ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 1, 2022

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

புதுடில்லி, ஏப்.1 ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அகவிலைப்படி உயர்வால்,  ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவர். ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை  உயர்த்தி வழங்கப்படும். நாட்டில் தற்போது எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழலில், அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு சற்று நிவாரணம் அளிப்பதாக அமைந்துள்ளது.

கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக அகவிலைப்படி உயர்வு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூலை 2021 ஆம் ஆண்டு ஒன்றிய அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கியது.

பொறியியல் சேர்க்கை புதிய அறிவிப்பு வெளியீடு

சென்னை, ஏப்.1 குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேர 12ஆம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டியதில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஅய்சிடிஇ) வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சில பி. பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என ஏஅய்சிடிஇ அறிவித்துள்ளது.

மேலும்,பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல எனவும், கணினி அறிவியல், மின் & மின்னணு பொறியியல் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமல்ல எனவும் ஏஅய்சிடிஇ அறிவித்துள்ளது.

குறிப்பாக கட்டடக்கலை பயோடெக்னாலஜி மற்றும் பேஷன் டெக்னாலஜி, உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட மூன்றில் ஒரு பங்கு பொறியியல் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும் என்ற தேவையில்லை என்று ஏஅய்சிடிஇ தெரிவித்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment