தமிழர் தலைவரின் வாழ்த்து அறிக்கை
நமக்காகவே நாளும் உழைக்கும் நமது முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழிய வாழியவே! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி அறிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரது வாழ்த்து அறிக்கை வருமாறு:
‘சமூகநீதிக்கான சரித்திர நாயகரான' நமது முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று (1.3.2022) 69 ஆம் ஆண்டு பிறந்த நாள்!
இந்த '69' என்பது ஒரு தனித்தன்மையானது;
அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பொதுவாழ்க்கை!
இந்தியாவிலேயே வேறு எங்குமில்லாத சமூகநீதி என்னும் இட ஒதுக்கீடு 69 விழுக்காடு 9 ஆம் அட்டவணை பாதுகாப்புடன் இருந்து - சுமார் 25, 30 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டோருக்கு கல்வி, உத்தியோகப் (அரசுத் துறையில்) பயன் தருவது எப்படித் தனிச் சிறப்போ அதுபோல, 69 வயதில் அடியெடுத்து வைக்கும் 50 ஆண்டு - அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பொதுவாழ்க்கை, திராவிடப் பேரியக்கத்தின் லட்சிய முழக்கங் களான சுயமரியாதை, சமூகநீதி, மாநில உரிமைகளையே முன்னிறுத்தி, தமிழ்நாட்டில் நல்லாட்சி தந்துகொண்டிருக்கும் 'வாராது வந்த மாமணி' போன்றவர் நமது இன்றைய விழா நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
கனிந்த அனுபவக் கொள்கலன்!
13 வயதிலிருந்தே திராவிடர் இயக்கத்தின் கொள்கை, போராட்டங்கள், சிறைவாசம் பிறகு பல்வேறு (பதவி) பொறுப்புகள் எல்லாவற்றிலும் கனிந்த அனுபவக் கொள்கலன் அவர்.
ஆளுமையின் உச்சமும் - மின்னல் வேகச் சாதனைகள் - அதேநேரத்தில், அடக்கத்தின் ஆழமும், அனைவரையும் அரவணைக்கும் மனிதநேய மாண்பும், கருணை உள்ளமும், உடனடி செயல்திறனும் அவரது தனிப்பெரும் பண்பு நலன்கள்!
அகிலம் போற்றும் தொண்டு
அதனால்தான், இந்த 9 மாதங்களில் அவர் இந்தியாவின் முதல் முதலமைச்சர் என்று அங்கீகரிக்கப்பட்டு, ஆங்கில ஊடகங்கள்கூட 'ஸ்டாலின் சகாப்தம் நீடித்து நிலைக்கட்டும்' என்று தலையங்கம் எழுதும் அளவுக்கு அவரது தொண்டின் சிறப்பு அகிலம் போற்றுவதாக அமைந்துள்ளது!
இந்தியா முழுவதிலும் சமூகநீதிக்கான களமாக ஆக்கிட அவர் எடுத்த முயற்சிகள் வெல்லட்டும்! ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாய் என்றும் திகழட்டும்!!
திராவிடர் பாரம்பரியம் எனது என்றும், பெரியார் ஆட்சிதான் தனது ஆட்சி என்றும், என்றென்றும் அறிஞர் அண்ணாவும், கலைஞரும்தான் தனது வழிகாட்டி - ஆசான்கள் எனவும் பிரகடனப்படுத்தத் தயங்காத திராவிடத்துத் தீரர் அவர்!
நேற்று (28.2.2022) அவர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் அனைத்திந்திய தலைவர்கள் - முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். அவரது தன் வரலாற்று நூலின் முதல் தொகுதியின் தலைப்பு ‘‘உங்களில் ஒருவன்'' என்பதற்கு அவர் தந்த விளக்கம் அருமையானது.
‘என்றும் நான் உங்களில் ஒருவன்'
‘எந்த நிலையிலும் நான் உங்களில் ஒருவன்'
‘உங்களுக்காக உழைக்க உறுதி பூண்டவன்' என்றார்.
அவரது செயற்கரிய சாதனைகளே அதற்கு சான்றும் பகருகின்றன!
நம்மை உயர்த்த நாளும் உழைப்பவர்!
அவர் சொல்லுகிறார்:
‘‘நான் உங்களில் ஒருவன் என்று''
நாம் பாசத்தோடும், பெருமிதத்தோடும் வாழ்த்துவோம் - அவர் நம்மில் ஒருவர்!
நமக்காகவே உழைப்பவர் - நம்மை உயர்த்த நாளும் உழைப்பவர்!
அவர் வாழ்க! வாழ்க பல்லாண்டு என்று மனங்குளிர வாழ்த்துகிறோம்!
தலைவர்,
சென்னை
1.3.2022
No comments:
Post a Comment