"உங்களில் ஒருவன்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 1, 2022

"உங்களில் ஒருவன்!"

தமிழ்நாடு முதல் அமைச்சர் - தி.மு.. தலைவர் மாண்புமிகு மானமிகு மு.. ஸ்டாலின் அவர்கள் எழுதிய  "உங்களின் ஒருவன்" (பாகம் 1) என்னும் நூல் வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மய்யக் கூட்டரங்கத்தில் நேற்று மாலை (28.2.2022) தி.மு.. பொதுச் செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரை. முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நூலினை அகில இந்தியக் காங்கிரஸ் மேனாள் தலைவர் இராகுல் காந்தி எம்.பி. வெளியிட்டார்.

விழாவில் கேரள மாநில முதல் அமைச்சர் பினராயி விஜயன், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வியாதவ், ஜம்மு-காஷ்மீர் மேனாள் முதல் அமைச்சர் உமர் அப்துல்லா, கவிப் பேரரசு வைரமுத்து, இனமுரசு சத்யராஜ், தி.மு.. பொருளாளர்டி.ஆர். பாலு எம்.பி. ஆகியோர் உரையாற்றினர். ஏற்புரையை நூலாசிரியர் மு.. ஸ்டாலின் வழங்கினார். தி.மு.. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்புரை ஆற்றினார்.

வெறும் நூல் வெளியீட்டு விழா என்று ஒதுக்கிவிட முடியாது. அதில் பேசப்பட்ட கருத்துகள் இன்றைய கால கட்டத்திற்குத் தேவையான கருத்துகளும் தரவுகளுமாகும்.

இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஒன்றிய அரசின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று வலியுறுத்தும் போக்கு, சமூகநீதிக்கு எதிரான அணுகுமுறை நடைமுறைகள், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, நீட், மாநில உரிமைகள் பறிப்புப் பற்றியெல்லாம் ஆழமாகப் பேசப்பட்டன.

மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றிய பா... அரசின் போக்குக் குறித்து உமர் அப்துல்லா கூறியதை மிக முக்கியமான கருத்தாக  இராகுல் காந்தி குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இராகுல்காந்தி தமிழ்நாடு பற்றிக் குறிப்பிட்ட கருத்துகள் பற்றிப் பேசப்பட்டன. அதனையொட்டி இராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை.

இந்தியா என்பது ஒரே நாடு அல்ல; பல மாநிலங்களைக் கொண்ட ஒன்றியம் (Union of States) என்று தான் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதைச் சொன்னால் பிரிவினை முத்திரை குத்துவது அரசமைப்புச் சட்ட விரோதமான செயல் தானே!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3000 ஆண்டு வரலாறு டையது. அதன் மொழிக்கும் பண்பாட்டுக்கும் நீண்ட சரிதம் உண்டு. தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் இந்த வரலாறுகளை யெல்லாம் உள்வாங்கிக் கொள்ளாமல், தன் விருப்பம் போல் பேசினால், தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் அதனை ஏற்க மாட்டார்கள். இதனை இந்தியப் பிரதமர் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டின் இந்தத் தனித் தன்மைபற்றி தமது ஏற்புரையில் முதல் அமைச்சர்  தமிழ்நாடு சுயமரியாதை பகுத்தறிவு, தனித்த பண்பாடு, மாநில சுயாட்சி, திராவிடம் இவற்றை உள்ளடக்கியது என்று ஆழமாகப் பதிவு செய்தார். "திராவிட மாடல்" என்பது இவற்றை உள்ளடக்கியதே என்றும் குறிப்பிட்டார்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை, அறிஞர் அண்ணாவின் இனவுணர்வு, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இயக்கத்தை நடத்திய முறை, இனமானப் பேராசிரியரின் மொழி உணர்வு - இவைதான் எங்களை வழி நடத்தக் கூடியவை என்று முதல் அமைச்சர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள்தான் என்னைச் செதுக்கிய சிற்பிகள் என்றும் அறுதியிட்டார்.

அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் திராவிடத் தத்துவம் என்றும் விளக்கினார் முதல் அமைச்சர்.

அகில இந்திய அளவில் சமூகநீதி அடிப்படையில் ஒருங்கிணைக்கும் தமது முயற்சி பற்றிக் குறிப்பிட்ட முதல் அமைச்சர் அது வெற்றி பெறும் என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

1953இல் நான் பிறந்தபோது குலக்கல்வி திட்ட எதிர்ப்புப் போரட்டத்தை திராவிட இயக்கம் நடத்தியது. இப்பொழுது 'நீட்' எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துகிறோம். தேசியக் கல்வித் திட்டம் என்பதும் இந்த வகையைச் சார்ந்ததே! அந்த வகையில் திராவிட இயக்கத்தின் தத்துவப் பயணத்தின் நீட்சியைக் காண முடிகிறது.

சமூகநீதி உணர்வை தமிழ்நாட்டிலிருந்து பெறுகிறோம் என்று பீகார் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்

தேஜஸ்வியாதவ் கூறியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு கால கட்டம் இருந்தது. மண்டல் குழுப் பிரச்சினையில் மண்டல் எதிர் கமண்டல் என்ற போராட்டம் இந்திய அளவில்  மூண்டது.

அதனுடைய நீட்சியாக இப்பொழுது - சமூகநீதிக் கொடியை உயர்த்திப் பிடித்துள்ளார் நமது தமிழ்நாடு முதல் அமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.. ஸ்டாலின் அவர்கள்.

பி.ஜே.பி. வீழ்ச்சி அடையப் போவது இந்த சமூகநீதி என்னும் பிரச்சினையில் தான். இந்துக்களுக்காகப் பாடுபடுவ தாகவும், இந்துக்களை ஒன்று சேர்க்கப் போவதாகவும் கூவும் பி.ஜே.பி. தாழ்த்தப்பட்ட சமூக மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்துக்கள் தானே -அவர்களுக்கு இடஒதுக்கீடு, சமூகநீதி என்று வரும்போது எதிர்ப்பது ஏன்? என்ற கேள்வி இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வெடிக்கப் போகிறது. அதில் பிஜேபி, சங்பரிவார அஸ்திவாரம் அஸ்தமனம் ஆகப் போகிறது.

நேற்றைய நூல் வெளியீட்டு விழா - இந்திய அளவில் எதிரொலிக்கும் சிந்தனைகளை வாரி இறைத்திருக்கிறது என்பதுதான் உண்மை!

ஆண்டு 69இல் இன்று அடியெடுத்து வைக்கும் மானமிகு, மாண்புமிகு முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனம் நிறைந்த மணம் கமழும் வாழ்த்துகள்!

No comments:

Post a Comment