மாற்றம் என்பதுதான் மாறாதது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

மாற்றம் என்பதுதான் மாறாதது

    "குடும்பத்தினர் ஏற்பாடு செய்யும் திருமணத்திலிருந்து (அரேஞ்சுடு மேரேஜ்) என்னைக் காப் பாற்றுங்கள்" என்று பிரிட்டனில் ஓர் இளைஞர் விளம்பரப் பலகைகள் வைத்துள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பிரிட்டனின் லண்டன் நகரைச்சேர்ந்தவர் முகமது மாலிக். இவரின் பெற்றோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே லண்டனில் குடியேறி வசிக்கத் தொடங்கி விட்டதால் லண்டனிலேயே மாலிக் தனது படிப்பை முடித்தார்.

    சுயமாக தொழில் தொடங்கி தற்போது தொழில் முனைவோராக இருக்கும் மாலிக், கடந்த வாரம் பர்மிங்ஹாம் நகரில் வித்தியாசமாக விளம்பரப் பலகைகளை வைத்து  மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதில் "ஏற்பாடு செய்யப்படும் திருமணத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்" என்ற வாசகத்தை எழுதியுள்ளார் மாலிக்.

    மேலும் ஃபைன்ட்மாலிக் ஏவைஃப்.காம் (Findmalikawife.com)  என்ற இணையதளத்தையும் தொடங்கி பலரையும் ஈர்த்துள்ளார்.

    இதுகுறித்து மாலிக் கூறும் போது, “எனக்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்யும் திருமணத்தில் இஷ்டமில்லை. அதனால்தான் இந்த விளம்பரப் பலகைகளை பர்மிங்ஹாம் நகர் முழுவதும் வைத்தேன். இதற்காக இணையதளத்தையும் உருவாக்கி உள்ளேன்.

    எனக்கேற்ற பெண்ணைத் தேர்வு செய்ய இது உதவும் என்று நம்புகிறேன். லண்டன் என்னுடைய நகரமாக இருந்தாலும், பர்மிங்ஹாம் நகரை எனது 2-ஆவது தாய்வீடு போல நினைக்கிறேன். அதனால்தான் பர்மிங்ஹாம் நகரில் விளம்பரப் பலகைகளை வைத்தேன்.

    நானே எனது மனைவியைத் தேர்வு செய்ய நினைக்கிறேன். 20 வயது தொடக்கத்தில் இருக்கும் முஸ்லிம் பெண் எனக்கு ஏற்றவளாக இருப்பாள் என்று சொல்வேன்.

    அதேநேரம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஏற்றுக் கொள்ள திறந்த மனத்துடன் இருக்கிறேன்" என்றார்.

    இதுபோன்ற மாற்றங்கள் மதங்களைக் கடந்து நடைபெறவிருப்பதை யாராலும் தடுக்கப்பட முடியாது.

    இரு மனங்கள் இணைந்ததே திருமணம் என்றால் இங்கே மதத்திற்கு என்ன வேலை? இது இருவருடைய வாழ்க்கைப் பிரச்சினை. முட்டுக் கட்டை போடுபவர்களோ, தடைகளை ஏற்படுத் துபவர்களோ கடைசி வரை இணையர்களுக்கு உதவிடப் போவதில்லை.

    இந்துத்துவா பேசுகின்ற தலைவர்களின் வீடுகளில் மருமகள்களாக முஸ்லிம் பெண்கள் இருக்கவில்லையா?

    ஒரு காலத்தில் கல்வி என்பது ஆண்களுக்கு மட்டுமே இருந்தது. இப்பொழுது கல்வி இரு பாலாரிடமும் வளர்ந்து விட்ட நிலையில் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கும் துணிவும், ஆற்றலும் வளர்ந்து விட்டது.

    லண்டனில், இளைஞர் இதுபோன்ற விளம்பரங்கள் செய்யும் அளவுக்கு நிலைமைகள் ஏற்பட்டு இருக்க வேண்டாமே!

No comments:

Post a Comment