உக்ரைனில் கருநாடக மாணவர் உயிரிழப்புக்கு நீட் தேர்வே காரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

உக்ரைனில் கருநாடக மாணவர் உயிரிழப்புக்கு நீட் தேர்வே காரணம்

மேனாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு, மார்ச் 3 உக்ரைனில் கருநாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வே காரணம் என கரு நாடக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று நடந்த 6 ஆம் நாள் போரில் கார்கிவ் நகரில் ரஷிய படையினரின் குண்டுவீச்சில் இந்திய மாணவர்  நவீன் சேகர கவுடா  என்பவர்  பலியாகி இருப்பது, அங்கு தவித்து வருகிற இந்திய மாணவர்கள் மத்தியில் தீராத சோகத்தையும், இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய மாணவர் நவீன் மரணம் விசாரிக்கப்படும் என  இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கருநாடக மாணவர் நவீன் உயிரி ழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம் என்று அம்மாநில மேனாள் முதலமைச்சர்  குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு சிதைக்கிறது. உயர்கல்வி என்பது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, பணம் இல்லாதவர்களுக்கு மறுக்கப்படுகிறது. உக்ரைனில் கருநாடக மாணவர் நவீன் உயிரிழந்ததற்கு நீட் தேர்வே காரணம். இந்தியாவில் மருத்துவ சீட் மறுக்கப்பட்டதாலேயே நவீன் உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றார். தகுதி என்ற போர்வையில் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு அநீதி இழைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment