பள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
சென்னை,மார்ச்2- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மனைவி துர்கா, மகள், மருமகள், பேரக் குழந்தைகளுடன் பங்கேற்றார். அப்போது அங்குள்ள குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அத்துடன், பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை பள்ளியின் இல்லத் தலைவி நிர்மலாவிடம் வழங்கினார். அப்போது பள்ளி முதல்வர்கள் பெர்பின், ஜெசிந்தா ரோஸ்லின் ஆகியோர் உடன் இருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் குறிப்பிட்ட தாவது, என் பிறந்தநாளின்போது ஆண்டுதோறும் மறக்கா மல் நீங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறேன். யார் என்னை வாழ்த்தினாலும், உங்களுடைய வாழ்த்துக்கு நிச்சயம் அது ஈடாகாது. அதனால்தான் நானும் ஆண்டுதோறும் மறக் காமல் உங்களை தேடி வருகிறேன். இந்த ஆண்டு எனக்கு 69 வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். 39 வயதுதான் இருக்கும் என்பார்கள். அதற்கு காரணம், நான் உடல்நலத்தை, உணவுப் பழக்கத்தை, உடற்பயிற்சியை எல்லாம் முறையாக செய்து கொண்டு இருக்கக் கூடியவன். என்னதான் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இருந்தாலும், உங்களை சந்திக்கின்றபோது 5 வயது குறைந்துவிடுகிறது. இந்தப் பள்ளிக்கு ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக ஒவ்வொரு பொறுப்பில் இருந்தும் வந்திருக்கிறேன். ஆனால், எப்போதும் அந்த பொறுப்பு களைப் பற்றி கவலைப்பட்டது கிடையாது. உங்களில் ஒருவனாக நான் என்றைக்கும் இருக்கிறேன். அதுதான் யாராலும் பிரிக்க முடியாதது. முதலமைச்சர் பதவியை நான் என்றைக்கும் பதவியாக நினைத்ததில்லை. அதை பொறுப்பு என்று நினைத்து, அந்தப் பொறுப்பை உணர்ந்து என்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன். இந்த பிறந்த நாள் என்றும் மறக்க முடியாது. உங்கள் வாழ்த்துகளோடு என்னுடைய பயணம் தொடரும், என்னுடைய பணி நிறைவேறும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment