"அறிவு விருந்து" தொடர்-3 ஊன்றிப்படித்து உள் வாங்குங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 31, 2022

"அறிவு விருந்து" தொடர்-3 ஊன்றிப்படித்து உள் வாங்குங்கள்!

பெரியாரின் பன்முக ஆளுமை கலையும்-பெரியாரும்பேரா.மு.இராமசாமி

சில நாட்களுக்கு முன் பெரியார் திடலில் மே பதினேழு இயக்க நிறுவனர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் என்னைச் சந்தித்து, நீட் தேர்வு ஒழிப்பு, மத்திய கல்விக் கொள்கை, மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவை பற்றி தமிழ்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இன்றியமையா பரப்புரைப் பயணம் பற்றி மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்ததோடு, அவ்வியக்கத்தின் சார்பில்நிமிர்வெளியீட்டகம் - புத்தகங்களை பரப்பும் அமைப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறி, அதனைத் திறக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதன் வெளியீடுகளாக தந்தை பெரியாரின் 142ஆவது ஆண்டு பிறந்தநாளை ஒட்டி பல அறிஞர் பெருமக்களது உரைகள் தனித்தனி சிறு வெளியீடாக நேர்த்தியாக அச்சிப்பட்ட, மலிவுவிலை நூல்களை தந்தார். சில நாள்களில் பெரிதும் படித்தேன் - சுவைத்தேன்.

தந்தை பெரியார் பற்றி, பல்துறை அறிஞர்கள் பல தலைப்புகளில் பேசியவர்களின் நூல்கள் மிகப்பெரிய அறிவு வரைவுகளாக மிளிர்கின்றன.

கலகக்காரர் பெரியார்என்ற நாடகம் நடத்தி, பெரியாரின் சிந்தனைகளை ஒரு சிறப்பான புத்தாக்கமாக காட்டிய பேராசிரியர் மு.இராமசாமி அவர்கள் ஆற்றிய அற்புதமான 29 பக்க  உரை புது வெளிச்சம் பாய்ச்சுவதாக உள்ளது.

அதனை நமது வாசகப் பெருமக்கள் ஆழ்ந்து படித்து கற்கவேண்டும் என்ற அவாவுடன் அதனை இந்தப் பகுதியில் ஒரு அறிவு விருந்துத் தொடர் என்ற புதிய பகுதியாக வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

பெரியார் தமிழுக்கு செய்த, கலைக்குச் செய்த அருந்தொண்டுகளை சிந்தனைச் செல்வர், பேராசிரியர் மு.இராமசாமி அவர்கள் அருமையாக ஆவணப்படுத்தி உள்ளார்.

- கி.வீரமணி  (ஆசிரியர்)

அதன் பின்கதைகள் நமக்கு இங்கு வேண்டாம். ஆனால் அந்த நாடகம், விருப்பாக்ஷா எனும் அசுரர் தலைமையில், தைத்யாஸ், தானவாஸ், விக்னாஸ் போன்ற துர்தேவர்களின் தலையீடு காரணமாகக் கலவரத்தில் முடிந்ததென்பதும், அதற்குக் காரணம், நாடகத்தில், தேவர்கள் அசுரர்களைக் கேவலப்படுத்தியதென்பதும் நாட்டிய சாஸ்திரம் சொல்லுகிற கதை! பாகுபாடுதான், அசுரர் மீதான இழிவுதான், முதல் நாடகமாகச் சுட்டப்படுகிற அதன் புள்ளியாயிருக்கிறது. வேதமற்ற மனிதர்களை, மனச் சலவை செய்வதற்காக - அவர்களை மயங்க வைப்பதற்காக, உருவான நாடகத்திற்கு எதிர்நிலையில், வேதத் தீண்டாமையைத் தோலுரித்து, மக்களை விழிப்புணர்ச்சி கொள்ளச் செய்வதுதான் நாடகம் என்கிற கருத்துருவில் உறுதியாயிருக்கிறார் பெரியார்! அவருக்கான விழிப்புணர்வு என்பது, உறங்கிக் கொண்டிருக்கிற திராவிட இனத்தவரை உசுப்பேற்றி விடுகிற விழிப்புணர்வு!

சீர்திருத்த நாடக சங்கத்தால் நடத்தப்பட்டஇரணியன்நாடகம்

22.12.1929-இல் மதுரையில் நிகழ்த்தப்பட்டதாய்ப் பதிவாகியிருக்கிற திரிசிரபுரம் . நடராசனின்சந்திர-கமலா அல்லது சுயமரியாதையின் வெற்றிக்குப் பிறகு, பல முயற்சிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்திருந்தபோதும், சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் 09.09.1934 இல்சீர்திருத்த நாடக சங்கத்தாரால், பெரியார் தலைமையில் நிகழ்ந்த, புதுவை பாரதிதாசன் இயற்றியஇரணியன்நாடகம்தான், ஆரிய-திராவிட இனப் பிரச்சினையை முன் வைத்து, பழைய புராணத்தைப் புரட்டிப் போட்டு, திராவிட இயக்கச் சிந்தனைகளைக் கொண்டாடி நிகழ்ந்த மிகப் பெரும் நாடகமாகத் தெரிகிறது. அதில் பெரியார் இப்படிப் பேசுகிறார்:-

நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும், தற்கால உணர்ச்சிக்கும் தேவைக்கும் சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல், பழமையைப் பிரச்சாரம் செய்யவும், மூட நம்பிக்கை, வர்ணாசிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண்ணடிமை, பணக்காரத்தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும், அவைகளைப் பாதுகாக்கவும்தான் நடிக்கப்படுகின்றதேயொழிய வேறில்லை...இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட வேண்டும்.  சுயமரியாதையும், சீர்திருத்த  வேட்கையுமுள்ளவர்கள் அதை நடிக்கக் கூடாது. இரணியன் கதையில் வீர ரசம், சூட்சித் திறம், சுயமரியாதை ஆகியவைகள் விளங்கினதோடு, பகுத்தறிவுக்கு நல்ல உணவாகவும் இருந்தது

என்கிறார். இதுதான் கலை பற்றிய அவரின் பார்வை! இதன் மகிழ்ச்சியின் உச்சமாய், இதன் மூன்றாவது நிகழ்விற்கும்- வாணியம்பாடியை அடுத்த அம்பலூரில் - தலைமையேற்கையில்,

இரணியனாக நான் வேஷம் போடலாமா என்கிற ஆசை என்னை அறியாமல் எனக்கு ஏற்படுகிறது. ஆனால் தாடி இருக்கிறதே என்று யோசனையைக் கைவிட்டேன்... பல உபந்யாசங்கள் செய்வதைவிட, இத்தகைய நாடகம் ஒன்று நடத்தினாலும், மக்களுக்கு உணர்ச்சியையும், வீரத்தையும், மனமாற்றத்தையும் ஏற்படுத்தி, ஒரு கவர்ச்சியை உண்டாக்குகிறது. நம் எதிரில் நடந்த மாதிரிதான், ஆதியில் இரணியன் கதை இருந்திருக்க வேண்டும். ஆனால், அதைப் பார்ப்பனர்கள் தமக்குச் சாதகமாகத் திருத்தி உபயோகப்படுத்திக் கொண்டார்கள். பழைய நாடகங்களை நாம் சீர்திருத்திப் புதிய முறையில் நடத்திக் காண்பிக்க வேண்டும். நாடகங்களில் பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். இந்தப் பழைய நாடகங்கள் மக்களை மூடர்களாகவும், அர்த்தமற்ற கொள்கை உடையவர்களாகவும் செய்திருக்கின்றன. நாடகத்தின் மூலம் அறிவு வளர இடமிருக்கின்றது. ஆகையால் நாடகங்களைப் புதிய முறையிலே திருத்தி மக்களுக்குப் பயன்படும்படிச் செய்ய நாடகாசிரியர்கள் முன்வர வேண்டும். வெறும் சங்கீதமும்  பாட்டும் வேண்டியதில்லை. கருத்து இருந்தால் போதும்!... இம்மாதிரி நாடகங்களை நாடெங்கும் நடத்தினால், மக்கள் உணர்ச்சி பெற்று மூட நம்பிக்கைகளையும் அர்த்தமற்ற கொள்கைகளையும் உடைத்தெறிவார்கள்.”

என்கிறார்.

திராவிடர் கழகம், தன் தோளில் தூக்கிச் சுமந்த வரலாறு

1948 இல் இந்நாடகம் அரசின் தடையை எதிர்கொண்ட முறை இன்னமுமே ரசனைக்குரியது! தடை செய்யப்பட்ட நாடகத்தை நிகழ்த்தியதற்காகக் காஞ்சித்திராவிட நடிகர் கழகத்தினர் கைது செய்யப்பட்டு 143 அய்பிடி பிரிவின்படியும் 1876-ஆம் ஆண்டு நாடக நிகழ்த்துதல் சட்டம் 19 (6)-இன் படியும் குற்றம் சுமத்தி, மூன்று மாதக் கடுங்காவல்  தண்டனை + ரூ.50/ தண்டத் தொகையும், அதைக் கட்ட மறுத்தால் மூன்று வாரம் கூடுதல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. முன்று மாதம் + முன்று வாரத் தண்டனையும் முடிந்து, வேலூர் சிறையிலிருந்து வெளியே வரும் தோழர்களை,  22.12.1948-இல் வேலூரிலே பெரியார் வரவேற்றுப் பாராட்டுகிறார்; அடுத்த நாள் திருவத்திபுரத்தில் (செய்யாறு) நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்திற்குப் பெரியார் தலைமையேற்கிறார். கிறித்துமஸ் அன்று காஞ்சிபுரத்திலே அறிஞர் அண்ணா தலைமையில் பாராட்டுவிழா! காஞ்சிபுரத்தில் நடந்த வரவேற்புக்குச் செங்கற்பட்டிலிருந்து தோழர் எம்.சின்னையா அவர்கள் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட திராவிட இயக்கத் தோழர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு, வழியெங்கும், ‘பேசாப் பொருளாய் அனைவரையும் பேசவைத்துதிராவிட இயக்கச் சிந்தனைகளைப் பரப்புரை செய்து, காஞ்சிபுர வரவேற்பில் கலந்து கொண்டிருக்கின்றனர். திராவிடர் இயக்கக் கருத்தியலைப் பேசியதற்காகத் தடை செய்யப் பெற்ற, திராவிட நடிகர் கழகத்தின் நாடகம் ஒன்றிற்காகத் திராவிடர் கழகம், தன் தோளில் அதைத் தூக்கிச் சுமந்த வரலாறு, தமிழ் நாடக வரலாற்றில் அவசியம் குறித்து வைக்கத்தக்கதாகும்!

தமிழ் மாகாண நாடகக் கலை

அபிவிருத்தி மாநாடு

குறித்துவைக்கப்பட வேண்டிய இன்னொன்று,

11.02.1944-இல் ஈரோடு சென்ட்ரல் கலையரங்கில் நடைபெற்றதமிழ் மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடுஆகும்! நாடகத்திற்கென இந்த வகையான மாநாடொன்று, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடைபெற்றிருப்பதாகத் தெரியவில்லை. டி.கே. சண்முகம் அவர்கள் தலைமையில், நடிகர் சிவதாணு அவர்கள் முயற்சியில், ராவ்பகதூர் பம்மல் சம்பந்தனார் தமிழ்க்கொடி ஏற்ற, சர். ஆர்.கே. சண்முகம் அவர்கள், மாநாட்டைத் துவங்கி வைத்து, நிறையுரையும் ஆற்றியிருக்கிறார். இதில், திராவிடர் இயக்கம் கலந்துகொண்டு, சீர்திருத்த நாடகங்களுக்காகக் குரலெழுப்பி, நாடகத்தின் திசைமாற்றத்திற்குக் காய் நகர்த்தியதென்பது, தமிழ் நாடகத்தின் பெரும்போக்கில் இன்னொரு வரலாற்றுத் தடமாகும். நாள் முழுக்க நடைபெற்ற அம் மாநாட்டில், திராவிடர் இயக்கத்தின் அறிஞர் பெருமக்கள், அண்ணா, கி..பெ., கலைவாணர், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் உரை நிகழ்த்தியுள்ளனர்.

தோழர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் பேச எழுந்ததும் யாரோ ஒரு தோழரால் தடுக்கப்படவே, பெரும் குழப்பம் ஏற்பட்டு, பெரும்பாலோர் வேண்டுகோளுக்கிணங்க பிறகு பேசினார் என்று 19-02-1944-நாளிட்ட குடியரசு கூறுகிறது. தன் உரையில், ஒரு குறிப்பொன்றை அவர் தருகிறார்.

இம்மாநாட்டின் காரியதரிசிக்கு கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றுமாறு நான் ஒரு தீர்மானம் அனுப்பி வைத்தேன். அத்தீர்மானத்தைப் பிரேரேபித்து, அதைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய கடிதத்தை வரவேற்புக் கமிட்டியில் சமர்ப்பித்து விட்டதாகக் காரியதரிசியிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. ஆனால், அத்தீர்மானம் மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டதா; மாநாட்டில் அத்தீர்மானம் கொண்டுவரப்படுமா என்பதைப் பற்றிய குறிப்பொன்றும் காரியதரிசியின் கடிதத்தில் இல்லை. தீர்மானம் கீழ்க்கண்டவாறு:- ‘தற்போது நாடகக் கம்பெனிகளிலும், தனிப்பட்ட நாடகங்களிலும், புராண சம்பந்தமான மூடநம்பிக்கைகளையே அடிப்படையாகக்கொண்ட நாடகங்களே மலிந்து, மக்கள் அறிவைப் பாழ்படுத்தி வருகின்றன. இம்முறை மாறி, பகுத்தறிவை ஊட்டும்படியான சமூக சீர்திருத்த நாடகங்கள்; ஜாதிபேத ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண் மக்கள் காதல் மணம், கலப்பு மணம், விதவை மணம், மக்கள் பகுத்தறிவு வளர்ச்சி முதலியவைகளை நடத்த வேண்டுமென்று நடிகர்களையும், நாடகக் கம்பெனிகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இத்தகைய சீர்திருத்த நாடகங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கும்படியும் கேட்டுக் கொள்ளுகிறது’. பெரியாரின் புரட்சிக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட முத்தமிழ் நுகர்வோர் சங்கத்தின் சார்பாக, மாநாட்டுக்கு அனுப்பிய தீர்மானங்களையும் யான் கண்ணுற்றேன். அவையனைத்தும் என் தீர்மானத்தின் கருத்துகள்தாம் என்பது வெள்ளிடைமலை

என்பதாகச் செல்கிறது.

ஈரோடு முத்தமிழ் நுகர்வோர் கழகத்தார் வேண்டுகோளை ஏற்று, திருச்செங்கோடு, திருப்பூர், கரூர், தவுட்டுப்பாளையம், புலியூர், திருச்சி முதலான பல ஊர்களிலிருந்து ஏராளமான இயக்கத் தோழர்கள் நம் தீர்மானங்களை நிறைவேற்றி வைக்க வந்திருந்தனர். திருச்செங்கோடு உண்மை நாடுவோர் சங்கம், தவுட்டுப்பாளையம் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், தூத்துக்குடி தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திருச்சி தியாகராஜ வாசகசாலை, கடையநல்லூர் ஸ்லி ராஜகல் இஸ்லாம் சங்கம், சேலம் செவ்வாப்பேட்டை திராவிடர் கழகம், லாலுகாபுரம் சுயமரியாதைச் சங்கம், திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம், சாத்தூர் விசுவநாதம் வாசகசாலை, தூத்துக்குடி பெரியார் இளைஞர் சங்கீத சபா, தூத்துக்குடி க்ஸ்டிஸ் வாலிபர் சங்கம், திருச்சி மருத்துவ குலச் சங்கம், திருவாரூர் முரசொலி வெளியீட்டுக் கழகம், துறையூர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், பூவாளூர் திராவிட இளைஞர் கழகம், விழுப்புரம் திராவிடர் கழகம் ஆகியவற்றின் சார்பாகவும், கும்பகோணம் தோழர் கே.கே. நீலமேகம், வேலூர் தோழர் அண்ணல் தங்கோ முதலானோரும், மேற்படி மாநாட்டில் தோழர் எம்.சித்தையா நாயக்கர் அவர்களின் தீர்மானங்களும், ஈரோடு முத்தமிழ் நுகர்வோர் கழகத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படவேண்டும் எனக் கோரித் தீர்மானங்கள் அனுப்பியிருந்ததாகக் குடிஅரசு குறிப்பிடுவதிலிருந்து, இத்தனை முஸ்தீபுகளையும் செய்யப் பின்புலமாயிருந்த பெரியார், அதை வெறுமனே நாடகக் கலைஞர்கள் கூடிக் கலைகிற மாநாடாக மட்டும் கருதியிருக்கவில்லை என்பது தெரிகிறது. இறுதியில், தீர்மானங்கள் எதுவுமே நிறைவேற்றப்படாததோடு, ‘பெரியார் வாழ்க, புராண நாடகம் ஒழிக, பழமை இசை ஒழிக, திராவிட நாடு திராவிடருக்கேஎன்ற பேரொலியுடன் மாநாடு முடிவுற்றதாகத் தெரிகிறது. பிரதிநிதிகளில் சிலரும், மாநாட்டுக்கு வந்த நாடகசபையினரில் சிலரும், இதுவென்னநாடகக்கலை மாநாடுஎன்று டி.கே.எஸ். சகோதரர்கள் கூட்டி, “அதுசுயமரியாதை மாநாடாகிவிட்டதே, இதற்காகவா எங்களையெல்லாம் வரவழைத்தீர்கள்என்று சங்கடப்பட்டார்களாம். மாநாடு நடத்த முயற்சி எடுத்துக் கொண்டவர்களும், ‘எவ்வளவு முயற்சி செய்தும் நாம் அச்சடித்து வைத்திருந்த தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது வீணாயிற்றே என்று ஏங்கினார்களாம்என்று பதிவு செய்துள்ளது குடிஅரசு! தமிழ் நாடகத்தைச் சமூகச் சீர்திருத்தத் திசை நோக்கித் திருப்பிவிட்ட, ஒரு காலத்தின் சண்டமாருதமாயிருந்ததில் முக்கியப் பங்கு வகித்தது திராவிடர் இயக்க நாடக முயற்சிகள் என்பது, தமிழ் நாடக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகக் குறிக்கப்பட வேண்டியது!

ஆரியர்-திராவிடர் போருக்கான அறைகூவல்

அடுத்து, ‘கூத்தாடிகள்என்று எதிர்ப்பாளர்களால் முத்திரை குத்தப்பட்டு, இழிவாகப் பேசப்பட்டு வந்த நிலையில், அதையே தனக்கான கவச குண்டலமாய்க் கொண்டு, நாடகம் எழுதிய திராவிடர் இயக்க நாடகாசிரியர்கள், நடித்த திராவிடர் இயக்க நாடக நடிகர்கள், செயல்பட்ட திராவிடர் இயக்க நாடகக் குழுக்கள், திராவிடர் இயக்க அமைப்பின் பேராதரவு என்பதாய்ப் பெரு வீச்சுடன் தமிழகத்தின் மக்கள் மனங்களில் கூத்தாடிக் கொண்டிருந்தன, திராவிடர் இயக்கச் சிந்தனைகள்! பல நாடகங்கள் தடையை எதிர்கொண்டிருந்தன. அவை, தனி நூலாகப் பேசப்பட வேண்டியவை. திராவிடர் இயக்கத்தவரின் நாடகங்களைத் தடைசெய்ய வேண்டியே, 1876ஆம் ஆண்டில் உருவான நாடக நிகழ்த்தல் சட்டத்தைத் திருத்தி, 1954 இல் புதிய நாடக நிகழ்த்தல் சட்டமாக, சென்னை (தமிழ்நாடு) நாடக நிகழ்த்தல் சட்டம் உருவாக்க வேண்டிய பீதியை, அதிகார நிறுவனத்திற்கு ஏற்படுத்திய நெருக்கடிகளாக, திராவிடர் இயக்கத்தினரின் ஆசி பெற்ற நாடகங்களே இருந்தன. ஆரியர்-திராவிடர் போருக்கான அறைகூவல்களாகவும் அவை இருந்தன. ஆளுபவரின் வர்க்க-வருண நலன்தான், அவசர அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்க வேண்டிய தேவையை அவர்களுக்கு ஏற்படுத்தி இருந்தன. அந்தவகையில் அவர்களுக்குப் பீதியேற்படுத்தியிருந்த திராவிடர் இயக்கத்தின் நாடகப் பீரங்கியாய் விளங்கியவர், திராவிடர் இயக்கத்தின் செல்லப் பிள்ளையான எம்.ஆர். ராதா அவர்கள்! உண்மையில் இவர், திராவிடர் கழகத்தின் உறுப்பினரே இல்லை; ஆனால் இவரை ஒதுக்கிவிட்டுத் திராவிடர் இயக்க நாடகத் தளகர்த்தர்களைப் பட்டியலிடவே முடியாது. திராவிடர் இயக்க நாடகத்தின் முதல் வரிசைப் பங்காளிகளில் இவர் மிக முக்கியமானவர். எம்.ஆர். ராதா தான், 1876 நாடக நிகழ்த்தல்கள் சட்டத்தின் அதிகார முடிச்சை அவிழ்த்து, புதிய முடிச்சு போடக் காரணமாயிருந்தவர்! எம்.ஆர். ராதாவின் நாடகங்களும் அப்போது இருந்து வந்த 1876 நாடக நிகழ்த்தல்கள் சட்டப்படியே தடை செய்யப்பட்டிருந்தன. எம்.ஆர். ராதா அதைப் புதுவகையில் எதிர்கொண்டார். 1950-இன் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 3 இல் 19 ஆவது சரத்து, இந்தியக் குடிமகனுக்கு வழங்கியிருக்கிற அடிப்படை உரிமையான கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, வெளிப்பாட்டுரிமையை, இந்தியக் குடியரசில் காலாவதியாகிப்போன பிரிட்டிஷாரின் 1876-இன் சட்டப்படி எப்படித் தடை விதிக்க முடியும் என்பதே அவரின் கேள்வி! இதற்கு நீதிமன்றத்திடம்-அரசிடம், போதிய பதில் இல்லாத நிலையில், அரசின் நடவடிக்கைகள் 18.09.1954-இல் அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு. ராஜமன்னார், திரு. ராஜகோபால் அய்யங்காரால் தள்ளுபடி செய்யப்பட்டன. விழித்துக் கொண்ட அரசு, 27.11.1954-இல், புதிய நாடகச் சட்டத்திற்குரிய மசோதாவொன்றை விசேட அரசிதழில் வெளியிடுகின்றது. அதன்படி, அப்போது அமலிலிருந்த, 1876 நாடக நிகழ்த்தல்கள் சட்டத்தை நீக்கிவிட்டு, சென்னை சட்டசபையில் புதிய திருத்த மதோதா கொண்டுவரப்படும் என்று அறிவித்திருந்தது. அதற்கு அரசு சொல்லியிருந்த முக்கியக் காரணம், ‘1876 சட்டத்தில், கட்சிக்காரர்கள் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவிக்கவோ அல்லது அப்பீல் செய்யவோ வாய்ப்பில்லை. ஆகவே 1876 சட்டத்தை மாற்றிவிட்டு, புதிய சட்டத்தை இயற்ற சர்க்கார் முடிவு செய்திருக்கின்றனர். இது, சென்னை நாடக நிகழ்த்தல்கள் சட்டம் என்பதாக அழைக்கப்படும்என்பதாக இருந்தது. ஓநாய்கள் ஆடுகளுக்காக நயந்து பேசுவது என்பது கதையில் மட்டுமில்லை, நிஜத்திலும், எல்லாக் காலங்களிலும், இப்பொழுதும், ஆளுபவர்களின் நடவடிக்கையாகவே இருந்து வந்திருக்கிறது என்பதைத்தான், வரலாறும் நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. உங்கள் நலனுக்காக, உங்கள் நலனுக்காகவே என்று, தம் வாய் கிழியப் பேசுவார்கள்; அதன் ஒவ்வொரு சரத்தையும், பொதுத் தளத்தில், மக்களோ-மக்கள் பிரதிநிதிகளோ விவாதிக்க வாய்ப்பே தராமல், ‘மக்கள் நலன்என்கிற தேன் தடவிய தங்கள் பேச்சால், கார்ப்பரேட் நலனுக்கான தங்களின் குரூர வாடையை மறைக்கப் பார்க்கும் ஒற்றை முடிவை, நிறைவேற்றும் வழிமுறையைப் பெரும்பான்மையைக் கொண்டு நிரூபிக்கின்றனர். அன்றும் அப்படித்தான் நிகழ்ந்தது. 1876-க்கும் 1954-க்கும் என்ன மாற்றம்? ‘பல பிரிவுகள் கொண்ட மக்களுக்குள் பகையையோ அல்லது விரோத உணர்ச்சியையோ தூண்டக்கூடியதும்; மத உணர்ச்சியையோ அல்லது மத நம்பிக்கையையோ பாதிக்கக்கூடியதும்என்பதும், ‘தன் மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை, பாதிக்கப்பட்ட கட்சிக்காரர் உயர்நீதிமன்றத்திற்கு அப்பீல் செய்து கொள்ளலாம்என்பதும் மட்டுமே, 1954 மசோதாவில் முக்கிய சரத்துகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன. மேலுள்ள முதல் சரத்து எம்.ஆர். ராதாவிற்கானது; பகுத்தறிவு பேசும் திராவிடர் இயக்க நாடகங்களுக்கானது! அடுத்து வரும் இரண்டாவது சரத்து, மற்றைய நாடகக் கலைஞர்களுக்கும், சனநாயகத்தின் பேரில் நம்பிக்கைக் கொண்டவர்களுக்குமாகக் காட்டிக் கொள்ளக்கூடிய அவர்களின் தேன் தடவல்கள்! இரண்டாவது சரத்தை மட்டுமே அழுத்தம் கொடுத்து ஆட்சியாளர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்! உண்மையில், இது கொண்டுவரப்படுவதே, முதல் திருத்தத்திற்காகத்தான்! இந்தச் சட்டமும், அடிப்படையில் முந்தைய 1876 சட்டத்தின் இன்னொரு வண்ணக்கோலம்தான்! இது, திராவிடர் இயக்கத்தவரால்ராதா சட்டம்என்பதாக எளிய முறையில் மனங்கொள்ளப்படலாயிற்று!

பெரியார்- திராவிடர் இயக்கம் வைத்த அளவுகோல், சமூக இழிவிற்கான எதிர்ப்பு!

பெரியார் அப்பொழுது தமிழகத்தில்-இந்தியாவிலேயே இல்லை. உலக பவுத்த மாநாட்டில் கலந்து கொள்ள, 20-11-1954-இல், சென்னையிலிருந்து பர்மாவிற்குக் கிளம்பியவர், பல நாடுகள் சுற்றுப் பயணத்திற்குப் பின், 17-01-1955-இல்தான், சென்னைக்குத் திரும்புகிறார். பெரியார், பக்கத்தில் இல்லாத நிலையில், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தங்கள் கக்கத்தில் இந்தப் பிரச்சனையை இடுக்கிக் கொண்டு, தமிழகம் அதிரக் குரலெழுப்பியிருந்தனர். இந்திய ஒன்றியத்தில், இதற்கான எதிர்ப்புக் குரலும், புதிய சட்ட மசோதாவும் உருவானது தமிழகத்தில்தான்! தோழர்கள் பி. இராமமூர்த்தி, கல்யாணசுந்தரம், மணலி கந்தசாமி, .ஜீவானந்தம், எஸ். சுயம்பிரகாசம், கோவிந்தசாமி, கே.டி இராஜூ , இன்னும் பலதோழர்கள் இரு அவைகளிலும், வெளியிலும் எதிர்த்தும், குரல் ஓட்டெடுப்பில், பெரும் பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சட்டம் நடைமுறைக்கு வந்ததாய் முடித்து வைக்கப்பட்டது. எம்.ஆர். ராதா விடுதலை செய்யப்பட்டார். பெரியார் திரும்பிவந்த பின், திருவாருரில் 1955 பிப்ரவரியில் இந்தச் சட்டத்தின் நகலை எதிர்த்தார். இன்னமும் இதுதான் நமக்கான சட்டமாய்த் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது, மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பதாய்! நாடக உரிமைக்காகத் திராவிடர் கழகம் மேற்கொண்ட இந்தப் போராட்டமும் தமிழ் நாடக வரலாற்றில் குறித்து வைக்கத் தக்கதாகும்! இவை அனைத்திலும் பெரியார்- திராவிடர் இயக்கம் வைத்த அளவுகோல், சமூக இழிவிற்கான எதிர்ப்பு! அதைத் தூக்கிப் பிடிக்கும் கலை இலக்கியங்கள், அவற்றைக் கொண்டு செலுத்தும் பிராமணியம், இந்துத்துவம், அவற்றிற்குத் துணைநிற்கும் கடவுள் சிந்தனை ஆகிய அனைத்தும் விமர்சிக்கப்பட்டு, மனித நேயத்தை உயர்த்திப் பிடிப்பதாகவே திராவிட இயக்கத்தார் நாடகங்கள் அமைந்திருந்தன. இக் கருத்துகளை உயர்த்திப் பிடித்த காரணத்தால், எம்.ஆர். ராதாவின் நாடகங்களுக்கு ஏழு முறை தடையும், ஆறு வழக்குகளும், பல ஊர்களில் இவரின் நாடகங்களுக்கு 144 தடை உத்தரவும், சிறைவாசமும் விதிக்கப்பட்டிருந்தன. இதுபோக, கல்வீச்சு, கலவரம் என்று இத்தனைச் சிக்கல்களுக்குமிடையிலும், 1944 முதல் 1964 வரையும் 20 ஆண்டுகளில், கணக்கிற்குத் தப்பியவை போக, ராதா நிகழ்த்திய நாடக நிகழ்த்தல்களின் எண்ணிக்கை 5641 ஆகும். வீழ்நாள் படாது நிகழ்த்தியிருந்தால், சற்றேறக்குறைய 15 முழுமையான ஆண்டுகள்! திராவிடர் இயக்க நாடக நிகழ்த்தல்களின் உச்ச அளவுமானியாக இருந்தவர் எம்.ஆர்.ராதா எனும் கலைஞர்!

ஜாதிக்கொரு நீதியெனும், அநீதிக்கெதிரான போராட்ட உணர்வை நெஞ்சில் ஏற்றும் இளைஞர்களுக்கு - கலைஞர்களுக்குப் பெரியார் விட்டுச் சென்றிருக்கின்ற சிந்தனையை, நம் நெஞ்சில் ஏற்றி இக்கட்டுரையை இப்படி முடிக்கலாம்:- அவர் இளைஞர்களுக்கு - கலைஞர்களுக்கு - களப் பணியாளர்களுக்கு வைத்துவிட்டுச் சென்றிருக்கிறசொத்துஎன்ன தெரியுமா?

இளைஞர்களே! துணிவு கொள்ளுங்கள்! சாகத் துணிவு கொள்ளுங்கள்! உங்கள் சொந்த நலனையும், வாழ்வையும் விட்டுத் தொண்டாற்றத் துணிவு கொள்ளுங்கள்! வெறும் வீரம், உற்சாகம், தியாக சிந்தை இவைமட்டும் இருந்தால் போதாது. ஆய்வு, ஓய்வு பற்றிய கண்ணோட்டம், நன்மை தீமைகளைப் பகுத்தறியும் ஆய்வு, சாத்தியம், அசாத்தியங்களைப் புரிந்து கொள்ளும் தெளிவு,  கால தேச வர்த்த மானங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் - இவையெல்லாம் இருந்தால் மட்டுமே இன்றைய இளைஞர்கள் பொதுவாழ்விற்குப் பயன்படக்கூடியவர்கள். இல்லையெனில், ஒருசில சுயநல சக்திகளின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டு அழிந்து போவார்கள். இன்னும் நீண்ட காலம் வாழ இருக்கிற இளைஞர்களுக்கு, சீக்கிரத்திலேயே சாகப் போகிற கிழவனாகிய, நான் விட்டுச் செல்லும் சொத்து இது ஒன்றுதான்!”

இதுதான்கலகக்காரர் தோழர் பெரியார்நாடகத்தில், பெரியார் பேசும் இறுதி அறைகூவல்! - இதுவே, இப்போதைக்கும் பொருத்தமானதாய்த் தெரிகிறது!

(நிறைவு)

No comments:

Post a Comment