இதோ ஒரு அற்புத அரசியல் ஆவணம்! (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 2, 2022

இதோ ஒரு அற்புத அரசியல் ஆவணம்! (1)

 இதோ ஒரு அற்புத அரசியல் ஆவணம்! (1)

நேற்று (1.3.2022) காலை தந்தை பெரியாரின் நினை விடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் தமது அமைச்சர் பெருமக்களோடு, தனது பிறந்த நாளையொட்டி, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் ஆகியவர்களின் தொண்டினைப் போற்றி மரியாதை செலுத்த வந்திருந்தார்.

அப்போது மிகுந்த உற்சாகத்துடன் எங்களிடம் உரையாடிக் கொண்டே நடந்தார் நம் முதலமைச்சர்சமூகநீதிக்கான சரித்திர நாயகர்‘.

அப்போது "நேற்றைய புத்தக வெளியீட்டு நிகழ்ச் சிக்கு நீங்கள் வருவீர்கள் என்று நான் நினைக்கல அண்ணே" என்றார் கனிவுடன். "மிக முக்கிய நிகழ்ச்சிக்கு சிறப்புடன் அழைப்பு வந்துள்ள நிலையில் எப்படித் தவிர்ப்பேன்; எனது கடமை அல்லவா?" என்று கூறிவிட்டு, "நான் இன்னமும் அந்தப் புத்தகத் தைப் பார்க்கவில்லை" என்பதையும் சொன்னேன்.

அவ்வளவுதான், அந்த குறுகிய சில மணித் துளி களில் அவரது உதவியாளருக்கு எப்படிச் சொன்னார் என்பது எனக்கே வியப்பு! அய்யா நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து முடித்தவுடன் என்னிடம் அன்புடன் அவரது எழுத்தோவியத்தைத் தந்தார், எதையும் மின்னல் வேகத்தில் செய்து முடிக்கும் நமது துடிப்பு மிகுந்த முதலமைச்சர் சகோதரர் மு..ஸ்டாலின் அவர்கள்!

நேற்றே பெரும் பகுதியை படித்து முடித்தேன் - சுவைத்தேன்.

உங்களின் ஒருவன்" - தன் வரலாறு - பாகம் 1 என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அவரது தன் வரலாறு, அவருடைய வாழ்வினை, தமிழ்நாட்டினை, திராவிடர் இயக்கத்தின் அரசியல் கூறான தி.மு.. வினையும் பற்றி இன்றைய தலைமுறையும், இனி வரும் தலைமுறையும் அறிந்து, புரிந்து, கற்றுக்கொள்ள அனுபவப் பாடங்களின் தொகுப்பாக அது இருப்ப துடன், ‘வாரிசு அரசியல்என்று அவரது குடும்பத்தின் தியாகத்தை - நெருப்பாற்றில் நீந்திய வரலாற்றை உணராது கொச்சைப்படுத்துவோர்க்கும் தக்க பதில ளிக்கும் வகையில் - ஆவணம் போன்று அமைந்து உள்ளது.

படிக்கத் துவங்கியவுடன் விறு விறுப்போடு மேலும் தொடர்ந்து படிக்கும் வண்ணம் அது அமைந் திருந்தது. சிறு சிறு அத்தியாயங்களாக அமைக்கப்பட்டிருந்த அதிலிருந்த செய்திகளை அலுப்பின்றிப் படிக்கப் படிக்க ஆவல் மேலும் மேலும் அதிகரித்தது. ஒரு புதினத்தைப் படிப்பது போலப் படிக்க முடிகிறது!

அவரைச் செதுக்கிய நால்வரின் நிழற்குடையில் தான் நிற்ப'தாக அவர் கூறுவது அவர் ஒரு கண்ணாடி மாளிகையாக நிற்க வில்லை; கற்கோட்டையாக கம்பீர மாக உயர்ந்து நிற்பதற்கு அவர்களே மூல கர்த்தர்கள் என்பதை உலகுக்கு நன்றியுடன் பறை சாற்றுகின்றார்.

"கோபாலபுரம் என்ற வீட்டில் அல்ல, கொள்கைக் கூட்டில் வளர்ந்தவன் நான். அங்கு நான் மட்டுமா வளர்ந்தேன், இனமானமும், மொழியுணர்வும் கொண்ட அனைவருக்கும் அதுதான் பாசறை!

அந்த வீட்டில் சிறுவனாக அல்ல. கொள்கைக் காரனாக நான் வளர்ந்தேன், எனக்கு முன்னால் கொள்கையின் அடையாளமாக தந்தை பெரியார் எழுந்து நிற்கிறார்.

ஒரு இயக்கத்தைக் கோட்பாட்டு அடிப்படையிலும், பலதரப்பட்ட வகையினரையும் எப்படி அரவணைத்து நடத்திச் செல்ல வேண்டும் என்பதை பேரறிஞர் அண்ணா அடையாளம் காட்டுகிறார்.

கொள்கையும் கோட்பாடும் உள்ள ஒரு இயக் கத்தை எந்தச் சூழலிலும் இடையறாத போராட்டங் களின் மூலமாக உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்பதை தனது வாழ்க்கை மூலமாக தினமும் உணர்த்திக் கொண்டே இருந்தார் தலைவர் கலைஞர்.

பொறுமையும், அடக்கமும் கொண்டவராகவும், அதே நேரத்தில் தெளிவும் துணிச்சலும் கொண்ட வராக ஒருவர் திகழ வேண்டும் என்பதை இனமானப் பேராசிரியர் அடையாளம் காட்டிக் கொண்டு இருந்தார்.

"இந்த நால்வரின் நிழற்குடை யில் நிற்பவன் நான். இவர்கள் தான் என்னைச் செதுக்கிய சிற்பிகள்."

எம்மைப் போன்றவர்களுக்கு வியப்புடன் கூடிய வினா ஒன்று!

ஓய்வறியாது உழைக்கும் உழைப்புத் தேனீயான நமது முதலமைச்சர் அவர்களுக்கு இப்படி ஓர் அரிய நூலை எழுத எப்படி நேரமும் நினைப்பும் வாய்த் தது என்பதே அது. நமக்கு மட்டு மல்ல, பலருக்கும் மலைப்புடன் கூடிய கேள்வி எழுவது இயல்பு தான்.

அதற்குரிய விடையையும் தருகிறார் நூலாசிரியர் - அந்தஎன்னுரையிலேயே!

"கழகப் பணி - ஆட்சிப்பணி ஆகிய இரண்டும் எனது இரத்தவோட்டத்தை நாளுக்கு நாள் அதிக மாக்கி வரும் இந்த நேரத்தில் கிடைத்த ஓரளவு ஓய்வு நேரத்தை ஒதுக்கி இந்த நூலை எழுதத் தொடங்கி னேன்.

ஊடகவியலாளரும். எழுத்தாளரும், என் ஆருயிர் சகோதரருமான .திருமாவேலன், அந்தக் காலக்கட்டத்து செய்தி ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்தார். அவை என் நினைவுகளை இன்னும் ஆழமாகத் தட்டி எழுப்பி, இந்த தன் வாழ்க்கை வரலாற்று நூலை முழுமையடைய வைத்தது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்தப் புத்தகத்தை வெளியிடும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட எனது தனிச்செயலாளர் ஆருயிர் தினேஷ்குமாருக்கு எனது நன்றிகள்."

என்னே பெருந்தன்மை!

- (தொடரும்)

No comments:

Post a Comment