('தி இந்து' ஆங்கில நாளிதழின் 24.2.2022 நாளிட்ட தலையங்கம்)
(கடந்த ஒன்பது மாத அரசாட்சியில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம் தான் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. பெற்றி ருக்கும் வெற்றி)
தமிழ்நாட்டில் ஆட்சி செலுத்திக் கொண்டு இருக்கும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டதால் பிளவுபட்டிருந்தனர் என்பது உண்மையே, ஆனாலும் கடந்த 9 மாத கால தி.மு.க. தலைமையிலான ஆட்சிக்கு ஒப்புதல் அளிப்பதாகத்தான் அக்கூட்டணியின் வெற்றி மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது.
ஒன்பது மாதங்களுக்கு முன்னர் கோவை மற்றும் தர்மபுரி மாவட்ட பகுதிகளிலிருந்து தி.மு.க. வேட்பாளர் எவரும் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு செல்ல இயலாதபடி செய்ததற்காக கொங்கு மண்டலத்தில் தங்களுக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழிவாங்கும் வகையில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கனகச்சிதமாக திட்டமிட்டு அதிமுகவிற்கு ஒரு படுதோல்வியைத் தந்துள்ளார். இந்தப் பகுதிகளுக்கு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் காட்டியது மட்டுமன்றி, அரசியல் பிரச்சாரத்துக்காக கோவை, சேலம் மாவட்டங்களுக்கு இரு அமைச்சர்களையும் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். மேனாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகி யோரின் புறக்கடையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளைக் கூட தி.மு.க. கைப்பற்றியுள்ளது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளைப் பற்றி மனநிறைவு கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள அளவில் அவர்களது செயல்பாடுகளை மிகச்சிறப்பாக ஆற்றச் செய்வதும் மிக முக்கியமானதாகும். மேனாள் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த அனுபவத்தின் மூலம் உள்ளாட்சி உறுப்பினர்கள் எந்த இடங்களிலெல்லாம் தவறுகளை செய்ய முடியும் என்பதை நன்றாக அறிந்திருப்பவர் அவர் என்பதால், மக்களுடன் இறுதியில் தொடர்புகொண்டு இருக்க வேண்டிய அவர்கள் ஆளுங்கட்சிக்கு களங்கம் விளைவிக்க இயலாதபடி அவர்கள் மீது கடுமையான கண்காணிப்பை மேற்கொள்வது மிகவும் இன்றியமையாதது ஆகும்.
1996ஆம் ஆண்டு அடைந்த தேர்தல் படு தோல்வியை போன்று இப்போது அதிமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அடைந்த தோல்விக்கு பணத்தின் சக்தி, அரசு இயந்திரத்தை மாநில அரசு தவறாகப் பயன்படுத்தியது என்றெல்லாம் குற்றம் சாட்டிடாமல் தங்களது தோல்வியை ஒப்புக் கொள்ளவே வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும்கட்சி அல்லாத எதிர்க்கட்சிகள் தோல்வி யடைவது இயல்பான ஒன்றே ஆகும். தங்களது ஜாதிக் கோட்டைகளுக்குள் தங்கள் அரசியல் செயல்பாடுகளை, சவுகரியமாக வைத்துக்கொண்டு, கட்சியின் உயர்நிலை குழுக்களில் இடம்பெற்றுள்ள இந்த தலைவர்களைத் துதிபாடும் தொண்டர்களின் ஆதரவுக்குள் மட்டுமே தங்கள் அரசியல் செயல்பாடுகளை அதிமுகவின் இந்த இரு தலைவர்களும் (ஓ.பி.எஸ்,. எடப்பாடி பழனிச்சாமி) வைத்துக்கொள்வது என்பது இனியும் இயலாதது ஆகும். மக்களின் வாக்குகளைக் கவர்ந்து இழுக்கும் இக்கட்சியின் ஆற்றல் என்பது எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோரால் கட்டமைக்கப்பட்ட கட்சி அமைப்பின் பலத்தின் அடிப்படையில் அமைந்தது ஆகும். ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற வி.கே.சசிகலா மற்றும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அ.ம.மு.கவினருடன் சமரசம் செய்துகொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் எழக்கூடும். இந்த இரு கட்சிகளும் பிரிந்திருப்பதால் எவர் ஒருவருக்கும் பயனில்லை என்பதால், தங்களுக்குள் இந்த இரு கட்சிகளின் தலைவர்களும் தொண்டர் களும் அனுசரித்துப் போக வேண்டும் என்பதற்கான நிர்ப்பந்தங்களும், அழுத்தங்களும் கட்சித் தொண்டர்களிடமிருந்து வரக்கூடும்.
தாங்கள் தமிழ்நாட்டில் இனியும் ஆதரவும் செல்வாக்கும் பெற்றவர்கள் அல்ல என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ள பா.ஜகவுக்கு அதிமுகவை தாக்கிப் பேசுவதற்கு அல்லது அதிமுகவின் செயற்குழு உறுப்பினர்களை தங்கள் கட்சிக்கு இழுப்பது பற்றியோ பாஜகவுக்கு எந்தவித தயக்கமும் இல்லை.
அதுபோலவே மக்களைப் பாதிக்கும் பிரச்சி னைகள் என்று வரும்போது ஒன்றிய அரசைக் குறை கூறி குற்றம் சாட்டுவதற்கு அதிமுக சற்றும் தயக்கம் காட்டக்கூடாது.
தேர்தல் புள்ளி விவரங்கள் எப்படி இருந்த போதிலும், தமிழ்நாட்டின் புதிய பகுதிகளில் பா.ஜ.க. வெற்றிகளைப் பெற்றுள்ளது என்பதை மறுக்க இயலாது. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு மாற்றுக் கட்சியாக பா.ஜ.கவை வாக்காளர்களின் ஒரு பகுதியினர் தேர்ந்தெடுத்துள்ளனர், என்றாலும் தமிழ்நாட்டு அரசியல் தி.மு.க. மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளின் மீது பா.ஜ.க. எந்தவித பெரிய பாதிப்பையும் ஏற்படுத்திவிடவில்லை. இரு திராவிட கட்சிகளுக்கும் எதிராக கடந்த காலத்தில் தமிழ்நாட்டு அரசியலில் கால் பதித்த சில கட்சியினர் ஒன்றிரண்டு தேர்தல்களில் பளிச்சென்று சாதனை படைத்துவிட்டு, அதன்பின் காணாமல் போய்விட்ட அனுபவத்தை வைத்துக்கொண்டு பார்க்கும்போது, பா.ஜ.வினால் மட்டும் திராவிட கட்சிகளுக்கு எதிரான ஒரு பலம் வாய்ந்த கட்சியாக நீடிக்க இயலுமா என்பதை இப்போது சொல்லிவிட முடியாது. இந்தத் தேர்தல் வெற்றி தி.மு.க.வின் திராவிட மாதிரி அரசுக்கு மக்கள் அளித்த ஒப்புதல் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், சில்லறை அரசியலில் கவனத்தை சிதற விட்டு விடாமல், மக்களின் பொருளாதார முன்னேற்றம், வாழ்வாதாரப் பிரச்சினைகள் மீது அவர் முக்கிய கவனத்தைத் தொடர்ந்து செலுத்த வேண்டும்.
நன்றி: ‘தி இந்து’ 24.2.2022
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment