சென்னை, மார்ச் 3- திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் கல்வி அறக்கட்டளையை தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளரும், மக்களவை தி.மு.க. குழுத் துணைத் தலைவருமான கனிமொழி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 69ஆவது பிறந்த நாள் நேற்று முன்தினம் (1.3.2022) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தி.மு.க. மகளிர் அணி சார்பில் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எத்திராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், தி.மு.க. மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. குழு துணைத் தலைவருமான கனிமொழி பங்கேற்று, 89 மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி அறக்கட்டளை பணிகளை தொடங்கி வைத்தார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தம்முடைய சட்டமன்ற உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை தி.மு.க. மகளிரணி கல்வி அறக்கட்டளைக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மகளிர் அணி துணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், மகளிரணி புரவலர் விஜயா தாயன்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment