திராவிட இயக்கத்தினுடைய மூச்சுக்கொள்கையான சமூகநீதியை
தமிழ்நாடு மட்டுமல்லாமல் - இந்தியா முழுமையும் பரப்புவதற்கான ஏற்பாடு!
சமூகநீதி- சுயமரியாதை - மாநில உரிமைகளை முன்னெடுக்கக்கூடிய ஒரு போர்த் தளபதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்
சென்னை, மார்ச் 1- 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' என்று எல்லோராலும் அழைக்கப்படக் கூடிய அளவிற்கு, திராவிடர் இயக்கத்தினுடைய மூச்சுக்கொள்கையான சமூகநீதியை, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதற்கும் பரப்புவதற்கு ஏற்பாடு செய்வதோடு, சமூகநீதி, சுயமரியாதை, மாநில உரிமைகள் என்ற அந்தத் தத்துவங்களை மிகப்பெரிய அளவிற்கு முன்னெடுக்கக் கூடிய ஒரு போர்த் தளபதியாகவே - அரசமைப்புச் சட்ட ரீதியாகவே அவருடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (1.3.2022) காலை தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் - சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முதலமைச்சருக்குப் பொன்னாடை போர்த்தி, இயக்க நூல்களை வழங்கினார் தாய்க் கழகத்தின் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவ்விவரம் வருமாறு:
ஒன்பது மாத ஆட்சியில் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை!
தமிழ்நாட்டினுடைய ஒப்பற்ற முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தை, அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோருடைய தலை மைக்குப் பின்னால், தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற ஓர் அரசியல் கட்சியாக வடிவெடுக்கக்கூடிய அள விற்கு, ஆற்றலோடு வழிநடத்தி வருகின்ற நம்முடைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 9 மாத கால ஆட்சியில், மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
சமூகநீதியை, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதற்கும் பரப்புவதற்கு ஏற்பாடு!
'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' என்று எல்லோராலும் அழைக்கப்படக் கூடிய அளவிற்கு, திராவிடர் இயக்கத்தினுடைய மூச்சுக்கொள்கையான சமூகநீதியை, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதற்கும் பரப்புவதற்கு ஏற்பாடு செய்வதோடு, சமூகநீதி, சுயமரியாதை, மாநில உரிமைகள் என்ற அந்தத் தத்துவங்களை மிகப்பெரிய அளவிற்கு முன்னெடுக்கக் கூடிய ஒரு போர்த் தளபதியாகவே - அரசமைப்புச் சட்ட ரீதியாகவே அவருடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
69 வயது இளைஞராகவே இன்றைக்கும் அவர் களத்தில் இருக்கின்றார்.
உரிமைக்குக் குரல் கொடுக்கிறார் -
உறவுக்குக் கைகொடுக்கிறார் -
இப்பேர்ப்பட்ட ஒரு பெரிய திருப்பத்தை உருவாக்கியிருக்கின்ற அவர்கள், மேலும் பல்லாண்டு காலம் வாழவேண்டும்.
எதிர்ப்புகளையெல்லாம் எதிர்நீச்சல் அடித்து சமாளிக்கும் ஆற்றல்!
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அந்த எதிர்ப்பு களையெல்லாம் எதிர்நீச்சல் அடித்து சமாளிக்கும் அந்தப் பாடம் - தந்தை பெரியாரிடமிருந்து, அறிஞர் அண்ணாவிடமிருந்து - கலைஞரிடமிருந்து அவர் நன்றாகக் கற்றுக்கொண்டு, அந்தப் பாடங்களே இன்றைக்குத் திராவிட இயக்கத்தினுடைய போர் வாளாகவும் - இயக்கத்தினுடைய கேடயமாகவும், அதே நேரத்தில், ஆட்சியினுடைய கொள்கைகள் என்பதுமாக இருக்கிறது; குறிக்கோள்களை வேக மாகச் செய்யக்கூடிய ஏவுகணை போல என்னுடைய ஆட்சி இருக்கும் என்பதோடு, அனைவரையும் பாராட்டி வழிநடத்திச் செல்லு கின்றார்.
ஒன்பது மாதங்களில், மற்ற எவரும் அடைய முடியாத எல்லைக்கு - இந்தியாவிலேயே முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அப்பொழுதும் அடக்கத்தோடு சொன்னார், எனக்கு முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சர் என்பது பெருமையல்ல - தமிழ்நாடு முதல் மாநிலம் என்கிற நிலையை உருவாக்கவேண்டும் என்று சொல் லியிருக்கிறார்.
அவர் பல்லாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்தி தொடர்ந்து அவருடைய பெருமை நிலைக்க- அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து - அதன் மூலமாக நூறாண்டுக்கும் அப்பாற்பட்ட சாதனையா ளராக அவர் விளங்கவேண்டும் என்று அனைவரின் சார்பாகவும், தமிழர்கள் சார்பாகவும், மக்கள் சார்பா கவும், திராவிடர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.
பொற்கால ஆட்சி நீடிக்கட்டும் - பல்லாண்டு காலம் அவர் வாழட்டும்!
அவருடைய ஆட்சி- 'திராவிட மாடல்' என்ற அந்தப் பெருமைக்குரிய ஆட்சியாகத் திகழ்கின்றது என்பதை ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதைவிட, திராவிடர் இயக்கத்திற்குக் கிடைத்திருக் கின்ற மிகப்பெரிய வாய்ப்பு - மிகப்பெரிய வரலாற்று உண்மை பொன்னேடு வேறு இருக்க முடியாது.
எனவே, இந்தப் பொற்கால ஆட்சி நீடிக்கட்டும் - பல்லாண்டு காலம் அவர் வாழட்டும்!
செய்தியாளர்: மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று நேற்று முதலமைச்சர் பேசியிருக் கிறாரே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: நிச்சயமாக! அதுதான் எதிர் காலத்தில் நடக்கப் போகின்றது. ஏனென்றால், மாநில உரிமைகள் என்பதுதான் முக்கியம். இந்தியா என்பது மாநிலங்களுடைய கூட்டாட்சி. அரசமைப்புச் சட்ட ரீதியாகவே - மாநிலங்கள் இல்லாவிட்டால், இந்தியா என்பது கிடையாது - இதற்கு முன்னாலும் கிடையாது.
ராஜமன்னார் தலைமையில் குழு!
அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதின்மூலமாக, ஒன்றிய அரசு மேலும் பலப்படுத்தப்படும். இது இப்பொழுது அல்ல, ஏற்கெனவே அண்ணா அவர்கள் மாநில சுயாட்சி குறித்து வலியுறுத்தினார். அண்ணா அவர் களுக்குப் பிறகு பொறுப்பேற்ற கலைஞர் அவர்கள், அதற்கென்று ஒரு தனிக் குழுவை ராஜமன்னார் தலைமையில் அமைத்தார்.
அந்தக் குழுவை அமைத்து, மாநில சுயாட்சித் தீர்மா னத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.
அகில இந்திய அளவில் அதற்கு ஆதரவு திரட்டுகிறார்!
அதை இன்றைக்கு செயல்படுத்தினார் - அகில இந்திய அளவில் அதற்கு ஆதரவு திரட்டக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
எனவேதான், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற தத்துவங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதம் - இந்தியா வினுடைய ஒருமைப்பாட்டிற்கும், தத்துவத்திற்கும் விரோதம்.
ஆகவேதான், மாநிலங்கள் வளமாக இருக்க வேண்டும்; எப்படி நம்முடைய உடலின் பல பாகங்க ளுக்கு சக்தி பரவி, எல்லா பாகங்களும் நல்ல அள விற்கு வலிமையாக இருக்கவேண்டும்; ஒருபக்கம் வலிமையாகவும், இன்னொரு பக்கம் வலிமையற்ற தாகவும் இருந்தால், அது வளர்ச்சியல்ல - வீக்கம்.
மாநிலங்களுக்கு ஏற்படவேண்டியது வளர்ச்சியே தவிர, வீக்கமல்ல!
எனவே, மாநிலங்களுக்கு ஏற்படவேண்டியது வளர்ச்சியே தவிர, வீக்கமல்ல என்பதை நம்முடைய முதலமைச்சர் அதன்மூலம் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சருடைய சிந்தனை, இந்தியாவினு டைய மிகப்பெரிய எல்லையாகவும், செயலாகவும் விரைவில் மலருவது என்பது உறுதி!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment