ரஷ்ய - இந்திய அரசு உறவுகளின் 75-ஆம் ஆண்டு விழாவில் கழகப் பொருளாளர் பெருமித உரை
75ஆம் ஆண்டு விழாவில்
ரஷிய தூதருக்கு புத்தக நினைவுப் பரிசு
ரஷிய இந்திய நாட்டு உறவுகளின் ஆண்டு விழாவில் சென்னையில் உள்ள ரஷிய தூதர் ஒலேக்அவ்தீவ் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக வாழ்த்தினைத் தெரிவித்து “Collected Works of Periyar EVR” மற்றும் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொது அரங்க மேடைகளில் ஆற்றிய ஆங்கில உரைகளின் தொகுப்பான“Carry the Torch Forward”ஆகிய ஆங்கில நூல்களை கழகத்தின் பொருளாளர் நினைவுப் பரிசாக வழங்கினார்.
ரஷ்யா - இந்திய நாட்டு உறவுகளின் 75-ஆம் ஆண்டு விழா 20.04.2022 அன்று சென்னை - ரஷ்ய பண்பாட்டு மய்யத்தில் உள்ள ரஷ்ய இல்ல அரங்கில் நடைபெற்றது. சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப் பின் தென்னிந்திய பகுதிக்கான ரஷிய தூதரகமும், இந்திய-ரஷிய வர்த்தக தொழில் கழகமும் இணைந்து நடத்திய விழாவிற்கு ரஷிய தூதர் ஒலேக் அவ்தீவ் தலைமை வகித்துப் பேசினார். நிகழ்ச்சியில் இந்திய ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையின் உயர் அதிகாரி முனைவர் வெங்கடாசலம் முருகன், ‘பிரமோஸ்’ ஏவுகணை விஞ்ஞானியும் இந்தோ-ரஷிய வர்த்தக தொழில் கழகத்தின் துணைத்தலைவருமான முனைவர் ஏ. சிவதாணு பிள்ளை, அதன் நிறுவனத் தலைவர் வி.எம். லட்சுமி நாராயணன், திராவிடர் கழகப் பொருளாளர்
வீ. குமரேசன், மற்றும் தொழிலதிபர் ஜெம் ஆர். வீரமணி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்.
ரஷிய தூதர்
ரஷிய-இந்தியா நாட்டு உறவுகளின் 75-ஆம் ஆண்டு விழாவில் ரஷிய தூதர் ஒலேக் அவ்தீவ் ஆற்றிய உரை வருமாறு:
இந்திய-ரஷிய நாட்டு உறவுகளில் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு என அனைத்துத் தளங்களும் உள்ளடங்கியுள்ளது. விடுபட்ட தளங்கள் இல்லை என்றே சொல்லலாம். பாதுகாப்பு தொழில்நுட்பத் தளத்தில் இருநாடுகளும் இணைந்து உருவாக்கிய ‘பிரமோஸ்’ ஏவுகணையானது இன்றைக்கு இந்தியா விலேயே உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப் பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரு கிறது. விண்வெளிக்கு அப்பாற் பயணிக்கும் தளத்திலும் இருநாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன.
உலக அரங்கில் ரஷிய நாட்டை ஒதுக்கிடும் அபத்த மான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சில நாடுகளின் முயற்சிகள் நிச்சயம் தோல்வியில்தான் முடியும்.
மற்றநாடுகளின் முயற்சிகள் எப்படி இருந்தாலும், இந்திய அரசு, ரஷிய அரசுடனான தனது உறவில் காலத் திற்கேற்ப ஒரு தனித்தன்மையான - சுய நிர்ணயமிக்க நிலைப்பாட்டை பேணிக் காத்துவருகிறது. இந்தியாவுடன், அத்தகைய அணுகுமுறையினைக் கடைப்பிடித்து வரும். பிறநாடுகளும் சுயநிர்ணய மிக்க நிலைப்பாட் டையே கொண்டுள்ளன. அண்மையில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்த நிகழ்ச்சியில், இருநாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு உறுதிப்பாடு, இருதரப்பு வளர்ச்சியில் அடுத்த கட்ட நகர்வு ஆகியவற்றில் புதியதொரு அத்தியாய அணுகு முறையினைக் கடைப்பிடிக்க உறுதி அளித்ததை நினைவு கூர்ந்தார்.
இருநாடுகளில் பொருளாதார வளர்ச்சி நடவடிக் கைகளில் ரூபிள் - ரூபாய் பரிவர்த்தனைத் திட்டத்தின் மூலம் வங்கித் தொடர்பிலான செயல்பாட்டில் ஒருவித கூட்டுறவையும், எளிதான பணமாற்றுதலையும் ஊக்குவிக்கும் செயல்களும் நடைபெற்று வருகின்றன.
ரஷிய - இந்திய அரசு உறவுகளின் 75 ஆம் ஆண்டு விழாவில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு நிலைகள் மிகவும் சிறப்பாகவும், உறுதியாகவும் உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
பிரமோஸ் விஞ்ஞானி ஏ.சிவதாணு பிள்ளை
விழாவில் சிறப்புரையாற்றிய இந்திய - ரஷிய பாதுகாப்புத்துறைகளின் சாதனை மகுடங்களுள் ஒன்றான ‘பிரமோஸ்’ ஏவுகணையினை உருவாக்கிய விஞ்ஞானி ஏ. சிவதாணுப் பிள்ளை தனது உரையில் குறிப்பிட்டதாவது:
இந்திய - ரஷிய அரசுகளுக்கிடையிலான - தொடர்ந்துவரும் உறவுகளால் இருநாடுகளும் பலன் பெற்று வருகின்றன. சோவியத் ஒன்றியம் பிரிந்ததற்குப் பின்னர் ரஷிய நாட்டுடனான ஒப்பந்தத்தின் அடிப் படையில் ‘பிரமோஸ்’ ஏவுகணை உருவாக்கத்தில் பங் கேற்றுப் பணி ஆற்றிடும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்நாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் முயற்சியும், வழிகாட்டுதலும் பலவகை யிலும் உறுதுணையாக இருந்தது. இருநாடுகளின் பாதுகாப்பு சார்ந்த அறிவியல் வளர்ச்சியில் சாதனை மகுடமாக ‘பிரமோஸ்’ திகழ்ந்து வருகிறது. சோவியத் ஒன்றியமாக இருந்த நிலையில் பலவித பொருளாதார வளர்ச்சிக்கான உதவிகளை இந்தியா பெற்றிருந்தது. ஒன்றியம் கலைந்து போன நிலையில் - ஒன்றியத்தில் இருந்த நாடுகள் பல பிரிந்து போன நிலையில் ரஷிய நாட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி துறையில் விஞ்ஞானிகள் போது மான அளவில் இல்லை. அந்த நிலையில் ரஷிய நாட் டிற்கு அறிவியலாளர்களை - அவர்களது அறிவார்ந்த செயல்பாடுகளை இந்தியா வழங்கி உதவிகரமாக இருந்தது.
இன்று உலக அரங்கில் இந்திய - ரஷிய நாடுகளின் பாதுகாப்பு துறைகள் பற்றிய மதிப்பு, வியப்பு ஆகியவற்றிற்கு ‘பிரமோசஸ்’ ஏவுகணைதான் முக்கிய அடிப்படையாகும். பிரமோஸ் ஏவுகணையின் தொடர்ந்த உருவாக்கத்திற்கு இரு நாடுகளுக்கிடையிலான 75-ஆண்டு கால அரசு நீதியிலான உறவுகளே ஆதாரம் சேர்ந்துள்ளன. அத்தகைய உறவுகள் வருங்காலங்களிலும் தொடர்ந்து பயனளிக்க வேண்டும் என விரும்பி வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
திராவிடர் கழகப் பொருளாளர்
திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
இந்திய - ரஷிய நாட்டு அரசு ரீதியிலான உறவுகளின் 75ஆம் ஆண்டு விழாவும் - இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர ஆண்டு விழாவும் ஒரே காலக் கட்டத்தைக் கொண்டவை.
இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே 1931 - ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் தனது அய்ரோப்பியப் பயணத்தின் பெரும்பாலான காலத்தை (27 நாள்கள்) ரஷியாவிலேயே தங்கினார். ரஷியாவின் மாபெரும் வளர்ச்சியை நேரில் கண்டு மகிழ்ந்தார். ரஷியா செல்வதற்கு முன்பாகவே பொதுவுடமைச் சிந்தனையில் தோய்ந்தவராக பெரியார் இருந்தார். தனது ‘குடிஅரசு’ ஏட்டில், காரல் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் இணைந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையினை(Communist Manifesto) முதன்முதலாக தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார்தான். பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்பாகவே - 1908இல் ஈரோட்டில் வெல்ல மண்டி உரிமையாளராக இருந்த காலத்திலேயே தனது வணிக நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களை பங்குதாரர்களாக்கி, பொதுவுடமைக் கருத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியவர் பெரியார். தனது சோவியத் ஒன்றியப் பயணத்தில், 1932 இல் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற மே தின நிகழ்வில் அரசு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு நிலவிய வளர்ச்சி பெருமைகளைப் பார்த்து ரஷியக் குடிமகனாக வாழ்ந்திட விரும்பியதையும் வெளிப்படையாகக் கூறியவர் பெரியார். இருப்பினும் சோவியத் ஒன்றியம் பற்றிய தனது எதிர்கால அச்சத்தையும் வெளிப்படுத்தினார். அப்பொழுது நிலவிய அரசு ரீதியிலான அடக்கு முறைகள் அகலாவிட்டால் ஒன்றியம் - வளர்ச்சி கொள்வதில் ஒரு தொய்வு ஏற்படவே செய்யும் எனவும் குறிப்பிட்டார். பின்னாளில் (1990களில்) சோவியத் ஒன்றியம் கலைந்து போனதையும் அன்றே கணித்தவர் தந்தை பெரியார்.
சோவியத் ரஷியாவிலிருந்து திரும்பிய நிலையில் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு ‘ரஷ்யா’ எனப் பெயரிட்டு மகிழ்ந்தார். அந்த நேரத்தில் பெரியாரைக் கருத்தியல் அடிப்படையில் எதிர்த்தவர்கள், ஒரு நாட்டின் பெயரை குழந்தைக்குச் சூட்டுவது பற்றிக் கேலியாகப் பேசி வந்தனர். அதற்கு பதிலடியாக, தனக்கே உரிய பாணியில் பெரியார் கூறினார், “’பழனி’, ‘சிதம்பரம்’, ‘திருப்பதி’ என ஊர்களின் பெயரைக் குழந்தைகளுக்குச் சூட்டும் பொழுது ஒரு எடுத்துக்காட்டான வளர்ச்சியினைக் கொண்ட நாடான ‘ரஷ்யா’வின் பெயரில் குழந்தைகள் அழைக்கப்படுவதில் என்ன தவறு; அப்படி பெயரிடுவது இந்த மண்ணில் நிலவி வரும் ஒரு வழக்கத்தின் வேறு ஒருவடிவம்தான்; புதியதல்ல.” என பதிலுரைத்தார்.
திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் ஆசிரியர் கி. வீரமனி அவர்களும், பெரியார் வழியில் 1986 - ஆம் ஆண்டில் இந்திய-சோவியத் நட்புறவுக் கழகத்தின் சார்பான பயணக்குழுவில் அங்கம் வகித்து சோவியத் ஒன்றியத்திற்கு சென்று தந்தை பெரியார் பார்த்த இடங்கள், பயணித்த பகுதிகளுக்குச் சென்று வந்தார்.
அப்பொழுது தொடங்கி திராவிடர் கழகம் ரஷிய தூதரகத் தொடர்புகளைப் பேணிக் காத்து வருகிறது. பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் முன்னெடுப்பில் சோவியத் ஒன்றியத்திற்குப் பெரியார் சென்று வந்த குறிப்புகள் அடங்கிய நூலை ரஷிய மொழியில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அந்த பயணநூல் வெளிவரவிருக்கிறது.
இந்திய - ரஷிய நாடுகளிடையிலான உறவு வர்த்தக அடிப்படையிலானது மட்டுமல்ல - தொழில்துறை தொடர்புடையது மட்டுமல்ல; அனைத்திற்கும் மேலாக பண்பாடு சார்ந்தது. இருநாடுகளில் நிலவிடும் அரச மைப்பு ரீதியிலான பண்பாடு அடிப்படை, ‘மனிதர் அனைவரும் சமம்; பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு கூடாது” என்பதே. இந்த மனித சமத்துவத்தை பாது காத்திட இந்திய அரசு எடுத்திடும் அத்துணை முயற்சி களுக்கும் ஆக்கம் காட்டும் வகையில் திராவிடர் கழகம் தொடர்ந்து செயல்படும்.
ரஷிய தூதரகத்துடனான ஒருங்கிணைந்தபணிகள் வருங்காலங்களில் மேலும் சிறப்படைய வேண்டும். இந்தியா - ரஷிய நாடுகளின் அரசு ரீதியிலான 75-ஆண்டு விழாவில் திராவிடர் கழகத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறினார்.
தொழிலதிபர் ஜெம்.ஆர். வீரமணி
திராவிடர் இயக்க குடும்ப வழி வந்த தொழிலதிபர் ஜெம்.ஆர். வீரமணி தாம் உரையாற்றுகையில் குறிப் பிட்டதாவது.
இந்தியாவில் ஏற்பட்ட தொழில்துறை வளர்ச்சியில் சோவியத் ஒன்றியத்திற்கு, அடுத்து இன்று நிலவிடும் ரஷிய கூட்டமைப்பிற்குப் பெரும் பங்கு உண்டு. சோவியத் ஒன்றியம் பரந்துபட்டது. இரண்டு கண்டங் களில் (ஆசியா, அய்ரோப்பா) விரிந்து உள்ளதாகும். கால அட்டவணையைப் (Standard Time) பொறுத்த அளவில் 11 அட்டவணைகளைக் கொண்ட பகுதி என்பதே அந்த நிலப்பரப்பின் பரந்துபட்ட நிலையினை வெளிப்படுத்துவ தாகும். இயற்கை வளங்கள் பல நிலவிடும் நாடு அது. அத்தைகைய இயற்கை வளங்களைக் கொண்ட இந்தியா, ரஷிய நாட்டுடன் கொண்டுள்ள அரசு ரீதியிலான உறவு- தொடர்பு என்பது ஒரு இயல்பானதே. தொழில் துறைக்கு தேவையான மூலதனம், கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகிய அனைத்துத் தளங்களிலும் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று உதவியாக பல காலக்கட்டங்களிலும் இருந்து வந்துள்ளன. உலக அரங்கில் பல்வேறு பொருளாதார அறைகூவல், போர்ச் சூழல் நிலவிடும் இன்றைய காலத்திலும் அந்த உறவு உறுதியாக உள்ளது. இருநாடுகளுக்கான இந்த உறவு 75 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. நூறாண்டுகளையும் கடந்து இரு நாடுகளுக்கிடையேயான உறவு நீடித்திட வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
பன்னாட்டு துறை உயர் கல்வி மாணவியர்
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பன்னாட்டு துறை சார்ந்த கல்வி பயிலும் மாணவியர் மற்றும் கல்விப் புலன் ஆசிரியர்களும் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். இருநாடு களில் நிலவிடும் தற்போதைய உறவுநிலை குறித்து மாணவியர் விடுத்த கேள்விகளுக்கு பிரமோஸ் விஞ்ஞானி ஏ. சிவதாணு பிள்ளை உரிய விளக்கங்களை அளித்தார்.
ரஷிய நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக இந்திய-ரஷிய உறவு குறித்த ரஷிய நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் வழங்கிய ஒரு நேர்காணல் பதிவு காணொலியாக பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பப் பட்டது.
தோழர் ப.தங்கப்பன்
75ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை வரவேற்புரை தொடங்கி, அதனைத் தொகுத்து, நன்றி கூறி இந்தோ-ரஷிய வர்த்தகம் மற்றும் தொழில் கழகத்தின் செயலாளர் தோழர் ப.தங்கப்பன் நிறைவு செய்தார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பினிடையே இந்திய-ரஷிய நாட்டு உறவில், தமிழ்நாடு ஆற்றி வந்த பங்கினைச் சுருக்கமாகவும் வரலாற்று குறிப்புகளின் மீள் பதிவாகவும் எடுத்துரைத்தார். இந்திய-சோவியத் நட்புறவுக் கழகத்தின் செயல்பாடுகள் இரு நாடுகளுக்கிடையிலான உறவினை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி யுள்ளது. ரஷியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் களுக்கு பாலமாகவும், படிப்பு நிறைவடைந்து பணியில் ஈடுபட்டுவரும் மேனாள் மாணவர்களின் கலந்துரை யாடல் புகலிடமாகவும் தமிழ்நாடு விளங்கிவருகிறது. மேலும் இந்திய-ரஷிய வர்த்தக-தொழில் கழகமும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வந்துள்ளது. தந்தை பெரியார் மற்றும் அவர் நிறுவிய திராவிடர் கழகத் தோழர்கள், தொண்டர்கள் பலர் ரஷிய நாட்டிற்கு சென்று வந்தபின் சுற்றுலா என்ற அளவில் நிறைவடையாமல் ரஷிய உறவுகள் தொடர்கின்ற நிலையினை உருவாக்கிய செய்திகளையும் விவரித்தார்.
நிகழ்ச்சிக்கு ரஷிய தூதரக அதிகாரிகள், இந்திய-ரஷிய உறவு ஆய்வாளர்கள் பலர் வருகை தந்திருந்தனர். நிகழ்விற்கு பின்பு அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய-சோவியத் ஒன்றிய உறவில் 90 ஆண்டுகளுக்கும் மேலான நினைவுகளுடன் நிகழ்ச் சிக்கு வந்திருந்த தோழர்கள் விடைபெற்றுச் சென்றனர்.
தொகுப்பு: வீ. குமரேசன்
No comments:
Post a Comment