வைகோ, தமிழர் தலைவர் ஆசிரியர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை
சென்னை,ஏப்.26- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 21 நாள்கள் சூறாவளி சுற்றுப்பயணமாக அமைந்த நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயண நிறைவு நாள் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 3.4.2022 அன்று நாகர்கோயிலில் தொடங்கிய 21 நாள்கள் பரப்புரை பெரும் பயணத்தின் நிறைவு நாள் சிறப்புப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றத்தில் நேற்று மாலை (25.4.2022) திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.
கழகப்பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார்.
பெரியார் வலைக்காட்சியின் படம் திரையிடல்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரைப்பயணம் குறித்த பெரியார் வலைக்காட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட விளக்கப் படம் திரையிடப்பட்டது.
கழகத்துணைத்தலைவர் தலைமையுரை
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையுரை ஆற்றினார்.
தலைமையுரையில், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியிடம், நீதித்துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் செய்தித்தாள்கள், ஊடகங்களில் அது வெளியிடப்படவில்லை.
10 வயது முதல் மக்களை சந்தித்து வருபவர் தமிழர் தலைவர். கரோனா காலத்திலும் இணையவழியில் உரையாற்றினார் என்றாலும், நேரடியாக மக்களை சந்திக்க முடியவில்லை. கரோனா 2 ஆண்டு காலமாக கட்டிப்போட்டது. இந்த பரப்புரை பயணத்தின் 21 நாள்களில் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுற்றுப் பயணங்களை ஏற்கெனவே பலமுறை மேற்கொண்டுள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைப்புகுத்தி, பொருளாதார வரம்பு ஆணைபிறப்பித்தார். அதனை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் 37 இடங்களில் எம்.ஜி.ஆர்.தோல்வியுற்றார். அதன் பின்னர் அரசு சார்பில் அனைத்துக்கட்சிக்கூட்டம் கூட்டப்பட்டது.
அரசமைப்புச்சட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு என்று உள்ளதே - அது என்ன பொருளாதார அடிப்படையில்? என்று செய்தியாளனாக எம்.ஜி.ஆரிடம் கேள்வி எழுப்பியபோது, நீங்கள் எந்த பத்திரிகை என்றார். விடுதலை என்றதும், உங்கள் ஆசிரியரிடம் கேளுங்கள் என்றார். ஏன் இந்த அவசரக்கூட்டம் என்று இந்து செய்தியாளர் கேட்டபோது, அரசியலில் இல்லாத ஓர் இயக்கம், ஒரு தலைவர் என்னை சமூகநீதிக்கு எதிரானவன் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்துள்ளதால் என்றார்.
பி.பி. மண்டல் அவர்களே இதே பெரியார் திடலில் கூறும்போது, அறிக்கையைத்தான் நான் அளிக்க முடியும். அதனை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு பெரியார் மண்ணுக்கு, ஆசிரியர் கி.வீரமணிக்குத்தான் உள்ளது என்றார். மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழர் தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பாபர் மசூதி இடிப்பின்போது மதவெறி மாய்ப்போம், மனிதநேயம் காப்போம் என்று தமிழ்நாடு முழுவதும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஜாதிக் கலவரம், மதக்கலவரம் ஏற்பட்ட போதிலும் தமிழ்நாடு முழுவதும் ஜாதி ஒழிப்பு சுற்றுப்பயணத்தை தமிழர் தலைவர் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டி வந்துள்ளார்.
இப்படி பல்வேறு பெரும்பயணங்களை மேற்கொண்டு மக்களை சந்தித்து, அதில் வெற்றியையும் பெற்றுள்ளார் தமிழர் தலைவர்.
திராவிடர் கழகத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் கிடையாது. ஆனால், முதல் சட்டத்திருத்தத்துக்கு காரணமானவர் தந்தைபெரியார்தான்.
இந்த இயக்கம் எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம். சாதாரணமானதல்ல.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலை ஆசிரியராகி 60 ஆண்டுகள். 60 ஆயிரம் விடுதலை சந்தாக்களை அளிப்போம்.
தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளமாக விடுதலை இருக்கவேண்டும் என்றார் குன்றக்குடி அடிகளார். ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றபோது போட்ட இரண்டாவது கையெழுத்து நூலகங்களிலிருந்து விடுதலையை நிறுத்தியதுதான். முதலமைச்சரின் கவனத்துக்கு இதைச்சொல்கிறோம்.
திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் 5 ஆண்டுகள் அல்ல பல 5 ஆண்டுகள் ஆயுள் நீடிக்க வேண்டும். ஆட்சி நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
இவ்வாறு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையுரையில் குறிப்பிட்டார்.
பரப்புரைப்பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் பாராட்டி வைகோ பயனாடை அணிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், சென்னை மேயர் பிரியாராஜனுக்கும், துணை மேயர் மு.மகேஷ்குமாருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.
மேயர் பிரியா ராஜன்
பரப்புரைப்பயணத்தின் நிறைவு நாள் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா ராஜன் உரையாற்றுகையில், சிறந்த மருத்துவரை நுழைவுத் தேர்வு உருவாக்கிவிடுமா? என்று கேள்வி எழுப்பினார். அனிதாவின் சாவிற்கு பதிலடியாக நீட்டை நாம் சாகடித்தால் மட்டுமே அனிதாவின் சாவுக்கு விடிவு வரும். தமிழ்நாட்டில் இனி ஒரு அனிதா இறந்துவிடக்கூடாது என்பதே நம் முதலமைச்சரின் எண்ணம் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. ஓர் ஏழை மருத்துவராகவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நீட் - இது பெரியார் பிறந்த மண். நாம் நினைத்தால் மருத்துவராகவும் முடியும், தலைசிறந்த மருத்துவர்களை உலகத்திற்கு உருவாக்கிடவும் முடியும். ஒரு நுழைவுத் தேர்வு என்பது எப்படி தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும்? இந்தியாவில் பயில்கின்ற மருத்துவர்களில் எட்டில் ஒருவர் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர். இந்தியாவிலேயே 12 விழுக்காடு அளவில் மருத்துவர்கள் தமிழ்நாட்டிலிருந்தே உருவாகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
சென்னை மேயர் பிரியா ராஜன் உரையைத் தொடர்ந்து, திராவிட இயக்கப் போர்வாள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சிறப்புரை ஆற்றினார். பரப்புரைப் பெரும்பயண நிறைவுநாள் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயணம்குறித்து விளக்கவுரையாற்றினார்.
நிறைவாக திமுக தலைவர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
வீ.அன்புராஜ்
கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நன்றியுரை ஆற்றினார்.
நன்றியுரையில், முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து சிறப்பு விருந்தினர்கள், சுற்றுப்பயணக்குழுவில் இடம்பெற்ற ஓட்டுநர் உள்ளிட்ட அனைவருக்கும், சிறப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றுகையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நீட் தேர்வை எதிர்த்து 2020ஆம் ஆண்டில் நாகர்கோயில் தொடங்கி சென்னை வரை 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நீட் தேர்வைக் கண்டித்து விடுத்த அறிக்கைகள் 36, நீட் தேர்வுக்கு எதிராக கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டங்கள் 6, நீட் தேர்வை எதிர்த்து கல்வி உரிமைக்காக கூட்டப்பட்ட மாநாடுகள் 9 என பட்டியலிட்டார் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ். 3.4.2022 அன்று நாகர்கோயிலில் தொடங்கி நடைபெற்ற பரப்புரைப்பெரும்பயணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 27 மணி நேரம், 8 நிமிடங்கள் கால அளவில் உரையாற்றியதையும் குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் தலைமையில் ஹிந்தி அழிப்புப்போராட்டம
கூட்டத்தில் 30.4.2022 அன்று எழும்பூர் ரயில் நிலைய பெயர்ப்பலகையில் ஹிந்தி அழிப்புப் போராட்டத்துக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமை வகிக்கிறார் என்று கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிவித்தார்.
கலந்துகொண்டோர்
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயண நிறைவுநாள் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு காங்கிரசு கட்சி மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன், நாடாளுமன்ற மக்களவை திமுக குழுத் தலைவர் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மக்களவை உறுப்பினர் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.இராசா, மாநிலங்களவை உறுப்பினர் திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் திமுக மாணவரணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன்,சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இ.பரந்தாமன், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சிங்கராயர், தமிழ்நாடு அரசின் திட்டக்குழு மேனாள் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், ஊடகவியலாளர் கோவி.லெனின், சட்டமன்ற மேனாள் செயலாளர் மா.செல்வராஜ், முனைவர் மு.தமிழ்மொழி, வி.வெங்கட்ராமன், காவல்துறை மேனாள் அதிகாரி இராமநாதன், சட்டக்கதிர் சம்பத், திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியதேவன், தென்சென்னை கிழக்கு மாவட்ட மதிமுக செயலாளர் கே.கழகக்குமார், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, கழக மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.ஜெயராமன், மதுரை வே.செல்வம், பொன்னேரி வி.பன்னீர்செல்வம், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, அமைப்பாளர் சே.மெ.மதிவதனி
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், அதிரடி அன்பழகன், இராம.அன்பழகன், தஞ்சை பெரியார் செல்வன், காரைக்குடி என்னாரெசு பிராட்லா, காஞ்சி பா.கதிரவன் உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சென்னை மண்டலத்திலிருந்தும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும் கழகத்தின் பல்வேறு அணி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
திமுக, விடுதலைசிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கட்சிகளின் பொறுப்பாளர்கள், திமுக மகளிரணியினர் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா அரங்கம் முழுவதும் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. மேல்தளத்திலும் பார்வையாளர்கள் முன்னதாகவே குழுமியிருந்தனர். அரங்கின் வெளியே பந்தலின்கீழ் அமைக்கப்பட்டிருந்த காட்சித்திரைகள் வாயி லாக நிகழ்வினை ஆயிரக்கணக்கான பார்வை யாளர்கள் கண்டுகளித்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணத்தின்மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு நகரங்களில், மாவட்டத் தலைநகரங்களில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் நடைபெற்ற பரப்புரைப் பெரும்பயணப் பொதுக்கூட்டங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பரப்புரைப்பயணம் குறித்த விளக்கக் கூட்டங்கள், சுவரெழுத்துகள், கழகத் தோழர்களின் தீவிரமான களப்பணிகள்மூலம் தமிழர் தலைவர் பரப்புரைப்பயண வருகை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் கொண்டு செல்லப்பட்டது. இரவு பகல், மழை, கடும் வெயில் பாராமல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவருக்கு தமிழ்நாடு முழுவதும் பேராதரவு பெருகியது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரைப் பெரும்பயணத்தில் பொதுமக்கள் கட்சி, ஜாதி, மத பேதமின்றி தமிழர்களாக ஒன்றிணைந்து பேராதரவினை அளித்து வரவேற்றனர். தமிழர் தலைவர் உரைகேட்க பெருமளவில் திரண்டனர்.
பொதுக்கூட்டங்களில் நீட் தேர்வால் ஏற்படுகின்ற கொடும் விளைவுகள் குறித்தும், புதிய கல்விக்கொள்கை எனும் பெயரில் குலக்கல்வியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சித்திட்டம் மற்றும் மாநில உரிமை பறிப்புகள்குறித்தும், அதனை மீட்க வேண்டிய அவசியம் குறித்தும் மக்களை சந்தித்தபோது பல்வேறு வரலாற்றுத் தகவல்களை, ஆதாரபூர்வமான தகவல்களை எடுத்துக்காட்டி விளக்கினார். நீதிக்கட்சி தொடங்கி திராவிட மாடல் ஆட்சியான Ôசமூகநீதிக்கான சரித்திர நாயகர்Õ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகள்குறித்தும், ஆரிய ஆதிக்கத்தின் ஆணி வேரை அகற்றும் திராவிட மாடல் ஆட்சி குறித்தும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணி அரசின் செயல்பாடுகளை பெருமிதத்துடன் பட்டிதொட்டி எங்கும் எடுத்துரைத்தார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றிட முடியாமல் ஒன்றிய பாஜக அரசு, ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதை எடுத்துக்காட்டி, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் அவலங்களை எடுத்துக்காட்டி உரையாற்றினார். பொதுமக்களும், அனைத்துக்கட்சியினரும் இப்பரப்புரைப்பயணம்குறித்து பெருமளவில் விழிப்பைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடர் கழகம் மற்றும் தமிழர் தலைவர் ஆற்றிவரும் பணிகள் காரணமாகவே திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது என்று முதலமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment