சிதம்பரம்,மார்ச்2- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் இரண்டாம் நாளாக தேவாரம், திருவாசகம் பாடச் சென்ற தெய்வத்தமிழ் பேரவையினர் 33 பேர் கைது செய்யப் பட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தெய்வ தமிழ்ப் பேரவை சார்பில் ஆறு நாள்கள் தேவாரம், திருவாசகம் பாடும் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது. காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. நேற்று (1.3.2022) இரண்டாவது நாளாக சிவனடியார்கள் 30க்கும் மேற்பட்டோர், கீழசன்னிதி வழியாக கோவிலுக்குள் செல்ல முயன்றனர்.
கடலூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் தடுத்தனர்.
அப்போது, தெய்வத்தமிழ் திருமுறை வழிபாட்டு இயக்கம் மோகனசுந்தரம் அடிகளார் என்பவர் அதே இடத்தில் நடராஜரை எழுந்தருளச் செய்யும் பூஜை எனச் செய்து, தேவாரம், திருவாசகம் பாடினார்.
பின்னர், 'நடராஜர் கோவில் பிரச்சினைகளில் அரசு சரியான முடிவெடுக்க வேண்டும்; தீட்சிதர்களிடம் இருந்து கோவிலை மீட்க வேண்டும்; தீண்டாமையை ஒழிக்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 33 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment