகளை செய்து கொண் டிருக்கக் கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்களால் தான் செய்ய முடியும்.

எதிர்க்கட்சிகளுடைய ஒன்றிணைப்பிற்காக, எல்லோ ரையும் ஒருங்கிணைக்கின்றார். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன; உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய
முயற்சிகள் வெற்றி பெறவேண்டும்

எனவே, அனைவரையும் ஒன்று திரட்டி, சமூகநீதிக் கான ஓர் அடித்தளத்தை அமைத்து, ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர் களுடைய முயற்சிகள் வெற்றி பெறவேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.

இந்த நேரத்தில், பெரியார் வாழ்த்துகிறார்; அண்ணா வாழ்த்துகிறார்; டாக்டர் கலைஞர் வாழ்த்துகிறார்.

உன்னுடைய கொற்றம் வாழ்க!

உன்னுடைய புகழ் வாழ்க!

உன்னுடைய முயற்சிகள் வெல்க! என்று.

நம்முடைய முதலமைச்சருக்குப் பக்கத்தில் அண்ணன் வீரமணி அவர்கள் இருப்பதினால், நிச்சயமாக அவர் வெற்றி பெறுவார்

அவருக்குப் பக்கத்திலே அண்ணன் வீரமணி அவர் கள் இருப்பதினால், நிச்சயமாக அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையோடு, நானும் உங்களோடு சேர்ந்து வாழ்த்தி, உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறட்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள் உரையாற்றினார்.


No comments:

Post a Comment