தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமல்ல - இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கும் மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீட்டினைப் பெற்றுத் தந்த பெருமை சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சரையே சாரும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமல்ல - இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கும் மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீட்டினைப் பெற்றுத் தந்த பெருமை சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சரையே சாரும்!

முதலமைச்சர் மு..ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் பெருமிதம்

சென்னை, மார்ச் 3   தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப் பட்டோருக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வாய்ப்பு  கிடைத்தது.அதனை உருவாக்கித் தந்த பெருமை நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல மைச்சரையே சாரும். அதுகுறித்து பத்திரிகைகள் ‘‘ஸ்டாலின் சகாப்தம்'' என்று  எழுதுகின்றன  என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.. சார்பில் முதலமைச்சர் மு..ஸ்டாலின்

பிறந்த நாள் - வாழ்த்தரங்கம்!

கடந்த 1.3.2022 மாலை சென்னை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வேளச்சேரியில்  உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்தரங்கத்திற்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அரசமைப்புச் சட்டப்படி செய்திருக்கிறார்களா?

நீட் தேர்வைப்பற்றி இங்கு சொன்னார்கள் நண்பர்கள். அரசமைப்புச் சட்டம் தெரிந்தவர்கள் வாதாடட்டும் எங்களிடத்தில்.

நீட்'  தேர்வை திணித்துள்ளார்களே - அதை அரசமைப்புச் சட்டப்படி செய்திருக்கிறார்களா? நீட் தேர்வை கொண்டு வரும்பொழுது அவர்கள் என்ன சொன்னார்கள்?

மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின்பொழுது ஊழல், தனியார் மருத்துவக் கல்லூரி களிலும் ஊழல் நடைபெறுகிறது என்றுதானே சொன்னார்கள்.

ஆனால், நீட் தேர்வின் யோக்கியதை என்ன?

இதற்கு முன் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததுபோன்று, வேறு எந்தத் தேர்விலாவது உண்டா?

அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நீட் தேர்வு எங்களுக்குத் தேவையில்லை என்றுதானே சொல்கிறோம்.

21 ஆண்டுகாலமாகப் போராடி

நுழைவுத் தேர்வை ஒழித்தோம்!

நுழைவுத் தேர்வு வந்த காலகட்டத்திலே, அத்தேர்வு தேவையில்லை என்று எதிர்த்துப் போராடிய இயக்கம் திராவிடர் இயக்கம். 21 ஆண்டுகாலம் தொடர்ந்து போராடி அத் தேர்வை ஒழித்தோம்.

கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, அதற்காக ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு அந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது.

அந்தச் சட்டத்தை ஏன் மறைத்தீர்கள்?

அந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் பொழுது, அதனால் என்ன கெட்டுப் போய் விட்டது?

நீட் தேர்வு எழுதாமல் மருத்துவரானவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு டாக்டராக இருக்கிறார்!

நீட் தேர்வினால், திறமையான டாக்டர்கள் என்று சொல்கிறீர்களே, நீட் தேர்வு எழுதாமல் படித்த டாக்டர்கள் எல்லாம் திறமையற்றவர்களா?

ஒரே ஒரு கேள்வி,

இன்றைக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்களுக்கு மருத்துவம் பார்க்கின்ற டாக்டர் கள் எல்லாம் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களா?

நம்முடைய நாட்டிலிருந்து உலகம் முழுவதும் மருத்துவர்களாக சென்றிருக்கிறார்களே, இன்றைக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய அளவிற்கு மருத்துவ ஆலோசகராக, அந்த நாட்டு குடியரசுத் தலைவருக்கு மருத்துவராக இருக்கிறாரே அவர் யார்?

ஈரோட்டில் உள்ள மொடக்குறிச்சி பகுதியிலிருந்து சென்றவர்தான்.

அவர் என்ன நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுச் சென்றவரா?

தகுதி, திறமையைப்பற்றி யாரிடம் கேட்கிறீர்கள்?

காமராசர் கேட்ட கேள்வி!

இதைத்தான் தந்தை பெரியார் கேட்டார், இதைத் தான் காமராசரும் கேட்டார்.

பெரியாருக்கும், காமராசருக்கும் இதில் வேறுபாடு கிடையாது.

காமராசர் மொழியிலேயே அதை சொல்கிறேன்.

‘‘நான் தாழ்த்தப்பட்டவனை டாக்டராக்கினேன்; அவன் ஊசி போட்டான்; எந்த நோயாளி செத்துப் போனான் சொல்.

அவனை பொறியாளராக்கினேன், அவன் கட்ட டம் கட்டினான், பாலம் கட்டினான்; எந்தக் கட்டடம் இடிந்து போயிற்று; எந்தப் பாலம் இடிந்து போயிற்று?

உன் தகுதியும் தெரியும், உனக்குச் சொல்லிக் கொடுத்தானே அவன் தகுதியும் தெரியும், போ!'' என்று கேட்ட பெருமை காமராசருக்கு உண்டு.

காரணம், திராவிட மண் இந்த மண்; அரசியலில் மாறுபட்டு இருந்தாலும்கூட.

கன்கரண்ட் லிஸ்ட் என்றால், ஒத்திசைவுப் பட்டியல் என்பதுதான் சரியான தமிழாக்கம்!

அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு நீட் தேர்வு என்று சொல்லும்பொழுது, அதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது தெரியுமா?

யூனியன் லிஸ்ட், ஸ்டேட் லிஸ்ட், கன்கரண்ட் லிஸ்ட் என்று மூன்று பட்டியல் உண்டு.

இந்த மூன்று பட்டியலில், கன்கரண்ட் லிஸ்ட் என்பதை சில நேரங்களில் பொதுப் பட்டியல் என்று தமிழாக்கம் செய்கிறார்கள்; பொதுப்பட்டியல் என்ற வார்த்தை  சரியான தமிழாக்கம் அல்ல.

கன்கரண்ட் என்று சொன்னால், ஒத்திசைவுப் பட்டியல்.

கன்கரண்ட் என்று சொன்னால், அந்தத் துறையில், மாநில அரசும், ஒன்றிய அரசும் சட்டம் இயற்றலாம். அப்படி சட்டம் இயற்றும்பொழுது, மற்றவர்களுடைய ஒப்புதலைப் பெறவேண்டும். கன்கரண்ட் என்று சொல்லக்கூடிய வார்த்தைக்கு இதுதான் பொருள்.

இதைத்தான் அரசமைப்புச் சட்டக் கர்த்தாக்கள் செய்தார்கள்.

அப்படிப்பட்ட ஒத்திசைவுப் பட்டியலில்தானே சுகாதாரம் இருக்கிறது.

இன்னுங்கேட்டால், நீங்கள் எதிலே முடிவெடுத் தாலும், மாநில அரசுகளைக் கலக்காமல், மக்கள் நல்வாழ்வுத் துறையில்  முடிவெடுக்க வேண்டியவற்றை நீங்கள் செய்ய முடியாது.

மருத்துவக் கவுன்சில் நீட் தேர்வை நடத்துவதே அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது!

இந்தத் தேர்வு உரிமை என்பது, பல்கலைக் கழகங்களுக்கு இருக்கக்கூடிய உரிமை. அதை யாரோ ஒரு குழு எடுத்துக்கொண்டு, மருத்துவக் கவுன்சில் என்று சொல்லக்கூடிய அந்தக் குழு செய்யலாம் என்ற அடிப்படையே அரசமைப்புச் சட்ட விரோதமாகும்.

எனவேதான், அரசமைப்புச் சட்டப்படி அவர்கள் நடக்காதபொழுது, அரசமைப்புச் சட்டத்தைக் காப் பாற்று என்று சொல்லக்கூடிய உரிமை தமிழ்நாட்டில் இருக்கிறது என்று சொன்னால்,

திராவிடத்தின் பெருமை அதுதான் -

திராவிட இயக்கத்தின் பெருமை அதுதான்-

இன்றைய முதலமைச்சருடைய பெருமை அது தான் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

இங்கே நண்பர்கள் சொன்னார்களே, எவ்வளவு பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறார் வரிசையாக என்று.

ஆறு தேர்தல்களில் வெற்றி பெற்றோம் என்று அழகாக சொன்னார் முதலமைச்சர் ஒரே வார்த் தையில்.

தமிழ்நாடு வெற்றிடமல்லகற்றிடமாகத் திகழ்கிறது!

அதற்கு முன்பாக புரியாதவர்கள் சிலர் என்ன சொன்னார்கள்? தமிழ்நாட்டில் வெற்றிடம் வெற்றிடம் என்றார்கள்.

இல்லை, இப்பொழுது இது எல்லோரும் வந்து தெரிந்துகொண்டு போகின்ற கற்றிடம் என்று நாங்கள்தான் சொன்னோம்.

திராவிடம் வெல்லும், இங்கே இருந்து நீங்கள் கற்றுக்கொண்டு போகவேண்டும் என்று உறு தியாகத் தெரிவித்தோம்.

இன்றைக்கு  எல்லோரும் தமிழ்நாட்டைப் பார், தமிழ்நாட்டைப் பார் என்று கற்றுக்கொண்டு போகக்கூடிய வாயப்பை நம்முடைய முதல மைச்சர் ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் செய்துகாட்டியிருக்கிறார்.

அந்தத் துறையில் நம்முடைய மா.சு. அவர் களுடைய உழைப்பும், கடுமையான உழைப் பாகும்.

இங்கே தோழர்கள் முத்தரசன் அவர்களும், பாலகிருஷ்ணன் அவர்களும் மற்ற நண்பர்களும் உரையாற்றும்பொழுது சொன்னார்கள்

மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு என்று சொன்ன நேரத்தில், நமக்குக் கிடைத்தது வெறும் பூஜ்ஜியம் தானே. கோடான கோடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எங்கே இடம் கிடைத்தது?

நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்ததின் காரணமாகத்தானே

ஒன்றிய அரசு இறங்கி வந்தது!

நாம் எல்லோரும் முயற்சி எடுத்த நிலையில், முதலமைச்சர் அவர்கள் அதில் மிகத் தெளிவாக, உறுதியாக இருந்தார்.

அதில் முன்னுக்குப்பின் முரணாக ஒன்றிய அரசு  - மோடி அரசு நடந்துகொண்டது.

உடனடியாக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடுத்த பிறகுதானே, ஒன்றிய அரசு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் கொடுக்கிறோம் என்று இறங்கி வந்தது.

அதை சாதித்த நேரத்தில், தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது.

அதனை உருவாக்கித் தந்த பெருமை நம்முடைய முதலமைச்சரையே சாரும்.

அதுகுறித்து பத்திரிகைகள் ‘‘ஸ்டாலின் சகாப்தம்'' என்று  எழுதுகின்றன.

எனவேதான் நாம் சொல்கிறோம், நம்முடைய உரிமை அது. பிச்சை கேட்கவில்லை, அரசமைப்புச் சட்ட ரீதியாக. உரிமையைக் கேட்கிறோம்.

இங்கே அழகாகச் சொன்னார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்கள்.

தமிழ்நாட்டில் இருந்த கடந்த கால ஆட்சியினர் நீட் மசோதாவிலிருந்து விதிவிலக்கு வேண்டும் என்று இரண்டு மசோதாக்களை சட்டப்பேரவையில் நிறை வேற்றினார்களே, அந்த மசோதாக்களுக்கும் நம் முடைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆதரவு கொடுத்தார் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுது. அந்த மசோதாக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன என்ற விவரங்களையெல்லாம் சொன்னார்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு

ஆனால், இப்பொழுது முதலமைச்சர் மு.. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு,

ஓய்வு பெற்ற நீதிபதி .கே.இராஜன் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவில் மருத்துவத் துறை வல்லுநர்கள் இடம்பெற்றனர்.

நீட் தேர்வினால்  மாணவர்கள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள் என்ற புள்ளிவிவரங்களோடும்,

நீட் தேர்வினால் கார்ப்பரேட் முதலாளிகள் என்று சொல்லப்படுபவர்கள் பல லட்சக்கணக்கான ரூபாயை சுரண்டுகிறார்கள் என்பதையும்,

கிராமப்புற, ஏழை, எளிய பெற்றோர்களுடைய பிள்ளைகள் மருத்துவக் கனவை நினைவாக்க முடியாது  என்கிற விவரங்களையெல்லாம் புள்ளி விவரங்களோடு அறிக்கையைக் கொடுத்தது.

அந்தக் குழுவின் அறிக்கையை சட்டமன்றத்தில் பதிவு செய்து,  அதற்குப் பிறகு நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை முன்மொழிய ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது.

ஆளுநருடைய பணி என்ன?

ஆளுநருடைய பணி என்ன? அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டியதுதான்.

ஆனால், அதை விமர்சனம் செய்வதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை அரசமைப்புச் சட்டப்படி.

அந்த மசோதாவைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்  ஆளுநர் - அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக.

இதைக் கண்டித்து  முதலமைச்சர் அவர்களால் ஒரு பெருந்திரளைத் திரட்டி, கிளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.  ஆனால், அவர் அப்படி செய்யவில்லை, அரசமைப்புச் சட்ட ரீதியாகத்தான் முதலமைச்சர் அணுகுகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார் என்ற செய்தி பிப்ரவரி 3 ஆம் தேதி வெளிவருகிறது.

மசோதாவை திருப்பி அனுப்ப அரசமைப்புச் சட்டப்படி

ஆளுநருக்கு உரிமை இல்லை!

நான் சட்டம் படித்தவன், இங்கும் பல வழக் குரைஞர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் சொல் லட்டும், எந்த விதியின்கீழ் குடியரசுத் தலை வருக்கு அனுப்பவேண்டிய அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்?

ஒரே ஒரு நிபந்தனை அரசமைப்புச் சட் டத்தில் இருக்கிறது - ஒரு மசோதா சட்டப் பேரவையில்  நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் மூலம் அனுப்பப்படுகிறது என்றால், அந்த மசோதாவை திருப்ப அனுப்பக் கூடிய உரிமை ஆளுநருக்கு இருக்கிறது என்று சொன்னால், எப்படிப்பட்ட மசோதாவாக அது இருந்தால், திருப்பி அனுப்பலாம் என்ற உரிமை ஆளுநருக்கு இருக்கிறது என்றால், அரசமைப்புச் சட்டப்படி - உயர்நீதிமன்றத்தினுடைய உரிமை களைப் பறிப்பதாக இருந்தால் மட்டுமே திருப்பி அனுப்ப முடியும்.

ஆனால், ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா - அது சம்பந்தப்பட்ட பிரச்சினையே அதில் கிடையாது. அப்படிப்பட்ட நிலையும் கிடையாது.

ஆகவே, அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதே ஆளுநருடைய வேலை.

(தொடரும்)

No comments:

Post a Comment