முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - வாழ்த்தரங்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 2, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - வாழ்த்தரங்கம்!

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை

இந்தியா மட்டுமல்ல- உலகமே பாராட்டுகிறது!

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

சென்னை, மார்ச் 2 நம்முடைய முதலமைச்சரை இந்தியா பாராட்டுகிறது- உலகம் பாராட்டுகிறது - தலைசிறந்த செயல்களை செய்து ஒவ்வொரு  நாளும் வரலாற்றில் பின்னிணைப்புகளை இணைத்துக் கொண்டிருக்கிறார்  என்றார்   திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.. சார்பில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் பிறந்த நாள் - வாழ்த்தரங்கம்!

நேற்று (2.3.2022) மாலை சென்னை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வேளச்சேரியில்  உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்தரங்கத்திற்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

நிகழ்விற்கு தி.மு.. தென்சென்னை மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்ரமணியன் வரவேற்புரையாற்றினார்.

மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க.பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் மற்றும் கழகத் தோழர்கள், பல்வேறு கட்சியின் பொறுப்பாளர்களும்,  தோழர்களும் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துரை வருமாறு:

காலத்தை வென்றவர்களாகவே இருக்கக்கூடிய நண்பர்கள்  கூட்டம்!

காலம் கடந்தாலும் எப்பொழுதும் மா.சு. அவர்கள் ஏற்பாடு செய்தால், காலத்தைப்பற்றி கவலைப்படாமல், காலத்தை வென்றவர்களாகவே இருக்கக்கூடிய நண் பர்கள் அடங்கிய இந்தக்  கூட்டத்தில், கட்டுக்கோப்பாக தன்னுடைய தோழர்களை மட்டுமல்ல - தன்னுடைய எதிரிகளையும்கூட வயப்படுத்தும் தகைமையாளர். எதிரிகள் என்றால், அரசியல் எதிரிகள் - தனிப்பட்ட முறையிலே அவருக்கு எதிரிகள் யாரும் கிடையாது - இருக்க முடியாது - அத்தகைய பண்பாளர் அவர்.

நமக்கெல்லாம் ஒரு வரலாற்றுப் பெருமை!

எனவே, அப்படிப்பட்டவர்களையும் ஒருங் கிணைத்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கக்கூடிய இந்த எழுச்சி மிகுந்த பிறந்தநாள் கூட்டத்தில், வரவேற் புரையாற்றி, நம்மையெல்லாம் ஒரு நீண்ட இடை வெளிக்குப் பின்னால்  சந்திக்கும்படியாக செய் திருக்கிறார் - பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரிய இந்தியாவினுடைய முதல் முதலமைச்சர் தமிழ் நாட்டில்தான் இருக்கிறார் என்ற பெருமை நமக்கு எப்படி ஒரு வரலாற்றுப் பெருமையோ, அதுபோல, இந்தியாவில் இருக்கின்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களிலேயே பலமான ஒரு அமைச்சர்  - முதலமைச்சர் தளபதிக்குத் தளபதியாக இருக்கக் கூடியவர் - அழகாக திருமா அவர்கள் சொன்ன தைப்போல, ஓர் அற்புதமானவர் என்பதை, குஜராத் தேர்ந்தெடுத்திருக்கிறது. குஜராத்திற்கே சென்று அவர் பரிசு வாங்கவிருக்கிறார் என்று சொல்லும் பொழுது, இந்நிகழ்ச்சி ஒரு சிறப்பென்று சொன்னால், ஒரு பரிசு கொடுப்பதுபோன்று  இன்னொரு போனஸ் செய்தி அது.

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிகழ்ச்சி - இந்த நிகழ்ச்சி.

மாசில்லா மா.சு.

அருமையான தலைவர்கள்  பலர் கலந்து கொண்டிருக்கக்கூடிய முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்தரங்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து,  நம் அனைவரையும் சிறப்பாக வரவேற்றுள்ள மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருமை மாசில்லா மா.சு. அவர்களே,

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து, எனக்கு முன், சிறப்பாக உரையாற்றி அமர்ந்துள்ள தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டியின் தலைவர் அன்பிற்கும், பாராட்டு தலுக்கும் உரிய அய்யா கே.எஸ்.அழகிரி அவர்களே,

என்றென்றைக்கும் கொள்கை வீரராகத் திகழக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

உழைப்பின் உருவமாக இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொள்கை வீரர் இரா.முத்தரசன் அவர்களே,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் என்று எப்பொழுதுமே கருதக்கூடிய அளவிற்கு, உணர்ச்சிபூர்வமாக எங்களோடு மூன் றாவது குழலாக இருக்கக்கூடிய  அன்பிற்குரிய அரு மைச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களே,

இந்த விழாவிற்கு வைகோ வரவில்லையே என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை - இதோ வளர்பிறை துரை.வைகோ வந்திருக்கிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவருடைய முதல் அரங்கேற்றம் சிறப்பான இடத்திலே அருமையாக நடைபெற்றிருக்கிறது என்ற மகிழ்ச்சியோடு, இவற்றையெல்லாம் சுவைத்துக் கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம்.

இந்தியா பாராட்டுகிறது-உலகம் பாராட்டுகிறது!

நம்முடைய முதலமைச்சரை இந்தியா பாராட்டுகிறது- உலகம் பாராட்டுகிறது - தலை சிறந்த செயல்களை செய்து ஒவ்வொரு  நாளும் வரலாற்றில் பின்னிணைப்புகளை கொண் டிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய மகிழ்ச்சிக்குரிய ஒன்றோ, அதுபோல, இன் னொரு போனஸ் மகிழ்ச்சி நமக்கு என்ன வென்றால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்தான்.

அவர் வெற்றி பெற்றார் என்ற செய்தி கேட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சி., அதிலும் எந்த வெற்றி - நல்ல உடல்நலம் - நல்ல உடல்நலத்தோடு வாழவேண்டும், என்றுதான் எல்லோரும் வாழ்த்துவார்கள். எவ்வளவு காலம் வாழுகிறோம் என்பது முக்கியமல்ல.

தந்தை பெரியாரின் கருத்து!

தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்,

''நீண்ட காலம் வாழவேண்டும், நீண்ட காலம் வாழவேண்டும்  என்று என்னை எல்லோரும் வாழ்த்துகிறீர்களே, வாழ்கின்ற எனக்குத்தான் அந்த கஷ்டம் தெரியும்'' என்று.

ஏனென்றால், வாழ்த்துகின்றவர்கள், நீண்ட காலம் வாழுங்கள் என்று வாழ்த்திவிட்டுப் போகலாம். ஆனால், இருந்து சங்கடப்படுகிறவர்கள் நாங்கள் தானே என்று அய்யா அவர்கள் எதார்த்தமாக சொல்வார்.

அதற்கெல்லாம் இடம்தராத அளவிற்கு, இங்கே அய்யா முத்தரசன் சொன்னதைப்போல, மா.சு. அவர்களோடு யாரும் ஓட முடியாது. 'ஓடலாம் வாங்க' என்ற தலைப்பில் புத்தகம் எழுதியிருக்கிறார்.  இணைந்து ஓடலாமே தவிர, அவரைத் தாண்டி ஓட முடியாது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஒருவர், நல்ல உடல்நலத்திலும் முதன்மையானவர், இந்தியா விலேயே  முதல் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் அல்லவா - இந்தப் பெருமை அவர் மாரத்தானில் பெற்ற பெருமையாகும்.

இந்தக் காலகட்டத்தில், இந்தச் செய்தி முதலமைச் சருக்கே பெருமையான விஷயம்; நமக்கெல்லாம் பெருமையான விஷயமாகும்.

ஏனென்றால், குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் நகரில்தான் அந்த நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்ற தகவலை சொன்னார்கள். ஆகவே, குஜராத்கூட இவரை மறுக்க முடியவில்லை.

அனைவரது சார்பாக பாராட்டுகிறோம்!

ஆகவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அனை வரின் சார்பாகவும்,  இங்கே வந்திருக்கின்றவர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் நம்முடைய உணர்வாளர்கள் இருக்கிறார்கள்; அவர்களின் சார்பாகவும் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து சிறப்பு செய்கிறோம்.

முதலமைச்சர் விழா என்பது முக்கியமானது; அதற்குப் போனஸ் போன்றது இந்தப் பாராட்டு. ஆகவே, அவரை முதலில் அனைவரின் சார்பாக பாராட்டுகிறேன்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்த நாள்

 பெருவிழா - திருவிழா!

அருமைப் பெரியோர்களே, சான்றோர்களே, நண்பர்களே, நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களுடைய 69 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா - திருவிழா!

'திராவிட மாடல்'  அண்மைக்காலத்தில், இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் இடம்பெற்றிருக்கின்ற ஓர் அற்புதமான சொல்.

அகில இந்தியத் தலைவர்கள்

மத்தியிலும்...

'திராவிட மாடல்' என்று சொல்லுகின்ற நேரத்தில், 'தன் வரலாறு' புத்தக வெளியீட்டு விழாவில் அதைத்தான் முதலமைச்சர் அவர்கள் அகில இந்தியத் தலைவர்கள் மத்தியில் வலியுறுத்தினார்கள்.

அந்த திராவிட மாடல் என்பது இருக்கிறதே, அது ஒரு நூறாண்டுகால சரித்திரத்தைப் படைத்தது.

'திராவிட மாடல்' என்ற அடிப்படையில் மற்ற மாநிலங்களில் நடைபெறக்கூடிய ஆட்சிக்கும், இன்றைய முதலமைச்சர் அதை அழுத்தந்திருத்தமாக செய்திருப்பதினுடைய விளைவாக - ஏற்பாடுகள், பல சாதனைகளாக வளர்ந்திருப்பதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு.

என்ன அந்த வேறுபாடு என்றால்,

ஓர் அரசியல்வாதி அடுத்த தேர்தலைப்பற்றி சிந்திக்கிறார்; ஒரு பொதுநலவாதி அடுத்த தலை முறையைப்பற்றி சிந்திக்கிறார் என்று சொல்லும் பொழுது, இதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கிற திராவிட மாடலினுடைய முதலமைச்சர் எப்பொழுதும் மிகச் சிறப்பான சாதனைகளைச் செய்வதற்கு என்ன அடிப்படை?

அடுத்த தேர்தல் என்பதைவிடஅடுத்த தலைமுறை மாற்றப்படவேண்டும்!

அவருடைய அடித்தளமாக, மிக முக்கியமான குறிக்கோளாக இருக்கக்கூடிய செய்தி - அடுத்த தேர்தலைப்பற்றி என்பதைவிட, அடுத்த தலைமுறை மாற்றப்படவேண்டும் - பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான் திராவிடர் இயக்கம். அதனை ஏற்பவர்கள் நம்முடைய தோழர்கள்.

எங்கள் வண்ணங்கள் மாறுபட்டிருக்கலாம்; ஆனால், எண்ணங்கள் எப்பொழுதும் மாறுபடாத அளவிற்கு, இவ்வளவு பெரிய ஒற்றுமையான அமைப்பைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சிறப்பு.

இங்கே உரையாற்றிய அத்துணைத் தலைவர்களும் முதலமைச்சர் அவர்களைப்பற்றி, எல்லாவற்றையும் சொன்னார்கள். இந்த நேரத்தில் மிக முக்கியாக குறிப் பிட்டுச் சொல்லவேண்டிய விஷயம் என்னவென் றால்,முதலமைச்சர் அவர்களுடைய துணிச்சல்.

அவர் எப்பொழுதுமே அமைதியாகவும், அடக்க மாக இருந்தாலும், ஒன்றை அவர் கலைஞர் அவர்களிடத்திலிருந்து கற்றுக்கொண்டார்.

சிலர் ஆட்டம் போட்டார்கள்;

சிலர் தப்புக் கணக்குப் போட்டார்கள்!

கலைஞர் அவர்கள் உடலால் மறைந்தார்கள் என்று சொன்னவுடன், தமிழ்நாட்டில் சிலர் ஆட்டம் போட்டார்கள்; சிலர் தப்புக் கணக்குப் போட்டார்கள்.

என்ன அந்தத் தப்புக் கணக்கு என்றால், தமிழ்நாட்டில் வெற்றிடம் என்று சொன்னதுதான். அந்த இடத்தில் ஒரு நடிகரை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தார்கள். அந்த நடிகர் கொஞ்சம் புத்திசாலித்தனமாக கடைசி நேரத்தில் விவரமாக விலகிக் கொண்டார். ஆனால், இன்னொரு நடிகர்தான் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக் கிறார்.

திராவிட இயக்கத்திற்கு உண்டுஇந்தக் கூட்டணிக்கு உண்டு!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆக்டோபஸ் போன்றது என்று நம்முடைய பாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னார் அல்லவா - ஆக்டோபஸ் எட்டுக்காலில் பிடிக்கும் என்று - ஆனால், எட்டுக்காலையும் உடைத்துக் காட்டக்கூடிய பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு - இந்தக் கூட்டணிக்கு உண்டு.

வாலாட்டாதே என்று சொல்வார்கள் - காலை இங்கே ஊன்றலாம்   என்று நினைத்தார்கள். வட நாட்டுப் பணத்தின் காரணமாக, இப்பொழுது அங் கொன்றும், இங்கொன்றும் வந்துவிட்டனர்.

வடநாட்டுப் பணம் எப்படி வந்தது என்பதற்கு உங்களுக்கு உதாரணம் சொல்லவேண்டிய அவசிய மில்லை - கரோனா காலகட்டத்தில் வேலை இழந்த வர்கள் எத்தனை பேர்? சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன - எத்தனை தொழிற்சாலைகள் மூடப் பட்டன. வடபுலத் தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்கு நடந்தே சென்றார்கள்; பலர் இறந்து போனார்கள் என்ற செய்திகளை நீங்கள் எல்லாம் அறிந்திருப்பீர்கள்.

கடந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் மிகப்பெரிய அவலங்களை சந்தித்திருக்கின்றோம்.

கோயபல்சைப் போல புளுகிக் கொண்டிருக்கின்றார்!

அதேநேரத்தில், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகாலம் ஆகியிருக்கின்ற இந்த நாட்டில்,  சுதந்திரத்திற்காக நாங்கள் பாடுபட்டோம் என்று பிரதமர் சொல்லு கின்றார்; சுதந்திரத்திற்கும், அவர்களுக்கும் சம் பந்தமே இல்லை என்று சொன்னாலும், கோயபல்சைப் போல புளுகிக் கொண்டிருக்கின்ற அவர்கள் என்ன செய்தார்கள்?

பிரதமர் மோடியினுடைய ஆட்சி - கார்ப்பரேட் முதலாளிகளுக்கான ஆட்சி என்பதை  எல்லோரும் அறிவார்கள்.

அதற்கு ஆதாரத்திற்காக வேறு எங்கும் போக வேண்டாம்; அம்பானிக்கு ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

ஆயிரம் கோடி ரூபாய்.

தோழர்களே, நன்றாக நினைத்துப் பாருங்கள், இந்த நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழுபவர்கள் எவ்வளவு பேர்.

ஆனால், இந்த நிலையில், ஆயிரம் கோடி ரூபாயை ஒரு நாளைக்குச் சம்பாதிக்கிறார்கள் என்று சொன்னால்,  அதற்கு யார் காரணம்? எந்த அரசு காரணம்?

இதற்கு முன்பு இருந்த அரசாங்கத்தில், அம்பானிகள் இவ்வளவு சம்பாதிக்க முடிந்ததா?

அதுவும் எந்தக் காலகட்டத்தில்?

கரோனா காலகட்டத்தில் - எல்லோரும் வேலையிழந்து தவித்த நேரத்திலே  - எல்லோரும் வறு மைக்கோட்டிற்குக் கீழே மடிந்து கொண்டிருக்கின்ற நேரத்திலே -

பிணங்கள் கங்கையில் மிதந்தன என்று சொல் லக்கூடிய அளவிற்கு வந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், அம்பானிகளுக்கு ஒரு நாள் வருவாய் ஆயிரம் கோடி ரூபாய் நண்பர்களே!

எங்களுடைய ஏடல்ல - பார்ப்பன நாளேடு!

எனவே, அந்தப் பணம் இப்பொழுது ஓடி விளையாடுகிறது. இதை நாங்கள் சொல்லவில்லை - 'தினமலர்' ஏடு சென்னையில் நடைபெற்ற உள் ளாட்சித் தேர்தலில் ஏராளமாகப் பணம் கொடுத் தார்கள் என்று எழுதியது. எங்களுடைய ஏடல்ல - பார்ப்பன நாளேடு!

ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏராளமான பணத்தை செலவழித்துப் பார்த்தார்கள். இங்கே சகோதரர்கள் சொன்னதைப்போல, அதிக மான இடங்களில் டெபாசிட்டை இழந்தவர்கள் அவர்கள்.

'தினத்தந்தி'  நாளேடு வெளியிட்ட செய்தி!

கடந்த ஞாயிற்றுக்கிழமை 'தினத்தந்தி'  நாளேடு ''பா... வளர்கிறது!'' என்று ஒருசெய்தி வெளியிட்டு இருக்கிறது.

 எப்படி வளர்கிறதாம்? உதாரணம் 200 இடங்களில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வெற்றி பெற்ற அந்த அம்மையாரைப்பற்றி சொன்னார்கள். அவர் எவ்வளவு பிரபலமானவர், எவ்வளவு தேசபக்தி நிறைந்தவர் என்பதைப்பற்றியெல்லாம் இங்கே நண்பர்கள் எடுத்துச் சொன்னார்கள்; அதை மீண்டும் உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை.

மேற்கு மாம்பலத்தில் 134 ஆவது வார்டில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதைப்பற்றி அவர்களே சொல்லியிருக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் ஒப்புதல் வாக்குமூலம்!

''நாங்கள் பிராமணர்கள்,  இந்த வார்டில் நாங்கள் அதிகமாக இருப்பதினால், நாங்கள் கட்டுப்பாடாக வாக்களித்தோம்; ஆகவே, இந்த வார்டில் வெற்றி பெற்றுவிட்டோம்'' என்று அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

இங்கே மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இருக்கிறார் - அவரை வைத்துக்கொண்டே ஒரு உதா ரணத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

மிகப்பெரிய ஆபத்து - விஷக்கிருமி போன்றது!

கரோனா வைரஸ் முதலில் வந்தது - பிறகு டெல்டா வைரசாக உருவெடுத்தது - பிறகு ஓமைக்ரான் என்ற உருவில் வந்தது.

முதலில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டது - பிறகு பத்து பேர் - பிறகு 100 பேர் - பிறகு  ஆயிரம் பேர் - பிறகு லட்சக்கணக்கில் எப்படி பெருகியதோ -             

அதுபோல, ஒரு விஷக்கிருமி போல நம்மை, நம் இனத்தை, மதச்சார்பின்மையை, சமூகநீதியை, மாநில உரிமையை அழிப்பதற்கான மிகப்பெரிய ஆபத்து.

அதை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி - இந்தி யாவிலேயே வலிமையான சக்தியுள்ள இடம் தமிழ்நாடுதான் - இது பெரியார் மண் - இது சமூகநீதி மண் - திராவிட மண் - திராவிட மாடல் ஆட்சியின் மாண்பமைந்த மண்!

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கர்ஜனை!

நாடாளுமன்றத்தில், மோடியை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி அருமையாகச் சொன்னார்.

''எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும், தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காணாதீர்கள்'' என்று சொல்லிவிட்டு, ''நான் தமிழன், அந்த உணர் வினாலே பேசுகிறேன்'' என்று சொன்னார்.

எனவே, ராகுல் காந்தி அவர்களை மிகப்பெரிய அளவிற்கு ஈர்த்த காரணம் எது? திராவிட உணர்வுதான்.

திராவிடம் என்பது பிரித்துப் பார்ப்பதில்லை

திராவிடம் என்றால், ரத்தப் பரிசோதனை அல்ல நண்பர்களே-

திராவிடம் என்றால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

திராவிடம் என்றால், சமத்துவம் -

திராவிடம் என்றால் முற்போக்கு -

திராவிடம் என்றால், மதச்சார்பின்மை -

திராவிடம் என்றால், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!

திராவிடம் என்பது பிரித்துப் பார்ப்பதில்லை!

எட்டி நில், தொடாதே, பார்க்காதே, படிக்காதே என்று சொல்வது அல்ல.

நீதிக்கட்சித் தொடங்கி, அண்ணா ஆட்சியைப் பிடித்து, பிறகு கலைஞர் ஆட்சியை நிலைநாட்டி, அதற்குப் பிறகு எத்தனையோ சோதனைகள் வந் தாலும்கூட, அதனுடைய நீட்சியாக இன்றைக்கு நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் திராவிட ஆட்சியை அமைத்துக் காட்டியிருக்கிறார்.

(தொடரும்)

No comments:

Post a Comment