பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை
சென்னை, மார்ச் 5 தமிழினத்தினுடைய பெருமையை உலகளாவிய நிலைக்கு உயர்த்திக் கொண்டிருக்கக் கூடியவர் நம்முடைய மகாகவி விருதாளர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
வடசென்னை தமிழ்ச்சங்கம் நடத்திய சென்னை இலக்கிய சந்திப்பு - பாராட்டு விழா!
கடந்த 26.2.2022 அன்று மாலை 6.30 மணிக்கு வடசென்னை தமிழ்ச் சங்கம் நடத்திய சென்னை இலக்கிய சந்திப்புக் கூட்டத்தில் கலைஞர் செம்மொழி விருது, உலகத் தமிழ்ப்பீட விருது மற்றும் மகாகவி விருதாளர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் காணொலிமூலம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
தமிழினத்தினுடைய பெருமையை உலகளாவிய நிலைக்கு உயர்த்திக் கொண்டிருக்கக்கூடியவர்
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய நம்முடைய சிறப்புமிகு கவிப்பேரருவி, ஒப்பற்றக் கவிஞர், இனமானத்தின், தன்மானத்தின் ஒரு முழு வடிவமாகத் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அருமைக் கவிஞர்- மகாகவி விருதாளர் என்ற அளவிலே, இன்றைக்கு உலகளவில் விருது பெற்று - தமிழினத்தினுடைய பெருமையை உல களாவிய நிலைக்கு உயர்த்திக் கொண்டிருக்கக் கூடியவரும், கலைஞர் செம்மொழி விருது பெற்றும், உலகத் தமிழ்ப்பீட விருது பெற்றும் - என்றென்றைக்கும் எல்லாவற்றையும் எந்த விருது பெற்றாலும், அவை அத்தனையும் ஈரோட்டுப் புகழே என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தன்னுடைய பெயருக்கு முன்னால், ஈரோட்டை இணைத்துக்கொண்டு, வெறும் பெயரோடு என்றில்லாமல் அந்த உணர்வோடு கலந்துவிட்ட ஓர் அற்புதமான ஒப்பற்றக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
விழாவிற்குத் தலைமை தாங்கும் அருமை சொற்கோ கருணாநிதி அவர்களே,
முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய வடசென்னை தமிழ்ச்சங்கத் தலைவர் அருமைத் தோழர் எ.த.இளங் கோவன் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற கவிவேந்தர் மு.மேத்தா அவர்களே, கவிஞர் இந்திரன் அவர்களே,
தி.மு.க. மாநில இலக்கிய அணி செயலாளர் ஒப் பற்றத் தன்மானக் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களே,
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் திருமிகு கால்டுவெல் வேள்நம்பி அவர்களே,
வரவேற்புரையாற்றிய ஜெ.இளவரசி அவர்களே,
நன்றியுரையாற்றவிருக்கக்கூடிய வடசென்னை தமிழ்ச்சங்க செயலாளர் வழக்குரைஞர் பிரித்திவி ராஜ் அவர்களே,
அருமைப் பெரியோர்களே, சான்றோர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
புரட்சிக்கவிஞர் அவர்களால் பக்குவப்படுத்தப்பட்டவர்!
நம்முடைய புரட்சிக்கவிஞர் அவர்களுக்குப்பிறகு அத்தனை அம்சங்களைப் பெற்றவர், அவரால் பக்குவப்படுத்தப்பட்டு, அந்தப் பட்டறையில் மிக அருமையான அளவிற்கு வந்தவர் - ஒப்பற்றவர் நம்முடைய ஈரோடு தமிழன்பன் அவர்களாவார்கள்.
அவர் எப்பொழுதும் வீரத்தின் விளை நிலம் - அவருடைய குரலில் இருக்கின்ற கம்பீரத்தில், புரட்சிக் கவிஞருடைய திண்மையை அதில் பார்க்கிறோம்.
அதுபோலவே, அவர் புலவர் அய்யா இராமநாதன் அவர்களிடத்தில் கற்றவர் - கற்பிக்கப்பட்டவர்.
புலவர் இராமநாதன் அவர்களுடைய ஆற்றலைப் பற்றி, எப்படியெல்லாம் புரட்சிக்கவிஞர் அவர்கள் புகழுவார்களோ - அதேபோலத்தான் மிகப்பெரிய அளவிற்கு, நம்முடைய கவிஞர் அவர்களையும் பாராட்டியிருக்கிறார்கள்.
தமிழர்கள் பாராட்டப்படவேண்டும் - உலகளவில் பாராட்டப்படவேண்டும்!
அவர்களுக்கு இந்த விருதுகள் என்பது, மிகப்பெரிய பெருமைக்குரியது என்று கருது வதைவிட, அவருக்கு ஓர் அங்கீகாரம்- தமி ழர்கள் பாராட்டப்படவேண்டும் - உலகளவில் பாராட்டப்படவேண்டும். ஒருவர் மற்றவரை உயர்த்தவேண்டுமே தவிர, ஒருக்காலமும் தாழ்த்தக்கூடாது.
அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள். மற்ற இனத்தாரிடமிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென் றால், அவர்களைப் போன்று கொஞ்சம் செய் தாலும்கூட, நம்மினத்தாரைத் தோளிலே வைத்துக்கொண்டு கொண்டாடுங்கள் என்று சொல்வார்.
புரட்சிக்கவிஞருடைய எதிரொலியாக, பிம்பமாக இன்றைக்கு ஈரோடு தமிழன்பன் இருக்கிறார்
அப்படிப்பட்ட முறையில், எல்லோரும் புகழ்ந்து, எல்லோரும் பாராட்டக்கூடிய அளவிற்கு வந்து இன்றைக்கு உலக மகாகவிஞர் என்கிற அளவிற்கு, உலகக் கவிஞராக இன்றைக்கும் திகழ்ந்து கொண்டி ருக்கின்றார். ''உலகப் பார்வையோடு - பாரப்பா, உலகப்பா'' என்று அன்றைக்கே ஆரம்பித்துப் பாடிய புரட்சிக்கவிஞர் அவர்களுடைய எதிரொலியாக, பிம்பமாக இன்றைக்கு ஈரோடு தமிழன்பன் இரு க்கிறார்.
புரட்சிக்கவிஞர் அவர்கள், தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்று சொன்னார்.
தந்தை பெரியார் ஒருமுறை, பகுத்தறிவுப் பகலவன் என்ற முறையிலே, மிகத்தெளிவாகக் குறிப்பிட்டார்.
இராமசாமி என்ற ஒரு பிற்போக்குவாதி இருந்தான் என்று சொன்னால்,
நான் வியப்படைய மாட்டேன்
''அறிவு என்பது எல்லையற்றது - அதுமட்டுமல்ல, வள்ளுவன்தான் கடைசி அறிவாளி உலகத்தில் என்று நாம் முடிவு செய்துவிடக் கூடாது. அவரைத் தாண்டக் கூடியவர்கள் வரவேண்டும்'' என்று சொன்னார்.
பெரியார் அவர்களுடைய அந்தத் தொலை நோக்கும், தொலைப் பார்வையும் மிக முக்கியம் வாய்ந்ததாகும்.
தன்னைப்பற்றி சொல்லிக் கொள்கின்றபொழுது ஒருமுறை சொன்னார், ''இன்றைக்கு என்னைப் பெரிய புரட்சியாளன் என்றெல்லாம் சொல்கிறீர்கள்; இன்னும் 200 ஆண்டுகளுக்குப் பிறகு வரப் போகின்றவன், இராமசாமி என்ற ஒரு பிற்போக்குவாதி இருந்தான் என்று சொன்னால், நான் வியப்படைய மாட்டேன்; ஏனென்றால், அந்தக் கொள்கைகள் என்பன அவ்வளவு வேகமாக மற்றவர்கள் காலத்திலே வேறாகக்கூடியதாக இருக்கும்'' என்றார்.
அதுபோல, பார்க்கின்ற நேரத்தில், ஆசான் களையும் வெல்லக்கூடிய மாணவர்கள் தேவை இப்பொழுது. அது ஆசானுக்கு இழிவு அல்ல - ஆசானுக்குப் பெருமையே!
அந்த முத்திரையைப் பதித்தவர்தான் நம்முடைய ஈரோடு தமிழன்பன் அவர்கள் - ஒப்பற்றக் கவிஞர்.
எதிலும் அந்த வேகம் -அவர் எழுதுகின்ற சொற் கள் எல்லாம் - பெரிய இராணுவ வீரர்களின் கட்டுப் பாடுபோன்று இருக்கும்.
இராணுவ வீரர்கள் எப்பொழுதும் போரிடுவதற்கு எப்படித் தயாராக இருப்பார்களோ, அதுபோல தமிழை ஒரு போர்க் கருவியாக ஆக்கவேண்டும்.
பெரியார் அவர்கள் மொழியைப்பற்றி சொல்லும் பொழுது சொன்னார்கள். அதைப்பற்றி சரியாமல் புரிந்துகொள்ளாமல், சிலர் பேசிக் கொண்டிருக் கிறார்கள்.
இன்றைய போருக்கு எந்தக் கருவி சிறப்பானதோ அது கூர்முனைப்படுத்தப்பட வேண்டும்!
அது என்னவென்று சொன்னால்,
''மொழி எப்படி இருக்கவேண்டும் என்றால், அது போர்க் கருவியாக காலத்திற்கேற்ப இருக்கவேண்டும்'' என்று கூறினார்.
இன்றைய போருக்கு எந்தக் கருவி சிறப்பானதோ, அந்த அளவிற்கு அது கூர்முனைப்படுத்தப்பட வேண்டும். புத்தாக்கத்திற்குரியதாக ஆக்கவேண்டும்.
அந்தப் புத்தாக்கத்திற்கு உரியதாக இருக்கின்ற காரணத்தினால்தான், உலகக் கவிஞராக இருக்கின்ற பாபுலோல் மெரிடோ போன்றவர்களையெல்லாம் நமக்கு அடையாளம் காட்டி, மிகப்பெரிய அளவிற்கு எத்தனையோ கண்டங்களைத் தாண்டியவர்களை எல்லாம் அடையாளப்படுத்தி இதைச் செய்திருக் கிறார்.
இதுவரையில் நாம் அறிந்த மொழிகளிலே, நாம் அறிந்த கவிஞர்களிலேயே இதுபோன்ற ஒரு பணி யைத் தமிழ்நாட்டில் செய்து - ஒரு பெரிய அளவிற்கு உலகத்தை இணைக்கக் கூடிய அளவிற்குச் செய்தவர் நம்முடைய ஈரோடு தமிழன்பன் அவர்கள்தான்.
புதுவைத் தமிழ்ச்சங்கத்தினர் சென்னையில் விழா நடத்தியபொழுதும், அதில் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்பொழுதே எல்லை யற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன்.
பேராசிரியர் மணிகண்டன் போன்றவர்கள் அதில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவர் ஈரோடு தமிழன்பன்!
நம்முடைய ஈரோடு தமிழன்பன் அவர்களு டைய ஆற்றலுக்கு எத்தனையோ விருதுகள் இன்னும் வரவேண்டும்; ஏனென்றால், அவர்கள் கொஞ்சம்கூட சளைக்காதவர். எல்லாவற்றையும் விட அவருடைய தனித்தன்மை என்னவென் றால், புரட்சிக்கவிஞர் அவர்களைப் போலவே, கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவர்.
திராவிட இயக்கத்தினுடைய, பெரியாருடைய முத்திரைகளில் தனித்தன்மை வாய்ந்தது எது வென்று சொன்னால் நண்பர்களே, நட்பில் சமரசம் உண்டு; ஆனால், கொள்கையில் சமரசம் கிடையாது.
அந்தக் கொள்கையில் அவ்வளவு உறுதி; அவ்வளவு தெளிவு. அந்தத் தெளிவை அப் படியே எடுத்துக்கொண்டு வாழ்க்கையைக் கடந்து வருபவர் நம்முடைய ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகள்!
இன்னுங்கேட்டால், நான் ஈரோட்டு மாணவன்; அவர் ஈரோட்டுக்காரர். குருகுலத்திலே இருக்கக்கூடிய அளவிற்கு உரிமை பெற்றவர். அப்படிப்பட்டவர், புரட்சிக்கவிஞரோடு பழகியதோடு மட்டுமல்ல - அண்மையில் எனக்கு அவர் அனுப்பிய புத்தகத்தை நான் படித்து, வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகளை மூன்று, நான்கு கட்டுரைகளை எழுதினேன்.
அந்தப் புத்தகத்தைப் படிக்கும்பொழுது, புரட்சிக் கவிஞரோடு அவருக்கு இருந்த அனுபவத்தை எடுத்துக்காட்டியிருக்கிறார்.
அவரை எப்படிப்பட்டவராக, செதுக்கிக் கொண்டிருக்கிறார்?
புரட்சிக்கவிஞர் அவர்கள், சில நேரங்களில் எரிமலை வெடிப்பதுபோன்று வெடிப்பதும் உண்டு.
''அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்'' என்று அணைத்தும் கொள்ளக்கூடியவர்.
அப்படிப்பட்டவர், இவரை விரும்பி, விரும்பி கேட்டிருக்கிறார்; அழைத்திருக்கிறார். அதனால் பயனடைந்த அந்தப் பத்தாண்டுகளில் - பல நூறு ஆண்டுகளில் பெறும் அனுபவங்களையும் வடித் தெடுத்ததினுடைய விளைவாகத்தான், அவர் மிகப் பெரிய அளவிற்கு சிறப்படைந்துள்ளார்.
புரட்சிக்கவிஞர் திட்டமிடப்பட்டு அவர் இருட் டடிக்கப்பட்டார். ஆனால், அவருடைய தன்மை, அவருடைய பார்வையெல்லாம் - உலகப் பார்வை - மானுடத்துப் பார்வை - பாரடா, மானிடப் பரப்பை என்று சொல்லக்கூடிய அளவிற்கு வேகமாக சொன்ன வர்கள்.
இன்றைக்கும் புரட்சிக்கவிஞருடைய இடத்தை யாராலும் எட்டிப் பிடிக்க முடியாது
அப்படிப்பட்ட புரட்சிக்கவிஞர் அவர்களோடு நெருங்கிப் பழகி, அய்யா புலவர் இராமநாதன் அவர்களிடத்திலும் அவர் பாடம் பெற்று - அவருடைய மாணவராகவும் அவர் திகழ்ந்து - இத்தகைய பெருமைகளை அடைந்துள்ளார். இன்றைக்கும் புரட்சிக்கவிஞருடைய இடத்தை யாராலும் எட்டிப் பிடிக்க முடியாது. இப்படி சொல்வதினால், மற்ற கவிஞர்களை நாம் குறைத்து மதிப்பிடவில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல் உண்டு. நாம் அதைத்தான் பாராட்டவேண்டும். ஒருவர் இன்னொருவரை பாராட்டுவதற்கு என்ன காரணம் என்று, காரணத்தைத் தேடுங்கள்.
ஒருவரை உயர்த்துங்கள்; அவர்கள் நம்முடைய தோள்மீது ஏறி நிற்கலாம். ஆனால், அவர்களுடைய கால்களை இழுக்காதீர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன உணர்வு படைத்தவர்களாக இருக்கவேண்டும்.
மொழி உணர்வு, இன உணர்வு - இந்தப் பற்று என்பது மானுடப் பற்றுக்கு உகந்ததாகவும் அமைய வேண்டும்.
படுத்துக்கொண்டு நான் சுவைத்துக் கொண்டு இருந்தேன் - எப்படியெல்லாம் அவருடைய அறிவு, ஆற்றல் என்பதை மிகப்பெரிய அளவிற்குக் கண் டறிந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் - ஒரு கவிதை எழுதி, புரட்சிக்கவிஞருக்குப் படைத்திருக் கிறார்.
நாங்கள் எல்லாம் புரட்சிக்கவிஞரோடு பழகிய வர்கள். அதுமட்டுமல்ல, இந்தப் புத்தகத்தைப் படிக்கும்பொழுது, பழைய நிகழ்வுகள் எல்லாம் என் நினைவிற்கு வருகின்றன.
என்னுடைய இளமைக்காலம் முதற்கொண்டு, அவர்கள் புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு வந்த காலத்தில், மிகப்பெரிய அளவிற்கு நாங்கள் உபசரித்தவர்கள்; மாணவப் பருவத்திலிருந்து.
ஆகவே, அவருடைய பேச்சு, அவருக்குத் திடீரென்று வரக்கூடிய கோபம் - அதேநேரத்தில், உடனடியாக அடங்கிவிடக் கூடிய அவருடைய நட்பு - அந்த உணர்வுகள் - அவர் எப்படி சுவைப்பார் என்பதைப்பற்றியெல்லாம் அந்த நூலில் எழுதியி ருப்பதும், பல உரைகளில் அவர் பேசியதும் இன்னமும் தெளிவாக எனது நினைவிற்கு வருகிறது.
உலகத்தின் வரலாற்றில் நிலைக்கக்கூடிய வரலாற்றுச் சின்னங்கள்!ஒரு செய்தியை சொல்லுகிறார் -
தம்முடைய ஆசான், தம்முடைய வழிகாட்டியாக - யாரை முன்னுதாரணமாகக் கருதுகிறார்களோ, அவரிடத்தில் அந்தப் பெருமையைப் பெறுவதுதான் வாழ்நாளிலே இந்த விருதுகளைவிட மிகப்பெரியது. அதனால் விருதுகள் குறைவு என்று சொல்லவில்லை. ஒரு காலகட்டத்திலே அந்த விருதுகள்தான், உல கத்தின் வரலாற்றில் நிலைக்கக்கூடிய வரலாற்றுச் சின்னங்கள்.
ஆனால், இவை எல்லாம் எளிதில் நம்மவர்களை அடைந்ததில்லை. அதிலே ஒரு பெரிய திருப்பம் இப்போது ஏற்பட்டுள்ளது.
(தொடரும்)
No comments:
Post a Comment