விண்வெளிக்கு "பயணச்சீட்டு" வந்தாச்சு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

விண்வெளிக்கு "பயணச்சீட்டு" வந்தாச்சு!

பிரிட்டனின் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன், விரைவில் தனியார் விண்வெளி பயணத்தை 'ரெகுலர் சர்வீஸ்' ஆக்கவிருக்கிறார். அதற்கான முன்பதிவுகள் இப்போது துவங்கிவிட்டன. ஒரு பயணச்சீட்டின் விலை ரூ.3.38 கோடி! முன்பணமாக ரூ.1.12 கோடியை செலுத்திவிட வேண்டும். மீதி? இந்த ஆண்டு இறுதியில் பயணம் மேற்கொள்ளும்போது தரவேண்டும்.

இப்போதைக்கு ஆயிரம் பேருக்கு பயணச்சீட்டு விற்கவிருக்கிறது வர்ஜின் காலாக்டிக். எனவே பணமும், மனமும் இருப்பவர்கள் விண்வெளி சுற்றுலாவுக்கு பயணச்சீட்டு பெறலாம். வர்ஜின் காலாக்டிக் நிறுவனம், நடுத்தர ராக்கெட் - கம் - விமானம் மூலம் பிரான்சன் உள்ளிட்ட சிலரை அண்மையில் 'விண்வெளியின் விளிம்பு வரை' அழைத்துச் சென்று பத்திரமாக திரும்பியது. இந்த வெற்றிகரமான பயணத்தின் மூலம், தனது ராக்கெட் சேவை பாதுகாப்பானது என்று உலகிற்கு நிரூபித்தார் பிரான்சன்.

நியூ மெக்சிகோவிலுள்ள ஒரு ஏவுதளத்தில் இருந்து வர்ஜின் காலாக்டிக்கின் 'வி.எஸ்.எஸ். யூனிட்டி' சேவையை நடத்தும். பூமியிலிருந்து இது கிளம்பி, பாதி தூரத்தில் 'மாக் - 3' வேகத்தை எட்டும். அப்போது சில நிமிடங்களுக்கு புவியீர்ப்பு விசையற்ற நிலை ஏற்படும். பயணிகள் ராக்கெட் விமானத்திற்குள் மிதப்பர். பிறகு பூமியிலிருந்து வெகு தொலைவில் சென்று, பூமி உருண்டையை பார்க்க முடியும். திரும்பும் போது விமானம் போல வந்து யூனிட்டி தரையிறங்கும்.

இது அசல் விண்வெளிப் பயணமல்ல என்றாலும், பயணிகளுக்கு விண்வெளி வீரர்களுக்குரிய பயிற்சி சில நாட்களுக்கு வழங்கப்படும். மேலும், அசல் விண்வெளி உடையும் தரப்படும். அடுத்த ஆண்டுக்குள், விண்வெளியிலிருந்து பூமி உருண்டையைப் பார்த்த சிவிலியன்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிடும் என வர்ஜின் காலாக்டிக் நம்புகிறது.


No comments:

Post a Comment