சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்குப் பாராட்டு!
திருச்சி தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் அகில இந்தியத் தொகுப்பில் 69 விழுக்காடு முறை பின்பற்றப்பட ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சமூகநீதி வரலாற்றில் அரிய தோர் சாதனை நிகழ்த்தி, மற்ற மாநிலங்களுக்கும் முன் னோட்டமாக வழிகாட்டியுள்ளார் என்பது நமது பெரு மிதத்திற்கும், பாராட்டுதலுக்கும் உரியதொன்றாகும்.
தேசிய சட்டப் பல்கலைக் கழகம்(National Law Schools) என்ற அமைப்புகளில் இட ஒதுக்கீடே சரியாகப் பின்பற்றாத கொடுமை தொடர்ந்து வருகிறது.
அரசமைப்புச் சட்டப்படியும், உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளின்படியும் இட ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றி, சமூகநீதி அனைவருக்கும் அனைத்தும் கிட்டும் நிலை உருவாக்கப்படல் வேண்டும்.
பல ஆண்டுகளாக நிலவிய அநீதிக்கு முற்றுப்புள்ளி
இதுபற்றி நாம் தொடர்ந்து வலியுறுத்தியே வந்துள்ளோம்.
‘‘தகுதி, திறமை - பூச்சாண்டி'' காட்டியே இட ஒதுக் கீட்டைத் தவிர்த்து வந்ததற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் பல ஆண்டுகளாக நிலவிய அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்து தக்க பரிகாரம் தேடிவிட்டார்.
கடந்த 25.2.2022 நாளிட்ட அரசாணை (G.O.MS.66) மூலம் 2012 இல் திருச்சியில் தமிழ்நாடு (மாநில) அரசின் சார்பில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு தேசிய சட்டக் கல்வி பல்கலைக் கழகத்தில், தமிழ்நாட்டின் சமூகநீதிச் சட்டமாக 69 விழுக்காடுபடி ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, முன்பு அகில இந்திய தொகுப்பு இடங்களில், திருச்சி சட்டப் பல்கலைக் கழகத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு சட்டப்படி உள்ள 69 சதவிகிதத்தைப் பகிர்ந்தளிக்க வழி செய்யப்படவேண்டும்.
இதன் பயனாக இதற்கு பூஜ்ஜியம் (0) இடங்களைப் பெற்ற ஓபிசி மாணவர்களுக்குரிய 120 இடங்களில் 50 விழுக்காடான 60 இடங்களைப் பெறுகிறார்கள் - முதல் முறையாக. எஸ்.சி., பிரிவினர் 18 விழுக்காடு இடங்களையும், எஸ்.டி., பிரிவினருக்கு ஒரு விழுக்காடு இடங்களையும் பெறுகிறார்கள்.
தமிழ்நாடுதான் இப்படி வழிகாட்டியுள்ளது
இந்தியாவில் தமிழ்நாடுதான் இப்படி வழிகாட்டி யுள்ளது மற்ற மாநிலங்களுக்கும். தற்போது மற்ற மாநிலங்களில் இப்படிப்பட்ட ஒதுக்கீடு முறை பின் பற்றப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சென்னை
3.3.2022
No comments:
Post a Comment