ஜாதிப் பட்டம் மட்டுமே பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும்
ஒரு சமுதாயத்தில் - கல்விப் பட்டங்கள் பெறுவதற்காக
நமக்கிருந்த தடைச் சுவர்கள் எல்லாவற்றையும் இடித்து நொறுக்கியது தந்தை பெரியாரின் கைத்தடி என்ற மிகப்பெரிய ஆயுதம்!
தஞ்சை, மார்ச் 1 ஜாதிப் பட்டம் மட்டுமே பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தில், இந்தக் கல்விப் பட்டங்கள் பெறுவதற்கு நாம் பட்ட பாடு, நமக்கிருந்த தடைச் சுவர்கள் எல்லாவற்றையும் இடித்து நொறுக்கியது, தந்தை பெரியாரின் கைத்தடி என்ற மிகப்பெரிய ஆயுதம் அல்லவா என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முப்பெரும் விழா!
கடந்த 18.2.2022 - வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு புத்தர் அரங்கில் காணொலி மற்றும் நேரடி நிகழ்ச்சியாக - 1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு 94 ஆம் ஆண்டின் தொடக்கவிழா - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா - பெரியார் பெருந்தொண்டர்களுக்குக் பெரியார் கைத்தடி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவில், காணொலிமூலம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
மாமனிதர் பெரியார் என்பவர்
இந்த மண்ணில் பிறக்கவில்லை என்றால்...
ஒரு சுய சிந்தனை - பெரியாருடைய சுய சிந்தனையினுடைய ஆற்றல், இதுவரையில் மற்றவர்கள் யாருக்கும் இல்லாதது.
நல்ல பணி செய்திருக்கிறார் நம்முடைய ஓவியக் கவிஞர் வீரமணி அவர்கள். எனக்கே வியப்பாக இருக்கிறது. எம்.ஏ. தமிழ் முதுகலை, எம்.ஏ. இதழியல் முதுகலை, எம்.ஏ. தொழில்நுட்பம் போன்ற படிப்பு களைப் படித்திருக்கிறார்.
இவ்வளவும் எப்படி முடிந்தது?
மாமனிதர் பெரியார் என்பவர் இந்த மண்ணில் பிறக்கவில்லை என்றால், இவ்வளவு பட்டங்கள் நம் முடைய பெயருக்குப் பின்னால் வந்திருக்க முடியுமா?
நமக்கிருந்த தடைச் சுவர்கள் எல்லாவற்றையும் இடித்து நொறுக்கியது தந்தை பெரியாரின் கைத்தடி
ஜாதிப் பட்டம் மட்டுமே பெயருக்குப் பின் னால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தில், இந்தக் கல்விப் பட்டங்கள் பெறுவதற்கு நாம் பட்ட பாடு கொஞ்சமா? நமக்கிருந்த தடைச் சுவர்கள் எல்லாவற்றையும் இடித்து நொறுக் கியது, தந்தை பெரியாரின் கைத்தடி என்ற மிகப்பெரிய ஆயுதம் அல்லவா!
இந்தத் தடிக்கே அவ்வளவு ஆற்றல் உண்டு.
''பெரியார் எனும் கடப்பாரை'' என்னும்போது, அந்தக் கடப்பாரை பெயர்க்கவேண்டியதைப் பெயர்த்தெடுத்தது.
பெரியாரின் சிந்தனைகள் என்பன சில நேரங்களில் அறியாமையை நோக்கிய துப்பாக்கி களாகவும், வெடிகுண்டுகளாகவும் இருந்திருக் கின்றன. வைதீகக் கோட்டையில் அது விழுந் திருக்கிறது.
நல்லாசிரியர் விருது பெற்றவர் - திட்ட ஒளி பன்னாட்டு ஆலோசகர் நம்முடைய ஓவியர் மாமணி வீரமணி அவர்கள், புத்தர் - அயோத்திதாசப் பண்டிதர் - இரட்டைமலை சீனிவாசன் - அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் வரிசையில் தற்போது பெரியாருக்கு சிலை வைத்திருக்கிறார்.
பெரியார் அவர்களுக்கு
எண்ணற்ற சீடர்கள் உண்டு!
அடக்கமாக, அமைதியாக, கொள்கை வழியில் அவர் மிகப்பெரிய அளவில் இந்தப் பணிகளைச் செய்து, தான் திருமணம் செய்துகொள்ளாமல், தன்னுடைய குடும்ப உறவுகளுக்கெல்லாம் நல்வாழ்வு அமைத்து - நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பல தகுதிகளைப் பெற்றவர் - அவருடைய தந்தை அய்யா நாகப்பனார் அவர்கள் பெரியார் கொள்கைகளைப் பின்பற்றப்படக் கூடியவர்.
பெரியார் அவர்களுக்கு எண்ணற்ற சீடர்கள் உண்டு; கண்ணுக்குத் தெரிந்த கருப்புச் சட்டைத் தோழர்களும் உண்டு. கண்ணுக்குத் தெரியாமல், அப்பாற்பட்டு இருக்கின்ற கருப்புச் சட்டை அணியாத தோழர்களும் உண்டு.
ஆகவே, ஓவியர் மாமணி வீரமணி அவர்கள் அப்படிப்பட்ட ஓர் அருமையான பணியை சிறப்பாக செய்திருக்கின்றார் என்பது சாதாரணமான ஒன்றல்ல.
தந்தை பெரியார் அவர்கள், அறிவின் தேக்கம் என்று சொல்லும்பொழுது, அந்த அறிவு யாருக்குப் பயன்படவேண்டும்?
நம்முடைய நாட்டில் அறிஞர்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், வெறும் அறிஞர்களாக இருந்தால் மட்டும் போதாது; அந்த அறிவு யாருக்குப் பயன் பட்டது? அவர் பொருள் பெறுவதற்கு? அவர் பட்டம் பெறுவதற்கு? அவர் சம்பாத்தியத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு? அவர் செல்வத்தைப் பெருக்குவதற்கு? அவர் பதவி பெறுவதற்கு? அவர் உயர்வதற்கு மட்டும்தான் தனிப்பட்ட முறையிலே அது பயன்பட்டு இருக்கிறது.
தந்தை பெரியாரின் சிந்தனை - நம்மை மானம் உள்ளவர்களாக ஆக்கிற்று!
ஆனால், தந்தை பெரியார் என்ற தொண்டின் தூய உருவம் - எண்ணற்றவர்களுக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறார். ஏணியும், தோணியும் எப்படி தான் இருந்த இடத்தில் இருந்துகொண்டு, அதனுடைய பணியை செய்துகொண்டிருக்கிறதோ, அதுபோல தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை என்பது, நம்மைப் போன்ற எண்ணற்றக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை பட்டதாரிகளாகவும், அதைவிட மானம் உள்ளவர்களாகவும் ஆக்கிற்று.
'மானமிகு சுயமரியாதைக்காரன்' என்று நம் முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஒரு வரியில் தன்னை விமர்சனம் செய்துகொண்டார்.
சுயமரியாதை என்ற சொல்லுக்கு...
இங்கே நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைச் சுட்டிக்காட்டினார்
சுயமரியாதை என்று சொல்லுக்கு உலகத்தில் உள்ள அத்துணை அகராதிகளையும் புரட்டினா லும், அதற்குச் சமமான வார்த்தை இல்லை.
நாமெல்லாம் பிறக்காத காலத்தில், செங்கல் பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. அப்பொழுது கலைஞர் அவர் களுக்கு 5 வயது. செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன் பயன்படுத்துகிறார்.
திராவிட இயக்கத்தினுடைய தொடர்ச்சி எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள். திராவிட சமுதாயம் எழுச்சியும், அறிவும் பெறக் கூடிய அளவிற்கு, இன்றைக்கும், அதனுடைய தொடர்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
எனவே, அரசியலுக்குப் போகாத பெரியார், அரசியலை நிர்ணயிக்கிறார். பொருளாதாரம் படிக்காதவரிடமிருந்துதான், பொருளே ஆதார மாக இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய அளவிற்கு வாய்ப்பை உருவாக்கிக் காட்டினார்.
சுயமரியாதைதான் மனிதனுக்கு மிகப்பெரிய ஆற்றலைத் தரும்!
இங்கே வரவேற்புரையாற்றிய தோழர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் தேவ. ருக்மாங்கதன் பண்பாட்டுப் படையெடுப்பு பற்றிக் கூறினார்.
நோய்நாடி நோய் முதல் நாடுதல்,
அந்த நோய்நாடி நோய் முதல் நாடுதலை தந்தை பெரியார் அவர்கள் செய்ததினுடைய விளைவுதான், அவர் கண்ட சுயமரியாதை இயக்கம். அந்த சுய மரியாதைதான் மனிதனுக்கு மிகப்பெரிய ஆற்றலைத் தரும்.
பெரியாருக்காக சுயமரியாதையைப் பெறவேண் டிய அவசியமில்லை -
திராவிடர் கழகத்துக்காக சுயமரியாதையைப் பெறவேண்டிய அவசியமில்லை -
பகுத்தறிவாளர் கழகத்துக்காக சுயமரியாதையைப் பெறவேண்டிய அவசியமில்லை -
பகுத்தறிவாளர் எழுத்தாளர் முன்னேற்றத்திற்காக சுயமரியாதையைப் பெறவேண்டிய அவசியமில்லை-
அல்லது நமக்காக மட்டும் சுயமரியாதையைப் பெறவேண்டிய அவசியமில்லை.
புத்தியை யார் பயன்படுத்துகிறானோ அவன் புத்தன்!
ஒருமுறை எழும்பூரில் உள்ள புத்தர் சொசைட்டி யில் உரையாற்றும்பொழுது, ''20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற புத்தர் தந்தை பெரியார்'' என்று சொன்னேன்.
அப்பொழுது தந்தை பெரியார் உரையாற்றும் பொழுது பதில் சொன்னார், ''பவுத்த நெறி என்பது புத்தகத்தில் இருக்கிறது. நான் மட்டும் புத்தன் இல்லை - புத்தியை யார் பயன்படுத்துகிறானோ அவன் புத்தன்'' என்று சொன்னார்.
எவ்வளவு எளிமையான சிந்தனை- எவ்வளவு ஆழமான கருத்துகள் - எவ்வளவு மறுக்கப்பட முடி யாத லட்சிய விளக்கம்.
பல்கலைக் கழகப் பேராசிரியரின் வியப்பு!
இதை நான் நாகபுரியில் இருக்கக்கூடிய பல்கலைக் கழகத்தினுடைய ஆய்வுச் சொற்பொழிவிலே குறிப் பிட்டேன். எதிரிலே பாலி மொழியை பயிற்றுவிக்கக் கூடியவர் - நான் ஆங்கிலத்தில் பேசுவதைப் புரிந்து கொண்டு, எழுந்து வந்து என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார் மேடையிலே!
''நான் இதுவரை பாலி மொழியை பயிற்றுவித்து - பவுத்தத்தை ஆய்வு செய்திருக்கிறேன்.டாக்டரேட் வாங்கியிருக்கிறேன். ஆனால், நீங்கள் சொன்ன கருத்து இருக்கிறதே, புத்தியைப் பயன்படுத்துபவன் தான் புத்தன் என்று பெரியார் சொன்னதை சொன்னீர்களே, இதுவரை எனக்குத் தோன்றவில்லை; எங்களுக்குத் தோன்றவில்லை.
பெரியார் எப்படிப் பெரியார் என்பது இப் பொழுதுதான் புரிகிறது'' என்று நாகபுரி மேடையில் ஏறி முழங்கினார் அவர்.
அதே நாகபுரிதான் ஆர்.எஸ்.எஸ். அமைப் பிற்கும் தலைமையிடம்.
பெரியாருடைய பணி என்பது இன்றும் தேவைப்படுகிறது!
அதே 1925 ஆம் ஆண்டில்தான் ஆர்.எஸ்.எஸ். நச்சுக் குளம் தோண்டப்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், தந்தை பெரியார் அவர்களுடைய பணி என்பது இன்றும் தேவைப்படுகிறது - என்றும் தேவைப்படும். ஏனென்றால், விஞ்ஞானத்திற்கு முற்றுப்புள்ளி கிடையாது.
செல்போன் ஒன்றைக் கண்டுபிடிப்பதோடு விஞ்ஞானம் நின்றுவிடுவதில்லை. 10, 20 கருவிகளின் வேலையை, ஒரு செல்போன் செய்துவிடுகிறது.
எனவே, அறிவியல் என்பது சிந்தனையினுடைய ஊற்று. ஊற்றுகள் எப்பொழுதும் நின்றுவிடுவதில்லை. தோண்டத் தோண்ட அந்த ஊற்றுகள் பெருகிக் கொண்டே இருக்கும்.
மனித குலத்தினுடைய இன நலத்திற்கு!
அதுபோலத்தான் பகுத்தறிவு - அந்தப் பகுத் தறிவை பயன்படுத்தவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் பயன்படுத்தினார்கள். தன்னு டைய நலத்திற்காக அல்ல - அதை பிறர் நலத்திற்கு - பொது நலத்திற்கு - மனித குலத்தினுடைய இன நலத்திற்குப் பயன்படுத்தினார்கள்.
இனம் என்று சொல்லும்பொழுது, மனித இனம் , சமத்துவம், சம வாய்ப்பு, சமூகநீதி, பாலின வேற்று மைகள்கூட இருக்கக்கூடாத ஒரு சூழல் - இவை அத்தனையும் இணைந்ததுதான் பெரியாருடைய வரலாறு.
இன்றைக்கு இளைஞர்கள், பெரியாரைப் பார்க்காத தலைமுறையினர்கூட ஏன் ஈர்க்கப்படுகிறார்கள்?
ஒரே பதில், விஞ்ஞானத்தை ஏன் எல்லோரும் விரும்புகிறோம்; அதே காரணம்தான், பெரியாரை யாரும் அகற்றிவிட முடியாது.
விஞ்ஞானத்தை ஒழித்துவிட்டு, எப்பேர்ப்பட்ட வர்களாலும் இருக்க முடியாது.
இன்றைக்கு ராமர் கோவில் கட்டவேண்டு மானாலும், விஞ்ஞானத்தின் துணைகொண்டுதான் அவர்கள் திட்டமிடவேண்டும். இன்றைக்கும் விஞ்ஞான கருவிகளைப் பயன்படுத்தித்தான் வந்தாக வேண்டுமே தவிர, வெறும் , வில்லும், வேலும் கொண்டதல்ல.
வில்லையும், அம்பையும் நம்பிக் கொண்டிருக்க முடியாது
எதிரிகளை சமாளிக்கவேண்டுமானால், ரஃபேல் விமானத்தைத்தான் வாங்கவேண்டி இருக்கிறதே தவிர, ராமரின் ஆயுதம், ஏழு மராமரங்களையும் துளைத்தது என்று சொல்லி, வில்லையும், அம்பையும் நம்பிக் கொண்டிருக்க முடியாது.
அதுதான் அறிவின் தேக்கம் - அந்த அறிவின் தேக்கத்தினுடைய விளைவுகள் - பாரதூர விளைவுகள் - அவருடைய எண்ணங்கள் - இன்றைக்கு உலகளாவிய அளவிற்கு செல்லுகின்ற நிலை உள்ளது.
ஒப்பற்ற சுய சிந்தனையாளரான தந்தை பெரியார் அவர்களை ஆய்வு செய்யச் செய்யத்தான் மேலும் அறிவாண்மை வரும். உலகம் அதைக் கண்டு கொண் டிருக்கிறது.
நான் பகுத்தறிவாளர் கழகத்தினுடைய நிறைவு விழாவில் உரையாற்றும்பொழுது சொன்னேன். உங்களில் பலர் அந்த உரையைக் கேட்டிருக்கலாம்.
The search for self-respect
அவ்வுரையில் மிக முக்கியமான ஒரு கருத்தைச் சொன்னேன். அண்மையில் ஒரு புத்தகத்தை அமெரிக்கப் பேராசிரியர் தோழர் அரசு அவர்கள் கொடுத்தார்.
''The search for self-respect'' என்ற புத்தகம். 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட புத்தகம் அது. ஆனால், நம்முடைய கைகளுக்கு வந்தது இப்பொழுதுதான்.
அந்த புத்தகத்தின் ஆசிரியர் ஒரு மருத்துவர் - பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் நிபுணரான Maxwell Maltz M.D. என்பவர் ஆவார்.
''The search for self-respect'' - ''சுயமரியா தைக்கான ஆய்வை நாங்கள் செய்கிறோம். தத்துவ ரீதியாக மனிதர்கள் என்று சொன்னால், சுயமரியாதைதான் அடிப்படையானது. அதை எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் தேடிப்பிடிக் கிறீர்களோ, அவ்வளவுக்கு உங்களை உயர்த் தும்'' இவையே இந்தப் புத்தகம் முழுவதும் உள்ள கருத்துகள்.
''இது எனக்கு ஒரு புதிய சிந்தனை'' என்று அந்த நூலாசிரியர் சொல்கிறார்.
இதுவரையில் இந்த வார்த்தையைப் போட்டு ஒரு புத்தகம் வந்ததாக எனக்குத் தெரியவில்லை.
நூறாண்டுகளுக்கு முன்னால், சுயமரியாதை என்ற சொல்லைப் பயன்படுத்தினார்!
ஆனால், இந்த சொல்லை ஒரு நூறாண்டுகளுக்கு முன்னால், தந்தை பெரியார் அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றார்.
அதனுடைய விரிவாக்கம், அதனுடைய புலப்பாடு - வெளிப்படும் வண்ணம்
''ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
அவள் அணிந்திராத அணியாவார்
அறிந்திராத அறிவாவார்''
என்றார் புரட்சிக்கவிஞர்.
இந்த ஆயிரம் ஆண்டுகளிலேயே இத்தகைய ஓர் அறிவுச் சிந்தனையாளர் கிடையாது என்று சொன் னாரே - அதற்கு இதைவிட உதாரணம் - இதைவிட சான்று - இதைவிட தரவுகள் வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?
அப்படிப்பட்ட அருமையான சிந்தனை வெளிச்சம் இன்றைக்கு இதன்மூலம் கிடைத்திருக்கிறது. அந்தப் பெருமை செங்கல்பட்டுக்கு இருக்கிறது.
தோழர் ஓவியர் மாமணி வீரமணி அவர்களுடைய இல்லத்தில், அருமையான இந்த முயற்சிகளை, எளிய முறையிலே, அவருடைய சக்திக்கு அப்பாற்பட்டு இதை செய்திருப்பது வியக்கத்தக்கது- பாராட்டத் தக்கது. 10 ஆயிரம் நூல்களைச் சேர்த்திருக்கிறார்; அதற்காக அவர் விளம்பரம் செய்து லாபம் அடையவில்லை. ஆனால், அவரைத் தேடிப் பிடித்து நாம் பாராட்டவேண்டும்.
இங்கே ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
மாவட்டத் தலைவர் அ.கோ.கோபால்சாமி அவர் களின் முயற்சியால், கலைஞர் அவர்களை அழைத்து, ஒரு பெரிய வரலாற்று நிகழ்ச்சியை செங்கல்பட்டில் நடத்தினோம்.
சமூகநீதி, சுயமரியாதை - இலட்சினை!
இப்பொழுது நடைபெறும் திராவிட ஆட்சியில், சமூகநீதி, சுயமரியாதையை - இலட்சினையாகவே அதை ஆக்கியுள்ளார்கள்.
ஆகவே, அந்த சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஈடான ஒரு சொல் கிடையாது. அதே செங்கல்பட்டில், ஒரு பெரிய திறந்த அரங்கு - இந்தக் கரோனா காலத்துக் கொடுமைகள் குறைந்து கொண்டு வருகின்றன என்ற செய்தி நல்ல செய்தி - ஆறுதலான செய்தி - நம்பிக்கையூட்டக் கூடிய செய்தி.
மானமும், அறிவையும் தருவதுதான்
சுயமரியாதை!
இந்தக் காலகட்டத்தில், செங்கல்பட்டில் கலைஞர் அவர்களை அழைத்து, எப்படி ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தினோமோ, அதேபோலத்தான், ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவேண்டும். அந்த நிகழ்ச்சிக்கு, திராவிட இயக்கத்தவர்கள், சுயமரியாதை உணர்வாளர்கள் - அவர்கள் எக்கட்சி, எம்மதம், எந்தப் பிரிவு என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், எல்லோரும் வேற்றுமை இல்லாமல், சுயமரியாதைதான் மனிதனுக்கு மிகப்பெரிய அளவிற்குத் தேவையான ஒன்று என்ற அந்த உணர்வோடு, அதை மீண்டும் இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
மனித சமூகத்தின் வாழ்வாதாரம் என்பது சுயமரியாதையில் இருக்கிறது. 'மானமும், அறிவும்தான் மனிதர்க்கு அழகு' என்று சொல்லும்பொழுது - அந்த மானமும், அறிவையும் தருவதுதான் சுயமரியாதை.
சுயமரியாதை என்று சொல்லும்பொழுது, அது தன் மரியாதை மட்டுமல்ல - அது சமுதாயத்திற்காக - 'சுயமரியாதை கொள் தோழா' என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்.
'கொள்' என்று சொல்லும்பொழுது, அது கொள்முதல். அப்படிப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பை இந்த சிலை திறப்பின்மூலமாக உருவாக்கிக் கொடுத்திருக்கின்ற நம் அருமைத் தோழர் ஓவியர் மாமணி வீரமணி அவர்களைப் பாராட்டி, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற உங்களுக்கு நன்றி தெரிவித்து, செங்கல்பட்டுத் தோழர்களுக்கும், மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து கேட்பாளர்களாக இருக்கக்கூடிய உங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
இதே செங்கல்பட்டில் விரைவில் திறந்தவெளி அரங்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கூட்டி, இந்த உணர்வோடு, இதையே நாம் இந்த ஆண்டு பிரதிபலிப்போம்.
சுயமரியாதை என்பதுதான் நமக்கு சூளுரை!
ஒவ்வொரு ஆண்டும் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்ற தேதிகளையொட்டி, சுயமரியாதையைப் பரப்புவோம் - சுயமரியாதை என்பதுதான் நமக்கு சூளுரை - அதுதான் நமக்கு சூடு போட்ட ஒன்று என்ற உணர்வை நாம் பெறுவோம்.
அதுதான் அய்யா அவர்கள் நமக்குக் கற்பித்திருக்கின்ற பாடம். சுயமரியாதை என்பது புத்தர் காலத்திலிருந்து தொடங்கியது என்பதற்காகத்தான் - அயோத்திதாசப் பண்டிதராக இருந்தாலும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களானாலும், அதேபோல, நம்முடைய இரட்டைமலை சீனிவாசன் அவர்களானாலும், நம்முடைய தாத்தாக்களும், வழிகாட்டிகளாகவும், முன்னோடிகளாகவும் இருக்கின்ற அத்தனை பேரையும் பெருமைப்படுத்தக் கூடியதாக அந்தத் திறந்தவெளி அரங்கம் அமையும்- அமையவேண்டும் - அமைப்போம் என்ற நம்பிக்கையோடு தோழர் ஓவியக் கவிமாமணி வீரமணி அவர்களைப் பாராட்டுகிறோம், மகிழ்ச்சியடைகிறோம்.
தோழர்கள் அழைத்தால்
செங்கல்பட்டிற்கு வருவேன்!
இத்தனை ஆண்டுகாலம் இவ்வளவு தெளிவான உறுதியோடு இருந்திருக்கிறார் என்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அவர் அழைத்தால், அதேபோல அவருடைய தோழர்களாக இருக்கக்கூடிய நம்முடைய பொறுப்பாளர்கள் அழைத்தால் செங்கல்பட்டிற்கு வருவேன். மீண்டும் அந்த உணர்வை நாம் உருவாக்குவோம்.
சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை ஊர்வலம் நடைபெற்றது என்பதெல்லாம் பழைய வரலாறு. அப்படிப்பட்ட உணர்வுகளை நோக்கித்தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.
காரணம், பெரியார் என்ற சிலை திறப்பிற்கு உரிய அந்த நாயகரை மீண்டும் நினைவூட்டுகிறேன்,
புரட்சிக்கவிஞர் அவர்கள் அழகாக சொன்னதைப்போல,
''ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
அவள் அணிந்திராத அணியாவார்
அறிந்திராத அறிவாவார்'' என்னும் கவிதை வீச்சு பெரியாரை நமக்கு விளக்கியிருக்கிறது. அதை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு போய்ச் சேர்க்கின்ற வாய்ப்பினை இன்றைக்கு உருவாக்கியிருக்கிற தோழர்களை, குறிப்பாக ஓவியர் வீரமணி அவர்களையும், அவருடைய குடும்பத்தினரையும், தோழர்களையும், கொள்கை உறவுகளையும் அவர்கள்தான் நம்முடைய உறவுகள் - எனவேதான், நம்முடைய உறவுகள் அத்துணை பேரையும், நமக்கு நாமே பாராட்டிக் கொள்வதைப்போல, பாராட்டினைத் தெரிவித்து, அருமையான வாய்ப்பை அளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
ஓங்குக சுயமரியாதை!!!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment