விருத்தாசலம்,மார்ச்2- கடலூர் மாவட்டம் விருத் தாசலத்தில் விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6ஆம் தேதி குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. விருத்தாம் பிகை அம்மன் சன்னதி கோபுரத்தில் 3 கலசங்கள் வைக்கப்பட்டு இருந்தன. 3 அடி உயரம் கொண்ட இந்த கலசங்களில் தலா 100 கிராம் தங்கமுலாம் பூசப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜைகள் முடிந்தவுடன் சிவாச்சாரியர்கள் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இரவு காவலர்கள் மட்டும் கண்காணிப்பு பணியில் இருந்தனர். நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மன் சன்னதியில் கோபுர தரிசனம் செய்தபோது, அங்கு 3 கலசங்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று இரவு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், நள்ளிரவு 12 மணியளவில் கோபுரத்தில் கலசங்கள் இருந்ததை பார்த்ததாக
தெரிவித்தனர். அதன்பிறகே 3 கலசங்களையும் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
கோவிலில் உள்ள 32 கண்காணிப்பு கேமராக்களில் திருடிய நபர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்று காவல்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால் அம்மன் சன்னதிக்கு மேல் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இதுபற்றி அறிந்த அந் நபர்கள்தான் திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
திருட்டு போன 3 கலசங்களின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment