06.03.2022 ஞாயிறு காலை 11 மணிக்கு மாநில பகுத்தறிவாளர் கழக இணைய வழி கருத்தரங்கம்- 38 நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் வேண்மாள் நன்னன் தலைமை ஏற்றார்.
வருகை புரிந்தோரை பகுத்தறிவு பயிற்சித் தேர்வில் இரண்டாமிடம் பெற்ற திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி மு.ம.யாழினி வரவேற்று உரையாற்றினார்.
நிகழ்வில் திருவாரூர் திருவிக அரசு கல்லூரி விரிவுரையாளர்
முனைவர். சீ.அகிலா தொடக்க உரையாற்றினார்கள்
அவர் தனது தொடக்க உரையில்:-
தாயுமானவரின் தாயுமானவர் அன்னை மணியம்மையார் என்பது தான் மிகப் பொருத்தமான ஆகச்சிறந்த உண்மை. பெண்ணுரிமை பேசுகின்றோம். உலகம் முழுக்க மகளிர் தினத்தை விமர்சையாக கொண்டாடுகின்றோம். கொண்டாட்டம் ஆக்கியவர்கள் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மை யாரும். ஆனால் உள்ளபடியே தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் பெண்களுக்காக நடத்திய போராட்டங்களை நினைக்கும் போது வெறுமனே கொண்டாட்டம் ஆக்குவதை விட சமூகநீதிக்கான நாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு பெண் தனக்கான தேவைகளை, தனக்கு உரிமை உடையவைகளை, தடையின்றி எவ்வித கட்டுப்பாடோ, நிபந்தனைகளோ இன்றி பெறுவது பெண்ணுக்கான பிறப்புரிமை. அதுதான் சமூகநீதி என்று உணர்த்திய சமூகப் போராளிகள். ஆனால் அப்படிப் போராடிய பெண், தான் தனக்கான தேவையை இழந்து, தன் இளமைக்குரிய தனிப்பட்ட விருப்பங்கள், இன்பங்கள் என்று அத்தனையையும் தியாகம் செய்து, பெண் விடுதலையை முன்னிறுத்தினார்.
அவர் தான் அன்னை மணியம்மையார்
வரலாற்றில் அன்னை மணியம்மையாரை ஒருபோதும் தந்தை பெரியாரின் மனைவி என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கிவிட முடியாது . அப்படி மட்டுமே அடையாளப்படுத்துவது வரலாற்றுப்பிழையும் கூட. இந்த மண்ணில் சமூக சீர்திருத்தங் களைப் பேசியவர்கள் பலர் இருக்கலாம் .எத்தனை பேர் பேசியிருந்தாலும் அத்தனை பேரும் மதவாதிகள் ஆகக் காட்டப்பட்டு இறுதியில் ஆன்மீகம் எனும் அமிலத்தில் கரைந்து அவர்கள் பேசிய சீர்திருத்தங்கள் இருந்த இடம் தெரியாமல் நிலைகொள்ள முடியாமல் போய் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டு வரலாற்றில் தந்தை பெரியார் போல ஒருவரும் இல்லை. அப்படி தீவிரமாக பெண் விடுதலையை முன்வைத்த ஒருவருக்காக , அவர் பேசும் பெண் விடுதலை இந்த மண்ணில் நலமுடன் நீண்டு ஒலிக்கச் செய்யவும், ஒரு பெண் தன்னை இழந்தார் என்றால் அவர்தான் மணியம்மையார் . அவரைப் பொறுத்தவரை ஆகச்சிறந்த பெண்ணுரிமையும் அதுதான்.
நமக்கெல்லாம் தாயாக யோசித்த அய்யா பெரியாருக்கு அவர் மனையாள் என்பதை காட்டிலும் அய்யாவின் 96 வயது வரை அவரை தாயாக தொண்டாற்றி பேணிக்காத்த பெரும் தாய்!
பெரியார் காலத்திலும், பெரியாருக்குப் பிறகும் உலகை விட்டு மறையும் வரை போராடியபடியும் சிறை சென்றபடியும் வாழ்ந்து மறைந்த களப்போராளி புரட்சிப் பெண்மணி அன்னை மணியம்மையாருக்கு ஒவ்வொரு மகளிர் தின விழாவிலும் மகுடம் சூட்டுவோம் என தொடக்க உரை நிகழ்த்தினார்.
தாயுமானவரின் தாயுமானவர்
தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத்தலைவர் ம. கவிதா ‘தாயுமானவரின் தாயுமானவர்’ என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில்,
‘அறிவாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும் அதை பகிர்ந்து கொள்வதில் தான் மெய்யான இன்பம் உள்ளது’ என்ற தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைக்கு முதல் வணக்கம் தெரிவிக்கின்றேன்.
உலகமெங்கும் இருக்கும் மகளிர் தம் உரிமைகளுக்காக போர்க்கொடி தூக்கியதன் விளைவாக ஏற்பட்ட இந்த மகளிர் நாளிலே, இங்கே தந்தை பெரியாருக்குப் பின்னால் அன்னை மணியம்மையாருக்குப் பின்னால் ‘நாங்கள் எங்கள் உரிமைகள் இன்னதென்று உணர்ந்திருக்கின்றோம் . அந்த உரிமைகளுக் காகப் போராடத் தொடங்கி விட்டோம். அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டு வருகிறோம்‘ என்பதன் அடையாளமாக முழுக்க முழுக்க பெண்களே பங்குபெறும் இந்த நிகழ்வில் ஒரு நாத்திக இயக்கத்திற்கு தலைமை ஏற்கக்கூடிய பெண் ஆற்றலாளராக விளங்கிய ஒருவர் தான் நம் அன்னை மணியம்மையார் என்று இந்த உலகத்திற்கு உச்சி மீது நின்று உரக்க பெருமையுடன் நாம் கூறக் கடவோம்.
தாயுமானவரின் தாயுமானவர்!
இங்கு யார் தாயுமானவர்?!
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை ஏட்டில் வைத்தார் வள்ளுவர்
செயல்பாட்டில் வைத்தார் பெரியார்!
பிறவி பேதம் எனும் போது ஜாதி ஒழியட்டும் என்று கூட முற்போக்காளர்கள்
மூன்றாறு பேர் முளைத்திருக்கக் கூடும் வரலாற்றில் என்றாலும், சமூகத்தில் சரி பாதியாக இருக்கும் மகளிர் உரிமை பேச நாதியற்றே கிடந்தது இந்தநாடு.
‘பிறப்பொக்கும்’ என்று சொன்ன வள்ளுவரே கூட பெண் எனும் போது
சற்று சறுக்கத் தான் செய்தார்.
படிக்கக் கூடாது, படி தாண்டக்கூடாது, பேசக்கூடாது, சிரிக்கக் கூடாது இன்னொரு ஆணை ஏறெடுத்துப் பார்க்கக் கூடாது, சிந்திக்கக் கூடாது என்று அமிழ்த்து வைக்கப்பட்டிருந்த பெண்ணினத்திற்கு போராடி உரிமைகளை பெற்றுத் தந்தவர் பெரியார்.
பெற்ற தாய் கூட அழுத பிள்ளைக்குத் தான் பால் ஊட்டுவார். ஆனால் தனக்காக அழக் கூட தெரியாத பெண்ணினத்திற்கு உரிமைப் பால் ஊட்டிய தாயுமானவர் பெரியார். அந்த தாயு மானவர் தன் எண்பத்து நான்காம் வயதிற்கு மேல் சொல்கிறார் கேளுங்கள்...
“இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கின்றது என்றால், இந்த அம்மாவால் தான் என்பது யாருக்குத் தெரியாது? அவர் இயக்கத் தொண்டிற்கென்று என்னிடம் வந்து தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் எப்படியோ என் தொண்டுக்கு தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன். மணியம்மையாரின் கவனிப்பும் உதவியும் அளவிடற்கரியது” என்று சொல்கிறார் என்றால் அம்மாவின் தொண்டு எத்தகைய சிறப்புமிக்க ஒன்றாக இருக்க வேண்டும்!
தாயுமான பெரியாருக்கே
தாயான அம்மா சொல்கிறார்
“எனக்கு வினா தெரிந்த காலத்திலிருந்தே- அதாவது புத்தி தெரிந்த நாளிலிருந்தே அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதே பைத்தியமாகி பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு என் தந்தை இறந்த சில நாள்களுக்குள்ளாகவே அய்யாவிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன். அவர் தொண்டுக்கு முழுக்க முழுக்க என்னை ஆளாக்கி அவர் நலத்தை கண்ணென பாதுகாக்கும் ஒரு தாயாக என்னை பாவித்துக் கொண்டு, அவரை சிறு குழந்தையாகவே என் மனதில் இருத்தி அக்குழந்தைக்கு ஊறு நேரா வண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கண்டேன். அவரும் ஒரு நாளும் என்னை பெயரிட்டு அழைக்காமல் உயிர் பிரியும் வரையிலும் ‘ அம்மா, அம்மா’ என்று ஆயிரம் அம்மாக்களை தினமும் அழைத்த வண்ணமே இருப்பார்!” என்கிறார் என்றால், தாயுமானவரின் தாயுமானவர் மணியம்மையார் என்பது சொற்கள் அல்ல........ அவை ஆழமான பொருள் பொதிந்த தொண்டறத்தில் திளைத்த வரலாற்றுக் காவியம்.
தேவைகளின் பரிமாற்றமே உறவு என்பார்கள். இதோ இவர்கள் உறவு என்பது தொண்டால் ஈர்த்த துறவற உறவு.
1972 செப்டம்பர் 17 ஈரோட்டிலே தந்தை பெரியாரின் சிலை திறப்பு நிகழ்வு வெகு சிறப்பாக நடந்தேறியது. கரைபுரண்டு ஓடிய அந்த மகிழ்ச்சியை அடுத்து அன்று இரவு பதினொரு மணி அளவில் முதன்முதலாக மணியம்மையாருக்கு இருதய வலி ஏற்பட்டு படாதபாடுபட்டு துடித்த நிலையில், அதை விட அதிகமான தந்தை பெரியாரின் துடிப்பைக் கண்டு “நீங்கள் பயந்து விட்டீர்களாமே நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விட மாட்டேன், எத்தனையோ ஏளனப் பேச்சுகளையும் தூற்றுதல் களையும் கேட்டுத் தாங்கிய இந்த உள்ளம், இந்த மகிழ்ச்சியை தாங்காமல் போய்விட்டது. அவ்வளவு தான் வேறு இல்லை என்று ஆறுதல் கூற,
ஒரு பெண் ஆளுமையாகவே...
பெரியாரோ, “இயற்கையை வெல்வது கடினம் தான். உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் என் எண்ணம் வீணாயிற்றே! பல பேரின் வீண் பழிக்கும் - பொல்லாப்புக்கும் ஆளாகி எந்த காரணத்திற்காக, என்ன நோக்கத்திற்காக இந்த ஏற்பாடுகள் செய்தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய் விடுவாயோ என்று தான் கலங்கினேன்!” என்று கூறி கண்ணீர் உதிர்த்தார் என்றால், தந்தைபெரியார் தமக்கு உதவிய ஒரு பெண்ணாக அவரைப் பார்க்கவில்லை தமக்குப் பின்னால் இயக்கத்தையே கட்டிக்காக்கும் ஒரு பெண் ஆளுமையாகவே பார்க்கிறார்.
நீ இல்லாவிட்டால் என்னை யார் கவனிப்பது என்று ஒரு சாதாரண ஆள் போல வருத்தப்படவில்லை பெரியார்! தனக்குப் பின்னாலும் தன் கொள்கைகள் தொடரவேண்டும் என்றே வருத்தப்படுகிறார்.
இந்தச் சொற்களின் உண்மைத் தன்மையை அன்னையார் உணர்ந்ததால் தான் “புத்தன், இராவணன், இரணியன் போன்றோரை வீழ்த்தி விட்டோம். இந்த ராமசாமி பெரியாரை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று ஏக்கமிட்ட ஆரியம் இன்றைக்கு பெரியார் மறைந்தார் என்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம். அந்த நிம்மதியைக் குலைப்பது தான் நம் முதல் வேலை என்கிறார்.
நாம் வெற்றி கண்டோம்!
நம்மை ஒழிக்க முற்பட்டவர்கள் தோல்வி கண்டார்கள் நாம் வெற்றி கண்டோம் என்ற நிலை உருவாகும் வகையில் நம் காரியங்கள் அமய்ய வேண்டும் என்கிறார்.
பெரியாரே தேவலாம் என்று அவர்கள் நினைக்க வேண்டும் என்று தந்தை பெரியாரின் மறைவுக்குப் பின்னால் சூளுரைத்து பணி தொடர்கின்றார்!
வரலாற்றில் எத்தனையோ புகழ்பெற்ற கடிதங்கள் உண்டு.
ஆப்ரகாம் லிங்கன் தன் மகனுக்கு எழுதியது,
நேரு தன் மகளுக்கு எழுதியது என்று...
இதோ இந்த புகழ்பெற்ற உரையாடலை பாருங்கள்!
அய்யா அவர்கள் பேசி முடித்து வந்ததும் அன்போடு கேட்பார்களாம், நான் பேசியதைக் கேட்டாயா? எப்படி இருந்தது? எங்கிருந்து கேட்டாய்? என்பதோடு உனக்கு என்ன குறை என்று கேட்பாராம்.
பெரியாரின் நூற்றாண்டு விழாவை...
“நான் மேடைக்கு சென்றது கிடையாது. அது எனக்கு தேவையும் இல்லை; அது எனக்கு விருப்பமும் இல்லை. எனக்கென்று தனிப்பட்ட கவலை வேறு கிடையாது. உங்களை எப்படியும் நூறாண்டு வாழ வைத்துவிட வேண்டும் என்றுதான் சொல்வேன்” என்று சொன்ன மணியம்மையார் அவர்கள் கடைசியாக தான் மறை வதற்கு முன்பு மருத்துவமனையில் கலைஞரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதும் எப்படியாவது பெரியாரின் நூற்றாண்டு விழாவையாவது கண்டுவிட வேண்டும் என்று சொன்னார் என்றால் , இதோ இவர்கள் ஒருவரை ஒருவர் வாழட்டும் என்று நினைத்தது இந்த இனம் வாழட்டும் என்பதற் காகத் தான் . இவர்களின் உறவு என்பது சாதாரண ஆண் - பெண் உறவு அன்று. அது தொண்டறத்தால் கட்டுவிக்கப்பட்டது என்று நினைக்கும்பொழுது காதலுக்காக, வீரத்திற்காக ஆயிரம் ஆயிரம் புத்தகப் பூக்கள்- பாக்கள் இந்த தமிழ்ச் சோலையிலே மலர்ந்து மணம் வீசும் போது இந்த தொண்டற வாழ்வையும் காப்பியமாக நாம் படைத்து தமிழ்கூறும் நல்லுலகின் பெருமையாக போற்ற வேண்டும்.
மக்களுக்கே விட்டு சென்றார்
தந்தை பெரியார் அவர்கள் செல்வந்தராக பிறந்தாலும் மிக எளிய உடைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு சாலை யோரங்களில் உணவு உண்டு எளிமையான வாழ்விற்கு தன்னை பழகிக்கொண்டு ( ஊருக்கு உழைப்பதற்காக மொத்தமும் ஒதுக்கி ஒழுங்குபடுத்தவும் நேரமின்றி தானாக வளர்ந்து விட்டது தான் அவர் தாடியும் ) தன்னுடைய சொத்துகள் அத்தனையையும் இந்த மக்களுக்கே விட்டு சென்றார். அதே வழியில் தான் தந்தை பெரியார் தனக்காக என்று வைத்த சொத்துகளையும் தன் பூர்வீக சொத்துகளையும் இயக்கத்திற்கே விட்டு சென்றார் அன்னை யாரும்.
அது பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகமாகி செயல்படுகிறது.
தனக்குத் தெரியாமல் இந்த ஏற்பாடு அவர் செய்தபோது “இந்த சொத்திற்காகத் தான் நான் உங்களிடம் வந்தேனா?” என்று கண்களைக் கசக்கியவர் மணியம்மையார்.
தாயற்ற என் போன்றோருக்கு தாயாக இருந்தவர் அன்னை மணியம்மையார் என்று சொன்ன தமிழர் தலைவர் ஆசிரியரை அழைத்து உரிமையோடு நீ கூட எனக்கு சொல்லவில்லையே என்று கடிந்துகொண்டார் என்றால் பற்றற்ற தந்தை பெரியாரைப் பற்றிய அவரின் தொண்டுள்ளம் எத்தகையது என்பதை உணர முடிகின்றது.
அய்யா - அண்ணா நினைவகம்
அன்னை மணியம்மையாருக்கு தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்து தான் ஈரோட்டிலே அவர் வாழ்ந்த இல்லம். அதை நினைவிடமாக மாற்றுவதற்கு கலைஞர் கேட்ட மாத் திரத்தில் மகிழ்ச்சியோடு சம்மதித்து அதற்காக அரசு வழங்கும் உரிமைத் தொகையைக் கூட வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்தது மட்டுமல்லாமல், அண்ணாவும் அந்த வீட்டின் பின் பகுதியில் இருந்து பணியாற்றிய காரணத்தால் ‘அய்யா- அண்ணா நினைவகம்‘ என்று பெயர் சூட்டுங்களென்று பெருந் தன்மையோடு அன்னையார் சொன்னது கண்டு கலைஞர் உள்ளிட்ட அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
1949 இல் பெரியார்-மணியம்மையார் திருமண ஏற்பாடு இயக்கத்தின் எதிர்காலத்திற்காக செய்யப்பட்ட நேரத்திலே கருத்து மாறுபட்டு பிரிந்துசென்ற அண்ணா அவர்களின் பெயரை சூட்டுங்கள் என்று சொல்லும் அன்னையாரின் பெருந்தன்மை எத்தகையது என்பதை ஆசிரியர் அவர்கள் மிக அழகாக பதிவு செய்திருப்பார்கள், ‘சக்கரம் ஒரு சுற்று சுற்றி மீண்டும் பழைய இடத்திற்கே வந்திருக்கிறது’ என்று.
இருபுறமும் வெற்றி என்று!
திருச்சியிலே நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திலே தாய் தந்தை இல்லாத மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தை களை அழைத்து வந்து வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு ஈ.வெ.ரா.ம என்ற தலைப்பெழுத்து (Initial) கொடுத்து அவர்கள் அனாதைகள் அல்ல என்ற உணர்வை உண்டாக்கி, எதிர் காலத்தில் கட்டியவன் கைவிட்டாலும் கைத்தொழில் வேண்டும் என்று பயிற்றுவித்து அவர்களுக்கு திருமண ஏற்பாட்டையும் செய்து வைத்தவர் அன்னை மணியம்மையார்.
அப்படி அங்கு வளர்ந்து அதே விடுதியில் காப்பாளராக பெரியார் நூற்றாண்டு கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப் பாளராக உயர்ந்தவர் தான் தங்காத்தாள் அவர்கள் என்பது மிகப் பெரிய சிறப்பு அல்லவோ!
சென்னையில் பெரியார் திடலுள்ள இடத்தை நம் எதிர்காலத்திற்கென்று இருக்கட்டுமென்று பெரியாரிடம் சொல்லி அதை தக்க வைத்து, அங்கு ஏழு மாடி கட்டடமும் திறந்து வைத்து இன்று உலக நாத்திகத்தின் தலைமையிடமாக மாற்றியிருக்கிறார் என்றால் இத்தகைய தொலைநோக்குக்குரிய ஒருவரை கண்டறிந்த பெரியாரின் தொலை நோக்கை நாம் உணர முடிகின்றது.
தாயுமானவரின் தாயுமான அன்னையாரின் ஒரு பகுதி தொண்டு என்றால் அவருடைய மறுபகுதி துணிவால் நிறைந்தது. இந்த இரண்டும் இணைந்த உருவமே அன்னை மணியம்மையார் என்பது.
வெள்ளி வாளை கலைஞர் வழங்கியபோது
தென்னாற்காடு மாவட்டத் தோழர்கள் வெள்ளி வாளை கலைஞர் கையால் அன்னை மணியம்மையாருக்கு வழங்கிய போது அவரை ஒரு வீரமுள்ள புறநானூற்றுத் தாயாகவே சித்தரிக்கிறார் கலைஞர்!
இயல்பாகவே அவரிடமிருந்த எதிர்நீச்சல் பண்பும் போராட் டக் குணமும் தந்தை பெரியாரின் மறைவுக்குப் பின் இயக்கத்தை கட்டிக்காத்து கொள்கைகளை உயர்த்திப் பிடித்த துணிவும் இந்த உலகம் பெரிதும் கண்டது. அதற்கான மிகப்பெரிய சான்று தான் அவர் நடத்தி முடித்த இராவண லீலா!
1922இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் இராமாயணத்தையும் மனு தர்மத்தையும் கொளுத்த வேண்டும் என்று பேசுகிறார். இராமாயண எதிர்ப்பு உணர்ச்சி அவரிடம் அப்போதிருந்தே தொடர்ந்து இருந்து வருகிறது. 1956 இல் ராமன் படத்தை தமிழ்நாடெங்கும் முன்னின்று எரிக்கிறார். மீண்டும் ஒரு முறை 1966 இல் இராமாயணத்தை கொளுத்துகிறார்.
கைக்குறிப்பேட்டிலும்
ஒரு பொய்யான கதையை சொல்லி இழிவுபடுத்தும் விதமாக டில்லியிலே ராம்லீலா மைதானத்தில் ராவணன் , கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவப் படங்களை எரித்து மகிழும் அந்த விழாவில் இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ள குடியரசு தலைவர் , பிரதமர் ஆகியோர் கலந்துகொண்டு நம்மை அவமானப்படுத்த அவர்களுக்கு உரிமை உள்ளபோது அவர்களுக்கு புத்தி புகட்டும்படி நாம் ஏன் ராவண லீலா செய்யக்கூடாது என்று தந்தை பெரியார் கேட்கிறார்.
(தான் மறைவதற்கு முன்பு ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகள்- திட்டங்கள் குறித்து எழுதிவைத்த கைக்குறிப்பேட்டிலும் இதைக் குறித்து வைத்திருக்கிறார்.)
அத்தகைய பெரியாரின் தணியாத ஆவலை, ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து துணிச்சலோடு காரியமாற்றி ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் உருவங்களுக்கு தீ வைத்து பணி முடிக்கிறார் அன்னை மணியம்மையார்.
அதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஏறுமாறாக செய்யாமல் முறைப்படி குடியரசுத் தலைவருக்கும், இந்திரா காந்தி அம்மையாருக்கும் இந்த ராமலீலாவை தடை செய்ய வேண்டும், மதசார்பற்ற நாட்டில் இத்தகைய நிகழ்வுகளுக்கு நீங்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கடிதம் எழுதுகிறார்.
எரிமலை போல் கொந்தளித்து
அவர்களிடமிருந்து சாதகமான பதில் ஏதும் வராதது மட்டுமன்றி ராமாயணம் உலக காவியம் . இதில் இனப் பிரச்சினை ஏதுமில்லை. ராமலீலா எதிர்ப்பு எண்ணத்தை கைவிடுங்கள் என்ற பதில் வந்தபோது, நம் உணர்வுகளுக்கு வடவர்கள் மதிப்பு தரவில்லை என்று எரிமலை போல் கொந்தளித்து, “தந்தை பெரியார் நினைவு நாளில் கூடுங்கள் தோழர்களே!” என அழைப்பு விடுக்கிறார் அன்னையார். மிகுந்த தன்மான உணர்ச்சி வேட்கையுடன் நடந்து முடிந்த ராவண லீலா என்பது இயக்க வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று என்று எடுத்துக் காட்டுகின்றார் ஆசிரியர் அவர்கள்.
அன்னையார் அவர்கள் காலத்தில் தான் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் தொடங்கப்பட்டு, இன்று நூற்றுக்கணக்கான ஜாதி மறுப்பு இணை ஏற்புகள் ஓசையில் லாமல் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன.
தமக்குப் பின்னாலும் ஒரு நல்ல தலைவரை நம்முடைய தமிழர் தலைவரை அடையாளம் காட்டிவிட்டு சென்றவர் நம் அன்னையார் அவர்கள்.
பெண்களோடு பெண்களாக...
தலைவர் என்ற நிலையிலும் திருச்சியிலிருந்து தன்னந் தனியாக ரயிலில் பெண்களோடு பெண்களாக மிகச்சாதாரண பெட்டியில் கையில் ஒரு மாற்றுடை மட்டும் வைத்துக்கொண்டு பயணப்பட்டு திடலிலுக்கு வந்து சேருவார் என்றால் அன்னை யாருடைய எளிமை என்பது நாம் கைக்கொள்ள வேண்டிய ஒன்று.
இப்படிப்பட்ட ஒருவரை, அன்னை என்று புகழாமல் வேறு என்னவென்று புகழ்வது என்கிறார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.
இளமையை மதவாதிகள் கூட துறக்க முடியும் என்று எவரேனும் சொன்னாலும் அவர்களுக்குக் கூட மறுபிறவியில் கடவுள் அருள் கிட்டும் என்ற நினைப்பு இருக்கும் .ஆனால் இந்த இனம் வாழ தன் வாழ்வை ஒப்படைத்த தலைவரைக் காத்து, அதற்குப் பின்னாலும் அந்த இயக்கத்தை கட்டிக்காத்த தொண்டின், பண்பின், வீரத்தின், கனிவின், எளிமையின் பெட்டகமான அன்னை மணியம்மையாரைப் போற்றுவோம்! பின்பற்றுவோம்! இந்த மகளிர் நாளில் உரிமையின் அடையாள மாக உலகெங்கும் அவரைக் கொண்டு சேர்ப்போம் என்று தனது உரையை நன்றி கூறி முடித்தார்.
நிகழ்வில் புதுச்சேரி மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர் வி.இளவரசி சங்கர் அவர்கள் இணைப்புரை மற்றும் நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment