ஜெனீவா, மார்ச் 4- ரசியாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உயிரை காத்துக்கொள்வதற்காக உக்ரைன் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
ஒரு வாரத்திற்குள் ரசியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து பத்து லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக அய்.நா. அகதிகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் 40 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறக்கூடும் என்று கணித்துள்ளது, ஆனால் அந்தக் கணிப்பு அதிகரிக்கலாம் என்று எச்சரித்து உள்ளது.
அகதிகளுக்கான அய்.நா. உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி டுவிட்டரில், "ஏழு நாட்களில் உக்ரைனில் இருந்து பத்து லட்சம் அகதிகள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்" என கூறி யுள்ளார்.
உக்ரைன் அகதிகளில் அதிகபட்சமாக சுமார் 4.54 லட்சம் பேர் போலந்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஹங்கேரியில் 1.16 லட்சத்தினரும், மால்டோவாவில் 79 ஆயிரம் பேரும், அய்ரோப்பிய நாடுகளுக்கு 69 ஆயிரம் பேரும், சுலோவாகியாவில் 67 ஆயிரம் பேரும் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அகதிகள் வெளி யேற்றமாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக 2011 இல் சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த போது 56 லட்சம் மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment