நாடாளுமன்றச் செய்திகள் ஏர் இந்தியாவால் ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு மக்களவையில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 1, 2022

நாடாளுமன்றச் செய்திகள் ஏர் இந்தியாவால் ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு மக்களவையில் தகவல்

 புதுடில்லி, ஏப்.1  ஏர் இந்தியாவால் ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வந்தது. அந்த நிறுவனத்தை தற்போது டாடா நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத் தின்போது, இதையொட்டி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பதில் அளித்தார். அப்போது அவர், ஏர் இந்தியா 2020-2021-இல் ரூ.9,373 கோடி இழப்பையும், 2021-2022-இல் (டிசம்பர் 2021 வரை) ரூ.6,927 கோடி இழப்பையும் சந்தித்தது. அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2020-2021-இல் ரூ.184 கோடி லாபத்தையும், 2021-2022-இல் (டிசம்பர் 2021 வரை) ரூ.161 கோடி இழப்பையும் சந்தித்தது. மற்றொரு துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் மேற்கூறிய கால கட்டத்தில் முறையே ரூ.440 கோடி மற்றும் ரூ.315 கோடி இழப்பையும் சந்தித்தது என கூறினார். ஏர் இந்தியா குழுமம் மொத்த இழப்பு ரூ.17 ஆயிரத்து 32 கோடி ஆகும்.

கடலோர பகுதிகளில்  புதிய கட்டுமானத்திற்கு

அனுமதி தரக் கூடாது

- திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்

புதுடில்லி, ஏப்.1 புவி வெப்பமயமாதல் மிகப் பெரிய சவாலாக உள்ளது என மக்களவையில் திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பருவ காலநிலை அவ்வப்போது மாறி வருகிறது என்றும், ஒவ்வொரு நாடும் இதனை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை கையாண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த பூவுலகை அடுத்த தலைமுறையிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்றும் புவி வெப்பமயமாதல் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு மிக நீண்ட கடற்கரை பகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால், 2050 ஆம் ஆண்டுக்குள் ஏறத்தாழ 2 கோடி மக்கள் இடம்பெயரக்கூடும் என்று அவர் கூறினார். கடல் நீர்மட்டம் உயர்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடலோர பகுதிகளில் புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி தரக்கூடாது என்றும் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment