குஜராத்தில் புகையிலை, குட்கா, பான், பீடி, சிகரெட் பிடித்தல் போன்ற பழக்கத்திலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை மீட்டுள்ளார் ஒரு மருந்தாளுநர்.
குஜராத் மாநிலம் படான் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் படேல் (51). படானிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். குஜராத்தில் ஆண்கள், பெண்கள் இருவரும் அதிக அளவில் புகையிலை, பான், குட்கா போன்ற பழக்கத்துக்கு ஆளானவர்கள். இதையறிந்த நரேஷ், அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கான தன் போராட்டத்தை கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கினார்.
இதுகுறித்து நரேஷ் படேல் கூறும்போது, குஜராத்தில் குடிநீர் கிடைக்கிறதோ இல்லையோ பான், குட்கா, புகையிலை போன்ற சமாச்சாரங்கள் எளிதில் கிடைக்கும். குக்கிராமத்திலுள்ள பெட்டிக் கடையில் கூட பான், புகையிலை பாக்கெட்கள் கிடைக்கும். பலர் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி உயிரிழக்கும் நிலையைப் பார்த்திருப்பதாகக் கூறினார். அதனால்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பான், குட்கா, புகையிலை பழக்கத் திலிருந்து அவர்களை மீட்கும் பணியைத் தொடங்கினாராம்.
ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள் கூட இங்கு பான், குட்காவை பயன்படுத்துகின்றனர். வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் கூட புகையிலையைப் பயன்படுத்தி உயிரிழக்கின்றனர். புகையிலைப் பொருட்களால் ஆண்டுதோறும் 13.5 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார மய்யம் (டபிள்யூஎச்ஓ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.
குஜராத்தில் மிகக் குறைந்த விலையில் புகையிலைப் பொருட்கள் கிடைக்கின்றன. 41% ஆண்களும், 8.7% பெண்களும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.எனவேதான், இந்த பான், புகையிலைப் பழக்கத்திலிருந்து அவர்களை மீட்கும் பணியைச் செய்து வருவதாகவும், இது மட்டும் போதாதென்றும் மாநிலத்தில் மிகப்பெரிய அளவிலான புகையிலை போதை மறுவாழ்வு மய்யம் தொடங்கப்பட வேண்டுமென்றும் கூறினார்.
கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்த போதை பழக்கத்திலிருந்து மீட்டுள்ளாராம். அவர்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்குதல் போன்ற உதவிகளைச் செய்து வருவதாகவும் கூறினார்.
புகையிலைப் பழக்கத்தை விட்டொ ழிப்பது தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகளை தயாரித்து பல்வேறு கிராமங்களில் விநியோகம் செய்தும், சுவர்களில் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் நரேஷ். தற்போது சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
No comments:
Post a Comment