‘கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 26, 2022

‘கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்’

‘வரும் ஜூன் 3 அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும்’

 முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிப்பு

சென்னை,ஏப்.26- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்  பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்’ என்றும், ‘வரும் ஜூன் 3 அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும்’ என்றும் இன்று (26.4.2022) தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவித்தார்.

அதன் விவரம் வருமாறு,

பேரவைத் தலைவர் அவர்களே, 

110 விதியின்கீழ் தங்களின் அனுமதியோடு ஓர் அறிக் கையினை இந்த அவைமுன் வைக்க விரும்புகிறேன்.

 பேரவைத் தலைவர் அவர்களே, ''தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்; கவிழ்ந்து விடமாட்டேன்!   

தமிழர்களே! தமிழர்களே! என்னை நீங்கள் நெருப் பில் தூக்கிப் போட்டாலும், அதிலே நான் விறகாகத்தான் வீழ்வேன்; அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப் பிடலாம்!  

தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைப் பாறையில் மோதினாலும், சிதறுத் தேங்காயாகத்தான் உடைவேன்! நீங்கள் என்னை எடுத்துத் தின்று மகிழலாம்!" என்ற வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல; தன்னுடைய வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து காட்டியவர்தான் முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர்,  அஞ்சுகச் செல்வர்; நம்மையெல்லாம் ஆளாக்கி விட்டு விட்டு, வங்கக் கடலோரம், தன் அன்பு அண்ணன் அருகே வாஞ்சைமிகு தென்றலின் தாலாட் டில் இருந்தபடி தமிழ்ச் சமுதாயத்தின் மகிழ்ச்சியைக் கண்ணுற்று வரும் கலைஞர் .  

எல்லாம் வென்ற தலைவர்

நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால், அவர் ஒருவர்தான்.  1957 முதல் 2016 வரை நடந்த தேர்தல்களில் எல்லாம் வென்றவர் அவர் மட்டும்தான். 1957-இல் குளித்தலை; 

1962-இல் தஞ்சாவூர்; 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் சைதாப்பேட்டை; 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் அண்ணா நகர்; 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் துறைமுகம்; 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் சேப்பாக்கம்; 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார். 

13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, 60 ஆண்டுகள் இந்த மாமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். 

1984 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பின ராக இருந்தார்கள். தமிழ்நாட்டை அய்ந்து முறை ஆண்டவர் தலைவர் கலைஞர்.   10-2-1969 அன்று முதன்முறையாக; 15-3-1971 அன்று இரண்டாவது முறையாக; 27-1-1989 அன்று மூன்றாவது முறையாக; 13-5-1996 அன்று நான்காவது முறையாக; 13-5-2006 அன்று அய்ந்தாவது முறையாக என அய்ந்து முறை இந்த நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.  

அன்னை தமிழ்மொழிக்கு 
செம்மொழித் தகுதி!

அய்ந்து முறை ஆட்சியில் இருந்த காலத்தில் முதலமைச்சர் கலைஞர் உருவாக்கியதுதான் இன்று நாம் கண்ணுக்கு முன்னால் பார்க்கக்கூடிய நவீன தமிழகம்.  அன்னைத் தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி! ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு உயர்வு! அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம்! மகளிருக்கும் சொத்திலே பங்குண்டு என்ற சட்டம்!  பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான சமூகநீதி உரிமைகள்! உழவர் களுக்கு இலவச மின்சாரம்!  கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி! சென்னை தரமணியில் டைடல் பார்க்!  சென்னைக்கு மெட்ரோ இரயில் திட்டம்!  சிப்காட், சிட்கோ தொழில் வளாகங்கள் உருவாக்கம்!  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கியது!  நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள்!  

தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்!

அவசர ஆம்புலன்ஸ் 108 சேவை அறிமுகம்!  இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!   மினி பேருந் துகளை கொண்டு வந்தது!  உழவர் சந்தைகள் அமைத் தது!  கைம்பெண் மறுமண நிதி உதவி, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி ஆகிய திட்டங்கள்! அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு!  பெண்களுக்காக 33 விழுக்காடு இடஒதுக்கீடு!  இலவச எரிவாயு இணைப்புடன்கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்குதல்!  மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல்! அனைவரும் இணைந்து வாழ தந்தைப் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்!  இஸ் லாமிய சமூகத்தினருக்கு 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது! உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத் தப்பட்டோர் பட்டியலிலே இணைத்தது!    நுழைவுத் தேர்வு இரத்து!   மாணவர்களுக்கு இலவச பேருந்து அனுமதி அட்டை வழங்கியது!  சேலம் உருக்காலை, சேலம் புதிய இரயில்வே மண்டலம், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கக்கூடிய திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகம் ஆகியவை உருவாக்கம்! மாற்றுத்திறனாளிகள், திரு நங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு வழங்குதல்!  ஏராளமான பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல் லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள் உருவாக்கியது!

அடையாளங்களை உருவாக்கியவர்

இப்படி நான் சொல்லத் தொடங்கினால் இன்று முழுவதும் என்னால் சொல்லிக் கொண்டேயிருக்க முடியும்.  இவைதான் தமிழகத்தின் அடையாளங்கள் என்றால், அந்த அடையாளங்களை எல்லாம் உருவாக் கியவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.   

தலைவர்களோடு தலைவர்களாக வாழ்ந்த தலைவர்தான் கலைஞர் !  தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத், பாவேந்தர் பாரதிதாசன், பெரியவர் பக்தவத்சலம், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கவியரசு கண்ணதாசன், திருமுருக கிருபானந்த வாரியார், தவத்திரு குன்றக்குடி அடிகளார். 

இந்திய அரசியலுக்கே வழிகாட்டியாக...

தமிழகத்தில் மட்டுமல்ல; பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கே வழிகாட்டியாக இருந்தவர் தலைவர் கலைஞர் .   இந்தியாவின் குடியரசுத் தலைவர் களாக இருந்த நீலம் சஞ்சீவிரெட்டி, கியானி ஜெயில்சிங், வி.வி.கிரி, சங்கர் தயாள் சர்மா, ஆர். வெங்கட்ராமன், கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், பிரதிபா பாட்டீல் ஆகியோரால் பாராட்டப்பட்டவர் தலைவர் கலைஞர் . இந்தியாவின் தலைமை அமைச்சர்களாக இருந்த அம்மையார் இந்திராகாந்தி, சரண்சிங், வி.பி.சிங், தேவகவுடா, அய்.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரால் போற்றப்பட்டவர் தலைவர் கலைஞர் .  நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத தலைவர் கலைஞருடைய மறைவிற்குத்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டன.   இப்படி எல்லைகளைத் தாண்டி எல்லோரையும் வசப்படுத்தியவர் தலைவர் கலைஞர் . 

எல்லாவற்றிலும் 
முதல்வராக வாழ்ந்த முதல்வர்

படைப்பாளிகளோடு போட்டியிடும் படைப்பாளி; கவிஞர்களில் தலைசிறந்த கவிச்சக்கரவர்த்தி; திரை யுலகத்தினரில் மூத்த கலையுலகவாதி; அரசியல் உலகில் தலைசிறந்த அரசியல் ஆளுமை; நிருவாகத் திறனில் நுணுக்கமான திறமைசாலி; மேடை ஏறினால் வெல்லும் சொல்லுக்கு அவர்தான் சொந்தக்காரர்; அவையில் ஏறினால் அவர்தான் வெற்றிச் சூத்திரம் அறிந்தவர் என எல்லாவற்றிலும் முதலமைச்சராக வாழ்ந்த முதல்வர் அவர்.  

அரசு தனது வரலாற்றுக் கடமையை....

'என்னிடம் இருந்து செங்கோலைப் பறிக்கலாம்; எழுதுகோலைப் பறிக்க முடியாது' என்று அவர் சொல்லிக் கொண்டார்.  செங்கோல் பறிக்கப்பட்டாலும், செங்கோலை வழிநடத்தும் எழுதுகோலை அவர்தான் வைத்திருந்தார்.  அரசு என்பது பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும், அவரிடம்தான் இருந்தது.  அரசும் அரசியலும் அவரை இயக்கின.  அரசையும், அரசிய லையும் அவரே இயக்கினார்.  இத்தகைய அரசு இயலின், அரசியலின் மாபெரும் தலைவருக்கு இந்த அரசு தனது வரலாற்றுக் கடமையைச் செய்ய நினைக்கிறது.

அரசு விழாவாகக் கொண்டாடப்படும்

திருவாரூரில் முத்துவேலர்-அஞ்சுகம் அம்மை யாருக்கு மகனாக கலைஞர்  பிறந்துதித்த நாளான ஜூன் 3 ஆம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என்பதை (மேசையைத் தட்டும் பலத்த ஒலி) இம்மாமன் றத்தில் நெஞ்சில் விம்மக்கூடிய மகிழ்ச்சியால், இதயத்தில் துடிக்கக்கூடிய எழுச்சியால், சிந்தை அணுக்களில் வெளிப்படும் நன்றி உணர்வால் நான் இதை இந்த அவைக்கு அறிவிக்கிறேன்.

வரும் ஜூன் 3 அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும் என்பதையும் அறிவிப் பதில் பெருமைப்படுகிறேன்.  

'நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும்" என்று அடிக்கடிச் சொல்வார் தலைவர் கலை ஞர். நீண்ட தூரம் இந்த தமிழினத்துக்காக ஓடியவர் கலைஞர்.  அவரை அதிக உயரத்தில் உயர்த்திப் பார்ப் பதைத் தனது கடமையாகக் கருதுகிறது தமிழ்நாடு அரசு.  

நன்றி!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப் பிட்டார்.


No comments:

Post a Comment