இதோ ஒரு அற்புத அரசியல் ஆவணம்! (3) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

இதோ ஒரு அற்புத அரசியல் ஆவணம்! (3)

இதோ ஒரு அற்புத அரசியல் ஆவணம்! (3)

'உங்களில் ஒருவன்' என்ற முதல் அமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்களின் தன் வரலாறு (முதல் பாகம்) புத்தகத்தில் வெறும் குடும்ப வாழ்க்கை நிகழ்வுகளாக இல்லாமல், திராவிடர் இயக்க அரசியல் எழுச்சி, 'திராவிட மாடல்' ஆட்சி சந்தித்த சோதனைகள், அதிலிருந்து உலைக் களத்து நெருப்பில் புடம் போட்டு உரு வாக்கப்பட்ட ஆளுமை ஆயுதமாக அவர் இன்று பொறுப்பு ஏற்று கடமையாற்றுவதற்கான அடிப்படைகள் பற்றியும் மிக அருமையாக எழுதுகிறார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞருக்குப் பின் "தமிழ்நாட்டில் வெற்றிடம்" என்று பிதற்றிய வர்களுக்குப் பதில் கூறும் வகையில் இன்று இவருடைய கட்சி - ஆட்சித் திறமை, 'திராவிடம் எப்போதுமே கற்றிடம்தான்' என்று காட்டும் பல நிகழ்வுகளை  அடுக்கடுக்காகத் தொகுத்து, தொய்வின்றி தமது 23 வயது வரையான வாழ்வினை வருணிக்கிறார்.

இன்று அவர் சமூகநீதி, சுயமரியாதை, இனமானம் போன்றவைகளில் உறுதியான நிலைப்பாட்டுடன்  - இந்தியாவிற்கே வழிகாட்டி, முதல் அமைச்சர்களில் முதல்வராக எப்படி முன்னோடி முகிழ்த்துக் கிளம்பினார் என்ற கேள் விக்கும் இந்நூலில் தக்க விளக்கம் கிடைக்கிறது.

இளைஞராக அவரது பணியைத் தொடங்கி வேகமாக நடைபெறும் கால கட்டம் - அவரே எழுதுவதைக் கேட்போம்.

"முதலில் நடைப்பயணமாக - அதன் பிறகு சைக்கிள் ரிக்ஷாவில், பின்னர் ஜீப்பில் - அதன் தொடர்ச்சியாக காருக்கு மேலே உட்கார்ந்து - என எனது தேர்தல் பிரச்சாரம் வளர்ந்து கொண்டே போனது.

ஒரு முறை லாரியில் போனோம். அது செங்கல் எடுத்துச் சென்ற லாரி. செம்மண்ணாக இருந்தது. அதில் ஏறி பயணம் செய்தோம். இப்போது அமைப்புச் செயலாளராக இருக்கும் ஆர்.எஸ்.பாரதி அவர்களும் உடனிருந்தார்.

எனது வெள்ளைச் சட்டை முழுக்க செம்மண் ஆகிவிட்டது. தலைவர் அவர்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டு இருக்கிறார். அந்த இடத்தில் போய் இறங்கினோம். என்னுடைய செம்மண் உடையைக் கவனித்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் கண்டித்தார். ஆனாலும் நான் என்னுடைய பரப்புரை பயணங்களை நிறுத்த வில்லை. சட்டையில் அல்ல, உடலில் கருப்பும் சிவப்பும் கலந்து விட்டதே!

இந்தக் காலக்கட்டத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களது மறைவு (1973 டிசம்பர் 24) திராவிட இயக்கத்துக்கு மட்டுமல்ல, தமிழினத்துக்கே பேரிழப்பாக அமைந்துவிட்டது.

1967 ஆம் ஆண்டு கழகம் ஆட்சிக்கு முதன் முதலாக வந்தபோது சிறுவயது பையன் நான். அந்த தேர்தலுக்கு முன்பு வரை தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முரண்பட்டு களத்தில் நின்றார்கள்.

கழகம் வெற்றி பெற்றதும், நேராக திருச்சி சென்று பெரியாரைச் சந்தித்தார் அண்ணா அவர்கள். அவருடன் தலைவரும் சென்றிருந் தார்கள். திரும்பி வந்த பிறகு, இல்லத்தில் அனை வரிடமும் தனக்கும், பெரியாருக்குமான நட்பை தலைவர் அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்.

ஈரோடு குருகுலக் காட்சிகளை மிக நீண்ட நேரம் விவரித்தார்கள். தேர்தல் அரசியலைக் கடந்தது கொள்கை உறவு என்பதை இது எனக்கு உணர்த்துகிறது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களது மறைவுக்குப் பிறகு தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களிடம் தான் முக்கியமான பல்வேறு ஆலோசனைகளைப் பெற்று வந் தார்கள். பெரியார் அவர்களும், தலைவரை தனது மகனைப் போல அன்பு பாராட்டினார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிறகு கழகத் தலைவராக, கலைஞர் அவர்கள் தான் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவரும் பெரியார் அவர்கள் தான். தலைமைப் பதவியை கலைஞர் அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் சொல்லி அனுப்பினார் பெரியார். கோபாலபுரம் இல்லம் வந்து ஆசிரியர் அவர்கள் சொன்னார்கள். அந்தளவுக்கு கலைஞரது உழைப்பு, திறமை மீது நம்பிக்கை வைத்திருந்தவர் பெரியார் அவர்கள்.

95 வயது முதுமையின் பழமாக இருந்த காலத் திலும் தனது போராட்டக் குணத்தை விடாமல் தனது சுற்றுப்பயணத்தை பெரியார் அவர்கள் தொடர்ந்து வந்தார்கள். பெரிதாக ஏதாவது போராட்டம் நடத்தினால் அது, கலைஞர் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு விடுமோ என்று ஒரு பக்கம் தயக்கம் இருந்தாலும் அந்தப் போராளிப் பெரியார் தனது போராட்டத்தை லட்சியத் துடிப்போடு நடத்தியும் வந்தார்கள்.

மறைவுக்கு அய்ந்து நாட்களுக்கு முன்பு வரையில் பேசினார். தமிழர் இழிவு நீக்க மாநாட்டை நடத்தினார். அத்தகைய போராட்டக் குணத்தோடு மறைந்தார். அவர் மறைந்தபோது, 'தந்தை பெரியார் தனது சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டார், நாம் தொடர்வோம்' என்று தலைவர் எழுதிய சொற்கள் கல்வெட்டுக்கள் ஆகும்.

பெரியாருக்கு அரசு மரியாதை வழங்க வேண் டும் என்பதில் முதல்வர் கலைஞர் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அரசுப் பதவியில் அவர் இல்லையே என்று காரணம் சொல்லப்பட்டது. 'மகாத்மா காந்தி எந்தப் பதவியில் இருந்தார்?' என்று கேட்ட கேள்வியில் தான் தலைவர் இன்று வரை நிமிர்ந்து நிற்கிறார். தந்தைக்குப் பெற்றுத் தர வேண்டிய தனயனின் உரிமையை அன்று தலைவர் நிலைநாட்டினார்கள்.

இராஜாஜி மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக வேப்பேரி பெரியார் திடலுக்கு தந்தை பெரியாரின் உடல் எடுத்துவரப்பட்டது. பல்லாயிரக்கணக் கானவர் பங்கேற்ற ஊர்வலத்தில் நானும் ஒரு வனாக நடந்து போகும் போது அந்த மகத்தான தலைவருக்காக திரண்ட கூட்டம் என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது.

இன்று சுயமரியாதை - பகுத்தறிவு - இன மானம் - தன்மானம் என்று பேசவும், செயல் படவும் ஊக்க சக்தியாக இருப்பது அந்த வெண் தாடி வேந்தர் தான். அவரது தகதகக்கும் தங்க முகம் இன்று நினைத்தாலும் மனதுக்குள் மின்னு கிறது. அவரது கொள்கைக்கு மட்டுமல்ல, அவரது முகத்துக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது."

எனவே அவருள் ஆழமாக பெரியாரைப் பதிய வைத்தார் கலைஞர் - ஒரு திராவிட அரசியலின் திருச்சபையின் பாடமாக அந்த வீடு திகழ்ந்ததால் எப்படி பக்குவப்பட்ட ஒரு முதல் அமைச்சர் கிடைத்தார் நமக்கு என்பது புரிகிறதல்லவா!

தொண்டு செய்து பழுத்த பழமான பெரியார் கொள்கை தான் அவர் அடிநாதம்  - அடிக்கல்  - அடிக்கட்டுமானம் என பலமாக உள்ள அதன் மேலே அதிகமான பொலிவுடனும், வலிவுடனும் 'திராவிட மாடல்' ஆட்சியைத் திக்கெட்டும் ஒளிவீசும்படிச் செய்து 'உங்களில் ஒருவன்' என்று தன்னடக்கத்துடன்கூறிடும் அவர் என்றும் நமக்குரியவராகத் திகழுவார் என்ற கருத்து மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாகிறது இந்நூல் மூலம். பன்மொழிகளிலும் வர வேண்டிய நூல் இது!

வரலாற்று பனுவல் பல முனை கொண்டது

பன்சுவையுடன் பகிர்வோமாக.

(நிறைவு)

No comments:

Post a Comment