நச்சு மனிதர்களுக்கு உடனடி தண்டனை தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 2, 2022

நச்சு மனிதர்களுக்கு உடனடி தண்டனை தேவை

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில நாள்களாக குழந்தைகளை வைத்துரியாலிட்டி ஷோ' ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. நகைச்சுவை யோடு சமூகக் கருத்துக்களை சொல்லும் வகையில் அந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் வேடமணிந்த குழந்தை ஒன்று பங்கேற்றது சிறப்பாகப் பெரும் பேசுபொருள் ஆகியது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந் தையை - கயத்தாறு பேரூராட்சியில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வரும் வெங்கடேஷ் குமார் பாபு என்ற நபர் "அந்தக் குழந்தையை அடித்துக் கொன்று ரோட்டில் தொங்க விட வேண்டும்" என்றும், "அப்போதுதான் மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பயம் வரும்" என்றும் கூறி முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் "ஏன், ..சி., தேவர், பாரதி, நேதாஜி - இவர்கள் வேஷம் போட முடியாதா" என்றும் வெங்கடேஷ் குமார் பாபு என்ற பெயரில் இருந்த அந்த நபர் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்திருந்தார். இதன் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

வெங்கடேஷ் குமார் பாபுவின் இத்தகைய வன்முறைப் பதிவுகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அவருக்குக் கடும் கண்டனங்கள் குவிந்தன. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் வெங்கடேஷ் குமார் பாபு மீது இது குறித்து கயத்தாறு பேரூராட்சி தி.மு.. செயலாளர் சுரேஷ் கண்ணன் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், காவல்துறையினர் வெங்கடேஷ் குமார் பாபுவைக் கைது செய்தனர். மேலும் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் "தமிழ்நாடே குழந்தைகளின் பின்னால் நிற்கிறது. அச்சப்படவேண்டாம்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.. ஸ்டாலின்.  தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய குழந்தைகள் நிகழ்ச்சியில், பெண் விடுதலை, இளைய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கருத்துக்கள் வெளியிட்டுப் பெரியார் வேடமணிந்து பேசிய குழந்தையோடும் இதர தலைவர்களைப் போன்று வேடமணிந்துப் பேசிய குழந்தைகளையும் நேரில் அழைத்துப் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

தந்தை பெரியார் பிறந்து அரும்பாடுபட்டத் தமிழ் மண்ணில், மத வெறியை மக்களிடம் கிளப்பிவிடும் தீய சக்திகளின் தூண்டுதலால், குழந்தை என்றும் பாராமல், பெரியார் வேடமிட்டு மிக நேர்த்தியாகப் பேசியதைக் கூடப் பொறுக்க முடியாமல், அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டும், கொன்று சாலையில் தொங்கவிட வேண்டும் என்ற அளவுக்கு வக்கிரப்புத்தி தலை யில் ஏறிக் குதிப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

உடனடியாக இத்தகைய பேர் வழிகள் மீது சட்டபடியான நடவடிக்கைகளை மேற் கொண்டு, தண்டனை கொடுத்தால் தான், இந்த நச்சுப் பாம்புகள் ஓரளவுக்காவது பாடம் படிக்கும். உடனடியாகக் கைது செய்தது சரியானதே!

சம்பந்தப்பட்ட குழந்தையை நேரில் அழைத்து முதலமைச்சரே பாராட்டி இருப்பதையும் காவல் துறை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment