எமது புரட்சிக்கவிஞர் என்றும் வாழ்கிறார்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
புரட்சிக்கவிஞர் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (29.4.2022). பெரியார் என்ற பேராயுதக் கிடங்கில் வார்த்தெடுக்கப்பட்ட அறிவாயுதங்கள்; புரட்சிக்கவிஞர் என்றும் வாழ்கிறார்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு.
இன்று (29.4.2022) புரட்சிக்கவிஞரின் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள்!
ஒப்பற்ற உலகக் கவிஞராக விளங்கியவர்!
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் 1928 முதல் தன்னை இணைத்துக் கொண்ட கவிஞர் கனக சுப்புரத்தின ‘வாத்தியார்' - ‘சுப்பிரமணியர் துதிஅமுது' தேசியப் பாட்டும் எழுதிய பெரும் கவிஞர் - சுயமரி யாதை சூரணத்தைத் தந்தை பெரியாரிடம் பெற்ற நாள் முதல், புரட்சிக்கவிஞராக மாறி, இறுதிவரை ஒப்பற்ற உலகக் கவிஞராக விளங்கியவர்!
புகழ் வேட்டைக்குப் பலியாகாமல்
எதிர்ப்பு நெருப்பை விழுங்கி அணைத்து
அதன் பிறகு அவரே புரட்சிக்கனலானவர்!
தன்னோடு முடிந்துவிடவில்லை இந்த ஆணி வேரின் வலிமையின் வெளிச்சம். எண்ணற்ற விழுதுகள் மூலம் பாரதிதாசன் பரம்பரையையே உருவாக்கிய பகுத்தறிவுச் சிகரம்.
பெரியார் என்ற பேராயுதக் கிடங்கில் வார்த்தெடுக்கப்பட்ட அறிவாயுதங்கள்
பெரியார் என்ற பேராயுதக் கிடங்கில் வார்த்தெடுக் கப்பட்ட அறிவாயுதங்கள் இலக்கியத்திலும், அரசி யலிலும்.
பண்பாட்டு மீட்புப் போரில் தன்னை விற்காத தகை சால் தன்மான எரிமலை அவர்! அறிஞர் அண்ணா அரசியலில், எழுத்துலகில், புதியதோர் சுயமரியாதை உலகு தந்தார்; முத்தமிழ் அறிஞர் கலைஞர் அதனைத் தொடர்ந்து, இன்று சமூகநீதியின் சரித்திர நாயகரான முதலமைச்சர் தலைமையில் திராவிட மாடலாக அக் கருத்துகள் சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, மகளிர் மற்றும் மனித உரிமைகளாகவும், மாநில உரிமை முழக்கங்களாக முகிழ்த்துக் கிளம்பி திக்கெட்டும் முரசு கொட்டுகின்றன.
புதிய இளைஞர்களுக்குப் புத்தாக்கத்தை உருவாக்குவோம்
புரட்சிக்கவிஞர் விழாவை நாம் பல ஆண்டுகளாக தமிழர் கலை பண்பாட்டு புரட்சி விழாவாக நடத்திடும் நாம், புதிய இளைஞர்களுக்குப் புத்தாக்கத்தை உருவாக்குவோம்.
புரட்சிக்கவிஞர் என்றும் வாழ்கிறார்!
எப்போதும் தகத்தகாய புரட்சி ஒளியாக வாழ்க! வாழ்க!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.4.2022
No comments:
Post a Comment