சென்னை, ஏப்.22 கடந்த 10 மாதங்களில் தமிழ்நாட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 4,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
தமிழக சட்டசபையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான சட்டமன்ற உறுப் பினர் விவாதம் நேற்று (21.4.2022) நடை பெற்றது. கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆற்றிய உரை வருமாறு:- பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகள் 1098 மற்றும் 14417 ஆகிய உதவி எண்களில் புகார் தர முன்வர வேண்டும் என்றும் புகார் வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
அவர் அளித்த நம்பிக்கையின் காரண மாக, உதவி எண்களுக்கு வரும் அழைப்பு களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் நடந்த குற்றச் செயல்களுக்கு கூட தற்போது தாமாக முன்வந்து புகார் தெரிவிக்கின்றனர்.
உதாரணத்திற்கு, 2018ஆம் ஆண்டு முதல் 2021 மார்ச் வரை மகளிர் உதவி எண் 181-க்கு வந்த மொத்த அழைப்புகள் 17 ஆயிரத்து 423 ஆகும். ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் 15 ஆயிரத்து 46 அழைப்புகள் வரப்பெற்றுள்ளன.
போக்சோ சட்டம்
பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மய்யங்களில் 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் வரை பயன் பெற்றவர்கள் மொத்தம் 13 ஆயிரத்து 121 பேர்தான். ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த ஓராண்டு காலத்தில் 13 ஆயிரத்து 152 பேர் பயனடைந்து உள்ளனர்.
கடந்த ஆண்டு மே முதல் கடந்த மார்ச் மாதம் வரை 10 மாதங்களில் போக்சோ (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு) சட்டத்தின் கீழ் 4,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 36 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
சத்துணவுத் திட்டத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு
சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இருந்த 42 லட்சத்து 13 ஆயிரத்து 617-லிருந்து, 46 லட்சத்து 70 ஆயிரத்து 458 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த 10 ஆயிரத்து 663 குழந்தைகளுக்கு ரூ.326.65 கோடி இதுவரை வழங்கப்பட்டு உள்ளது. இலங் கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 6 குழந்தை களுக்கு ரூ.18 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 28 அரசு பெண் பணியாளர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. திருச்சி, கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் 3 விடுதிகள் கட்டப்படுகின்றன.
திருநங்கையருக்கு வாழ்வாதாரம்
திருநங்கையர் சொந்த தொழில் தொடங்க தலா ரூ.50 ஆயிரம் வீதம் மானியமாக 141 திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நவீன ரக தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு முகாம் நடத்தி 3.36 லட்சம் பேருக்கு கரோனா நோய்த் தடுப்பூசி செலுத்தப் பட்டது. தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் மூலம் இதுவரை 533 மாற்றுத் திறனாளி களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் துண்டல் கழனி கிராமத்தில் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் கட்டுவதற்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான சாத்திய கூறாய்வு மேற்கொள்ளப்படும்.
வாழ்வியல் வழிகாட்டு மய்யங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந் தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்திற் கான புதிய கட்டடம் ரூ.15.95 கோடியில் கட்டப்படும். சென்னை மாவட்டத்தில் கூடுதலாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஒன்று ரூ.68.53 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மாற்று கருவறை தாய் மூலம், குழந்தைகள் பெற்று பராமரிக்கும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் குழந்தைகள் இல் லங்கள் அதிகளவில் உள்ள சென்னை, தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், மதுரை, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் வாழ்வியல் வழிகாட்டு மய்யங்கள் ரூ.48.24 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment