நாக்பூர், மார்ச் 4 விவசாயிகளின் கோபம் காரணமாக, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினம் என்று விசுவ ஹிந்து பரிசத் மேனாள் தலைவர் பிரவீன் தொகாடியா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மகாராட்டிர மாநிலம் நாக்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிரவீன் தொகாடியா இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:
விவசாயிகள், தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஆதரவு தொகைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை இயற்றவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஆனால், இரண்டையும் ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்தவில்லை. இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள விரக்தி, கோபம் காரணமாக இந்த முறை உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெல்வது கடினம்.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் சூழல் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியிலேயே தெளிவாக தெரியவந்து விட்டது. அப்போதே இந்திய மாணவர்களை மீட்டுக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை மீட்பதில் ஏற்பட்ட தாமதம்தான் ஒரு மாணவரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்து விட்டது.
இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 45 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால்தான் இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க நேரிடுகிறது.
இவ்வாறு பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.
பெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு ரூ.9 வரை விலை உயரலாமாம்!
புதுதில்லி, மார்ச் 4 உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த வாரம் நிறைவடைந்ததும் பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன.
பன்னாட்டளவில் கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம் பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரை (ரூ.7,500) கடந்தது. தற்போது 110 டாலரைத் (ரூ. 8,250) தொட்டுள்ளது. எனினும் 5 மாநிலத் தேர்தலுக்காக கடந்த 118 நாள்களாக பெட்ரோல் - டீசல் விலைகளை மோடி அரசு உயர்த்தவில்லை.
இந்த வகையில், எரிபொருள் விலையில் இடைவெளி ஏற்பட்டுள்ளதாகவும், அதை ஈடுசெய்யும் வகையில், மார்ச் 7 ஆம் தேதிக்குப் பிறகு, பெட்ரோல் - டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ. 9 வரை உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
கடந்த 2014 ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னர் அதிகபட்ச மாக கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 102 அமெரிக்க டாலரை (ரூ.7,650) தாண்டியிருப்பதாக எண்ணெய் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் நிறைவடைந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் படலாம் என்று ஜேபி மார்கன் தரகு நிறுவனமும் கூறியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொய்யர் கட்சி என்றால் அது பாஜகதான்! அகிலேஷ் சாடல்
லக்னோ, மார்ச் 4- உலகின் மிகப்பெரிய பொய்யர்களின் கட்சி என்றால் அது பாஜகதான் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவா அகிலேஷ் சாடியுள்ளார்.
ஜான்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அகிலேஷ் மேலும் பேசியிருப்பதாவது:
கரோனா தொற்றுப் பரவல் காலங்களில் பாஜகவின் தவறான நிர்வாகத்தால் மக்கள் கடும் சிரமங்களைச் சந்திக்க நேர்ந்தது.
பிற மாநிலங்களுக்குச் சென்றிருந்த தொழிலாளர் கள் பொது முடக்கம் காரணமாக உ.பி.யில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு நடந்தே வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவ்வாறு வரும் வழியிலேயே பலர் உயிரிழந்தனர். கரோனா பரவல் உச்சம் பெற்ற காலத்தில் போதுமான மருந்துகளையும், படுக்கை வசதிகளையும் கூட உ.பி. பாஜக அரசால் வழங்க முடியவில்லை. அவர்கள் சரியான நேரத்தில் மருந்துகளையும், ஆக்சிஜனையும் அளித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.
கரோனா தொற்றுக் காலத்தில் ஆட்சேர்ப்புத் தேர்வு கள் நடைபெறாததால் பல இளைஞர்கள் அதில் கலந்து கொள்ள முடியாமல் வயது வரம்பைத் தாண்டி விட்டனர். விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து கடந்த 2017 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், பாஜக அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை. உண்மையில், அது பாதியாகக் குறைந்துவிட்டது.
பாஜக தன்னை உலகின் மிகப் பெரிய கட்சி என்று அழைக்கிறது. ஆனால், அதனுடைய அய்ந்தாண்டு கால ஆட்சியில், அந்தக் கட்சி மக்களுக்கு ஆற்றிய பணிகளையும், அளித்த வாக்குறுதிகளையும் பகுப்பாய்வு செய்தால், உலகின் மிகப்பெரிய பொய்யர் கட்சி பாஜகதான் என்பது தெரிய வரும்.
இவ்வாறு அகிலேஷ் பேசியுள்ளார்.
No comments:
Post a Comment