இதோ ஒரு அற்புத அரசியல் ஆவணம்! (2)
பொது வாழ்வில் உள்ள ஒரு குடும்பத்தவர் சந்திக்கும் இக்கட்டான சூழ்நிலைகள் எப்படிப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ள 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று பதவியேற்பின்போது உணர்ச்சி பீறிட்ட நிலையில் உச்சரித்தவர் வாழ்வில் ஏற்பட்ட அனுபவம் பற்றி (பக்கம் 15) கூறுகிறார்!
"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று நான் உச்சரிப்பதை எதிரே உட்கார்ந்து அவர் (கலைஞர்) கேட்கவில்லை. அந்த வரியை உச்சரித்தபோது, அங்கிருந்தபடி அவர் கேட்பது போல் தோன்றியது. உச்சியில் தோன்றி கேட்டுக் கொண்டதாகவே நினைத்தேன்.
என்னை மடியில் வைத்து காலாட்டி தாலாட்டுப் பாடியபடியே, என் தாய் 'அப்பான்னு சொல்லு' என்ற போது என் அருகில் அப்பா இல்லை.
பிஞ்சு மழலையாக நான் 'அப்பா' என்ற குரலுக்கு உரியவரை நிச்சயம் தேடி இருப்பேன். அவர் அப்பாவாக மட்டுமில்லாமல் 'தலைவராக' திருச்சி சிறையில் இருந்தார்.
நான் கருவறையில் இருந்து வந்த அய்ந்தாவது மாதத்தில் அவர் சிறைக்குப் போய்விட்டார். பிறக்கும் போதே நான் ஒரு தலைவருக்கு மகனாகத் தான் பிறந்தேன்.
அதன் பிறகு மற்றொரு முக்கிய நிகழ்வையும் அவர் சுட்டிக்காட்டி எழுதுகிறார்:
"அவசர நிலையை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்திய இந்திரா காந்தி அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு கலைஞர் அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். அப்போது தான் உதயநிதி பிறந்தான். இந்த தகவலை கலைஞருக்குச் சொல்லி அனுப்பி னோம். அப்போது அவர் ஒரு கடிதம் எனக்கு எழுதி அனுப்பினார்."
27.11.1977 அன்று சென்னை மத்திய சிறையில் இருந்து எனக்கு கலைஞர் அனுப்பிய கடிதம் இது:
"அன்புள்ள ஸ்டாலினுக்கு..... உனக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி, சாந்தாவுக்கு என் வாழ்த்துகளைக் கூறவும்.
1953இல் திருச்சி சிறையில் ஆறுமாத தண்டனை பெற்று நானிருந்தபோது நீ கைக் குழந்தை. வீட்டிலிருந்து என்னைக் காண வருபவர்களோடு குழந்தையாக இருந்த நீயும் வருவாய்.
இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மத்திய சிறையில் மிசா கைதியாக (1976) ஓராண்டு நீ இருந்தபோது நான் உன்னைக் காண வந்து கொண்டிருந்தேன்.
உன்னுடனும் கழக உடன்பிறப்புகளுடனும் தம்பி மாறன் மிசாக் கைதியாக இருந்த போது அவனுக்கோர் பெண் பிறந்தது. அந்தக் குழந்தையும் தன் தந்தையைப் பார்க்க சிறைச்சாலைக்குத் தான் வந்து கொண்டிருந்தது.
இப்போது உனக்குப் பிறந்திருக்கிற என் பேரனும் என்னைப் பார்க்க சிறைக்கு வருவான் என்று கருதுகிறேன். இந்த அனுபவங்கள் எவ்வளவு இனிமையானவை பார்த்தாயா?
அன்புள்ள
- மு.கருணாநிதி
இந்த அரிய தகவலைப் பதிவு செய்யும் மு.க.ஸ்டாலின் - இன்றைய நிலையில் அவரது உணர்வுகளையும், சிந்தனைகளையும் பதிவு செய்து- பலருக்கு 'சுருக்'கென்று தைக்கும் பதிலாக சுருக்கமாக சுட்டிக் காட்டுகிறார்; மேலும் படியுங்கள்.
"இந்தக் கடிதம் தான் என் இதயத்தில் எழுதி வைத்துள்ள வாழ்க்கைப் பாடம். பொதுவாழ்வை பூங்காவாக நான் எப்போதும் கருதுவது இல்லை. அது புயலை எதிர்த்து நிற்பதாகத்தான் அப் போதும் இருந்துள்ளது. இப்போதும் இருக்கிறது.
கலைஞர் மீதும், எங்கள் மீதும், எங்கள் குடும்பத்தினர் மீதும் சிலர் சிலவேளைகளில் அவதூறு பரப்பும் போதெல்லாம் இந்தக் கடிதத்தைத் தான் நான் நினைத்துக் கொள்வேன்.
கொண்ட கொள்கைக்காக ஒரு குடும்பமே சிறையையும் சித்திரவதையையும் அனுபவித்த நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்துவிட்டு பேசு பவர்களின் நன்றி கொன்ற இயல்பை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொள்வது உண்டு.
கலைஞர் குடும்பத்துக்கு வீடு என்பது சிறையும் சேர்ந்தது தான் என்பதை சிறுபாலகனாக இருந்தபோதே நான் உணர்ந்தேன்.
அதனால் தான் ஓராண்டு சிறை என்னை உருக்குலைக்காமல் உரமாக்கியது! முதலமைச்சர் என்ற பெரும் பொறுப்பை ஏற்றபோதும் அடக்கமாய் நடக்க வழிவகுத்ததும் அதுதான்!
"தண்டவாளத்தில் தலைவைத்துப் படு என்றாலும், அமைச்சர் பொறுப்பேற்று பணியாற்று என்றாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதுபவன் தான் என் தம்பி கருணாநிதி" என்றார் பேரறிஞர் அண்ணா .
கலைஞர் மட்டுமல்ல, கலைஞரின் பிள் ளையும் அப்படிப்பட்டவர் தான் என்று பெய ரெடுக்கவே நான் என்னைப் பக்குவப்படுத்திக் கொண்டேன். பிற்காலத்தில் திருச்சி சிறை நினைவுகள் என்னை அப்படித்தான் வார்ப்பித் துள்ளது.
'வாரிசு அரசியல்' என்று கீறல் விழுந்த கிராமஃபோன் தட்டுகளைப் போல - மனச் சாட்சியை புதைத்து விட்டுக் கூறுவோருக்கு அவரது குடும்பத்தின் இந்த தியாக வரலாறே தீயாய்ச் சுட்டு உணர்த்துகிறது அல்லவா?
இந்தப் பதிவு அவரையும், அவர் சார்ந்த திராவிடர் இயக்கத்தையும் எவரும் புரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது அல்லவா?
இத்தகைய தன் வரலாற்றின் தகத்தாய ஒளி, இது போன்ற நிகழ்வுகளில் வரலாறாக பளிச்சிடுகிறது - பதிவாகிறது - அரிய ஆவணமாக!
(தொடரும்)
No comments:
Post a Comment