தமிழ்நாட்டின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது: ராகுல்காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 1, 2022

தமிழ்நாட்டின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது: ராகுல்காந்தி

நாடு முழுமைக்கும் திராவிட மாடல் கோட்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை, மார்ச் 1- திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள தன் வரலாற்று நூலான, ‘உங்களில் ஒருவன்’ முதல் பாகத்தின் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மய்யத்தில் நேற்று  (28.2.2022) நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் திமுக பொருளாளரும் மக்களவை திமுக குழுத் தலைவரு மாகிய டி.ஆர்.பாலு முன்னிலையில் திமுக மகளிரணி செயலாளர் மக்களவை திமுக குழுத்துணைத் தலைவர் கனிமொழி வரவேற்புரையாற்றினார். 

விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவி ஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக நூலாசிரியரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை வழங்கினர். 

விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக, இந்திய தேசிய காங்கிரசு கட்சி உள்ளிட்ட  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள், இந்நாள், மேனாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை 

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

உங்களில் ஒருவனான எனது அனுபவங்களில் சிலவற்றை இந்தச் சமுதாயத்துக்குச் சொல்லியாக வேண்டும் என்ற கடமையின் காரணமாக அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக நான் எழுதிய பதிவுகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். இதனை வாசிப்பதன் மூலமாக உங்களில் ஒருவனாக நான் எப்படி முளைத்தேன் என்பதை நீங்கள் அறியலாம்.

1953ஆம் ஆண்டு மார்ச் 1இல் நான் பிறந்தேன்.1976ஆம் ஆண்டு பிப் 1இல் மிசா சட்டத்தின்கீழ், கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த வரலாற்றுச் சுவடுகள்தான் இந்தப் புத்தகம். பிற்காலத்தில் தான் என்னவாக ஆக வேண்டும் என்பதை மிகச் சிறுவயதில் ஒருவன் தீர்மானித்து விட்டால், அதில் இருந்து இம்மியளவும் விலகாமல் பயணித்தால், அந்த இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவான் என்பதற்கு அடையாளம்தான் நான்.

அத்தகைய அடையாளங்களின் தொகுப்புதான் இந்த நூல். அந்த இலக்கை அடைவதற்கு நான் எந்த சாகசங்களும் செய்யவில்லை. சாகசங்கள் செய்யத் தேவையுமில்லை. நான் என்னுடைய இயல்பிலேயே இருந்தேன். என்னுடைய இயல்பே என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இந்தப் புத்தகத்தில் நான் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான மனிதர்களின் முகங்களை நீங்கள் பார்க்கலாம். என்னோடு பயணப்பட்ட மனிதர்கள், எனக்குத் துணையாக வந்தவர் கூட்டம் பெரியது. நான் தனிமனிதனல்ல என்பதை நீங்கள் அறியலாம். பெரியார், அண்ணா, கலைஞர், அன்பழகன் ஆகியநால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள் தான் என்னைச் செதுக்கிய சிற்பிகள். இந்த நால்வரும் தனி மனிதர்கள் அல்ல. தத்துவத்தில் அடையாளங்கள். அத்தகைய தத்துவத்தின் அடையாளமாகவே நான் இருக்க விரும்புகி றேன். எனது தத்துவத்துக்கு 'திராவிட மாடல்' என்று பெயர். அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை ஆகும். கல்வியில், வேலை வாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், சமூக மேம்பாட்டில் இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். அந்த வளர்ச்சி என்பது அனைத்து சமூகங்களையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும். அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு.

இந்த கோட்பாட்டை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ராகுல்காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி ஆகியோர் இங்கே அழைக்கப்பட்டுள்ளார்கள்.

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். நிதி உரி மைகள் பறிக்கப்பட்டு, மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக உருக்குலைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும். அதற்கு இந்தியா முழுமைக்குமான அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டாக வேண்டும்.

இங்கு சட்டத்தின் ஆட்சியாக மட்டுமல்லாமல், சமூகநீதி யின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக் கூட்டமைப்பை திமுகசார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்து உள்ளது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ராகுல் காந்தி உரை

அகில இந்திய காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, ‘உங்களில் ஒருவன்' நூலை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

ஓர் அருமையான புத்தகத்தை எழுதிய எனது மூத்த அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் நீண்ட நெடிய போராட்டங்களை எதிர் கொண்டு, பல ஆண்டுகள் போராடி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏராளமான நன்மைகளை பெற்றுத் தந்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வந்தாலே எனக்கு ஒருவித மகிழ்ச்சியை தருகிறது. நான் மக்களவையில் ஆற்றிய உரையில் தமிழ் நாட்டின் சிறப்புகள் குறித்து பேசினேன். அந்த உரையை தமிழ்நாடு மக்கள் அனைவரும் பாராட்டியதை அறிவேன். அந்த உரையில் என்னை அறியாமல் ‘நான் தமிழன்' என்றேன். கூட்டம் முடிந்து வெளியில் வந்தபோது, உங்களை ஏன் தமிழன் என்றீர்கள் என பத்திரிகையாளர்கள் கேட்டனர். நான் காரில் ஏறியபோது, நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. தமிழில் பேசவில்லை. தமிழின் 3 ஆயிரம் ஆண்டு தொன் மையை அறியவும் முற்படவில்லை. பின்னர் ஏன் நான் தமிழன் என்று பேசினேன் என என்னை நானே கேட்டுக் கொண்டேன். பின்னர், எனது ரத்தம் இந்த தமிழ் மண்ணில் கலந்திருக்கிறது. அதனால் நான் தமிழன் என்பதை உணர்ந்தேன்.

மண்ணில் இருந்து மக்களும், மக்களிடம் இருந்து குரலும், குரலில்இருந்து மொழியும், மொழியில் இருந்து கலாச்சாரமும், காலச்சாரத்தில் இருந்து வரலாறும், வரலாற்றில் இருந்து மாநிலங்களும், மாநிலங்களில் இருந்து இந்தியாவும் உருவா கின்றன. எனவே, இந்தியா பல மாநிலங்களின் ஒன்றியம்தான்.

மூவாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழ்நாட்டின் மீது எதையும், யாராலும் இதுவரை திணிக்க முடிந்ததில்லை. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், சொல்லையும், மொழியை யும் புரிந்துகொள்ளாமல் எந்த அடிப்படையில் அவர் (பிரதமர் மோடி) தமிழ்நாட்டை பற்றி பேசுகிறார்? மக்களின் மொழியை புரிந்துகொள்ள முடியாமல் எப்படி தமிழர்களுக்காக பேச முடிகிறது? தமிழ்நாடு மக்கள் திரும்பத் திரும்ப நீட் பற்றி கேட்கிறார்கள். அதற்கு இதுவரை பதில் அளிக்காததுதான், தமிழ்நாடு மக்களுக்கு அளிக்கும் மரியாதையா?

ஜிஎஸ்டி விதிப்பது நியாயமில்லை. அதனால் பாதகம் ஏற்படுகிறது எனகூறும் தமிழ்நாடு மக்களை புரிந்துகொள் ளாமல் ஒன்றிய அரசு அவமதிக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சி யில், சுதந்திர நாட்டில் முதன்முறையாக மாநில உரிமை பறிக் கப்பட்டுள்ளது. ஜம்முவை அங்கு வாழும் மக்களால் ஆள முடியவில்லை. குஜராத், உத்தரப்பிரதேச மாநிலத்தினரே ஆள்கின்றனர்.

இந்தியா வரலாற்று ரீதியாக பல்வேறு மொழி, கலாச் சாரத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் பலமேஇதுதான். இதை சிதைக்க முற்படுகின்றனர். அதேபோன்று இந்தியாவின் நீதித்துறை, தேர்தல் ஆணையம், பத்திரிகை துறை ஆகியவை திட்டமிட்டு ஒன்றன்பின் ஒன்றாக நசுக்கப்படுகின்றன. இந்தியா எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்க இவர்கள் யார்? அதை மக்கள்தானே தீர்மானிக்க வேண்டும். இப்போது இதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது.

நமது மக்களாட்சி முறையில் மக்களின் குரல்தான் ஒலித் துக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் (பாஜக)வரலாற்றை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின்பாரம் பரியத்தையும், கலாச்சாரத்தையும் எதிர்த்தால் அவர்கள் தோற்றுக்கொண்டேதான் இருப்பார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

காஷ்மீருக்காக தமிழ்நாடு குரல் கொடுத்தது

உமர் அப்துல்லா உணர்ச்சியுரை

ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா பேசியதாவது:

செயலால் மக்கள் மனதில் நிற்பவர் மு.க.ஸ்டாலின். 13 வயதில் இருந்தே அரசியல் களத்தில் இருப்பவர். உழைக்கும் மக்கள் மு.க.ஸ்டாலினை நன்றாக புரிந்து வைத்துள்ளனர். காஷ்மீருக்காக தமிழ்நாடு குரல் கொடுத்தது. அதற்காகத்தான் நான் இங்கு வந்து இருக்கிறேன். எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும், நான் எப்படி இருக்க வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பது எனது உரிமை. அது தனி மனித சுதந்திரம். தனிப்பட்ட ஒருவரின் கருத்தை இதில் திணிக்கக் கூடாது. பல கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவியுள்ளன. பல வேற்றுமைகள் இருந்தாலும் அதிலும் ஒற்றுமையாக இருப்பதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பு.

மக்களின் ஒப்புதல் இன்றி ஜம்மு-காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் தமிழ்நாட்டை மூன்றாக பிரித்தால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஜம்முவில் தொடங்கிய பிரிவினை அங்கேயே முடிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டாட்சித் தத்துவத்துக்காக 

குரல் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு

விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது:

கேரள மக்களும், தமிழ்நாடு மக்களும் பல நூற்றாண்டு களாக நண்பர்களாகவும், சகோதர, சகோதரிகளாகவும் உள்ளனர். நாட்டின் வளர்ச்சியில் திராவிட இயக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேனாள் முதலமைச்சர் கலைஞர் மேற் கொண்ட திராவிட இயக்கப் பிரச்சாரத்தை, தற்போது ஸ்டா லின் முன்னெடுத்துச் செல்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில தலைவராவதற்கு முன்பு, பல ஆண்டுகளாக இளைஞரணி தலைவராக பதவி வகித்தார். அவர் சென்னை மாநகராட்சி மேயராகவும், துணை முதலமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது முதலமைச்சராகவும் உயர்ந்துள்ளார்.

நாட்டில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எப்போதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் முதல் ஆளாக அதை தட்டிக் கேட்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந் தியா பல்வேறு மொழிகளையும், கலாச்சாரத்தையும் கொண் டது. வகுப்புவாத சக்திகளை ஒழிக்கவும், ஜனநாயகத்தைக் காக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சமூகநீதிக்கு முன்னுரிமை அளிக்கும் தமிழ்நாடு தேஜஸ்வி புகழாரம்

பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:

ஒவ்வொரு காலகட்டத்திலும் சரித்திரம் படைத்த ஒருவர் உருவாவார். அப்படி ஒருவர்தான் மு.க.ஸ்டாலின். சமூகநீதிக்கு முன்னுரிமை அளித்து தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பீகாரில் சமூகநீதிக்காக இன்றும் போராட வேண்டிய நிலை இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு விளங்குகிறது. இது ஒரு தனித்துவமான சமூகம். தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்துக் காக பல்வேறு மாற்றங்களை மு.க.ஸ்டாலின் கொண்டு வந் திருக்கிறார். அதிகபட்ச பாரம்பரியத்துடன் தமிழ்நாடு இருப் பதை பார்த்து ரசிக்கிறேன். சமூகநீதி, ஒற்றுமை, நியாயம், ஆனந்தம் என அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளன. பல தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வாக தமிழ்நாடு விளங்கியுள்ளது.

- இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment