"கட்டை விரலின் கதை" கேட்க வாரீகளா? (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

"கட்டை விரலின் கதை" கேட்க வாரீகளா? (1)

  புத்தகங்கள் எழுதுவதில் பெரியவர்களுக்கு எழுதுவதைவிட இளையர்களுக்கும், குழந்தைகளுக்கும் கதைகள் எழுதி அதன்மூலம் அவர்களை  சிறுவயதிலேயே சிந்திக்கச் செய்வது எளிதான பணியல்ல.

    "குழந்தை இலக்கியம்" என்பது ஊக்கப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. 'அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது!" என்பது பழமொழி என்றாலும், இன்றைய நம் புதிய அனுபவத்தில் நவீன அறிவியல், மின்னணு யுகத்தில் ஏற்படும் அனுபவங்கள் என்ன கற்றுத் தருகின்றனவென்றால்,

    ' அய்ந்தில் விதைப்பதால் அய்ம்பதில் அது சிறப்பான பலனைத் தரும்' என்பதே!

    அதற்கு, குழந்தை மனங்களில் முற்போக்கு சிந்தனைகளை விதைப்பது கட்டாயம் அல்லவா?

    அதை கதைகள் மூலம் சொல்லி, அவர்கள் மனதில் பதிய வைப்பது - மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் சிந்தனையை செழுமைப்படுத்தும்.

    குழந்தை இலக்கிய எழுத்தாளர் நண்பர் மு. முருகேஷ் அவர்களது "அம்மாவுக்கு மகள் சொன்ன முதல் கதை" என்ற புத்தகத்திற்கு, 2021ஆம் ஆண்டிற்கான 'பால சாகித்திய புரஸ்கார்" விருது கிடைத்திருக்கிறது!

    இந்த விருது பெற்ற நூலைப் பற்றி 'பெரியார் பிஞ்சு' இம்மாத இதழில்கூட பேரப் பிள்ளைகளுக்கான கடிதத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    இந்த நூலில் உள்ள 16 கதைகளையும் படித்து செரித்துக் கொண்டால் - இந்த 16 பெற்றதால் பெரு வாழ்வு வாழலாமே!   'கட்டை விரல்' என்று அவர் புதுஒளியைப் பாய்ச்சி எழுதியுள்ள கதை - வெறும் கதை மட்டுமல்ல; பழைய அநீதியின் காதைப்பிடித்துத் திருகும் புத்தாக்கப் பாடம் - இந்நூலை வாங்கிப் படித்து வீட்டில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளைப் படிக்க வையுங்கள். 'கட்டை விரலின் கதை' ஒரு புதிய கோணத்தில் பிள்ளைகளது சிந்தனையைத் தூண்டும் கதை என்பதால் 'சாம்பிளுக்கு' அதை மட்டும் தருகிறேன்.

    கற்க - பயன் பெற்று நிற்க - அதற்குத்தக!  இன்றைய 'நீட்' தேர்வுக்குக்கூட இது ஒரு வகை பதிலடிபோல் உள்ளது என்பது உங்களுக்கு படித்த பிறகு புரியும். படித்து மகிழுங்கள்.

அந்தக் கதை இதோ!

"அன்று ஞாயிற்றுக்கிழமை.

    பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகளின் கூச்சலால் வீடே கலகலத்தது. குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியாடிக் கொண்டிருந்தனர்.

    மின்தடை வேறு; நடுவீட்டில் வாய்மூடி மௌனமாய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தொலைக்காட்சிப் பெட்டி.  “டேய்... சத்தம் போடாம, வெளிய போய் விளை யாடுங்க..!” என்று அப்பா அதட்டினார்.

குழந்தைகள் ‘ஓ... ஓ...'வென பெருங்கூச்சலிட்டபடியே தெருவுக்கு ஓடி வந்தனர்.

அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் சேர்ந்து கொண்டனர்.

குழந்தைகள் கூடினாலே விளையாட்டுதானே. விளை யாட்டு என்றாலே ஒரே கொண்டாட்டம்தானே..! ரகு தான் முதலில் கேட்டான். “என்னடா... விளையாடலாம்...?” உடனே, “கண்ணாமூச்சி விளையாடலாம்..!” என்றான் டேவிட்.

"வேண்டாம்டா. கிரிக்கெட் விளையாடலாம்..!” என்றான் கதிர். "ஆமாண்டா, கிரிக்கெட்டே விளையாடலாம்...'' பலமாய்த் தலையாட்டி ஆமோதித்தான் அமீர்.

கிரிக்கெட் விளையாட வேண்டுமென்பதே நிறைய குழந்தைகளின் விருப்பமாக இருந்தது. 

குழந்தைகள் அனைவரும் இரு அணிகளாகப் பிரிந்தனர். 

'எந்த அணி முதலில் பேட் செய்வது..?' ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டிவிட்டான் பூபாலன். "அய்... பூ விழுந்திருக்கு..! நாங்க தான் பேட்டிங்...” என்று துள்ளிக் குதித்தான் குட்டிப் பையன் கோகுல்.

முதல் அணி பேட்டிங் செய்ய தயாராய் நிற்க, இரண்டாவது அணி பந்தை வீசத் தயாரானது. வேகமாய் ஓடி வந்து, முதல் பந்தை வீசினான் டேவிட். முதல் பந்தையே பலங்கொண்ட மட்டும் ஓங்கி விளாசினான் தாமு. உயரே எழும்பிய பந்து, குட்டிச்சுவரைத் தாண்டிப்போய், குப்பைமேட்டில் விழுந்தது. பந்தை எடுத்து வர ஓடினான் ரகு. “டேய்... ஓடு... சீக்கிரம்..!” குரல்கள் துரத்திக்கொண்டே வந்தன. வேகமாய் ஓடிவந்த ரகு, மூச்சு வாங்கிட சற்றே நின்றான். குப்பைமேட்டில் விழுந்த பந்தைத் தேடினான்.

எங்கு பார்த்தாலும் குப்பைக் கூளங்கள்; சிதைந்த கழிவுகள்; கிழிந்த பாலித்தீன் பைகள் வேறு காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன. உடைந்த சிமெண்ட் குழாய் அடியில் பந்து கிடந்தது. ஓடிப்போய் குனிந்து எடுத்தான். பக்கத்தில் சிவப்பாய் ஏதோ ஒன்று அசைந்தது. புழுவா, பூச்சியா.... சட்டென எதுவும் புலப்படவில்லை. ஆனாலும், என்னவோ வித்தியாசமாய் நெளிவது தெரிந்தது. சிறுகுச்சியொன்றை எடுத்து, மெதுவாக அதைப் புரட்டினான். லேசான முனகல் சத்தம் கேட்டது. கூர்ந்து கேட்டான். "யம்மா... யப்பா..!” என முனகல் சத்தம் கேட்டது. ரகுவின் கண்கள் அகலமாய் விரிந்தன. ‘எங்கிருந்து இப்படியொரு சத்தம்...?' உற்றுப் பார்த்தான். அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.

அசைந்து கொண்டிருந்தது புழுவோ, பூச்சியோ அல்ல... வெட்டப்பட்ட, இரத்தக் கறை படிந்த மனிதனின் கட்டைவிரல் அது. அந்த கட்டைவிரல்தான் வலி பொறுக்காமல் முனங்கிக் கொண்டிருந்தது. 

“டேய்ய்ய்... எல்லாரும் இங்க வாங்கடா..!"

ரகுவின் பெருங்கூச்சல் கேட்டு, எல்லாக் குழந்தைகளும் குப்பை மேட்டருகே ஓடி வந்தனர்.

“என்னடா... என்னாச்சு..?" “ஏன்... கத்தினே?" “பேயறைஞ்ச மாதிரி இப்படி நிக்கிறே! என்னாச்சுடா...?" ஆளாளுக்கு கேள்விகள் கேட்டனர். இன்னும் பயம் விலகாத குரலில் ரகு சொன்னான்; “டேய்... அங்கே பாருங்களேன். வெட்டித் துண்டான கட்டைவிரல் வலியால முனங்குது..!"  'கட்டை விரலா..? அதுவா பேசும்..?' ஆளாளுக்கு முணுமுணுத்தபடி, ரகு கை நீட்டிய இடத்தை லேசான அச்சத்தோடு பார்த்தனர்.

அங்கே வெட்டப்பட்ட, இரத்தக்கறை படிந்த கட்டைவிரலொன்று வலியோடு நெளிந்தபடி கிடந்தது. “டேய்.... ஆமாண்டா . மனுச விரல்டா..! அதுதான்டா முனங்குது..!" எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள். சற்றே துணிச்சலை வரவழைத்துக் கொண்ட ரகு, கீழே குனிந்து, அந்தக் கட்டைவிரலைப் பார்த்துக் கேட்டான். “யார் நீ..? உனக்கு என்னாச்சு..? ஏன் இங்கே தனியா வந்து கிடக்கிறே..?"

லேசாய் அசைந்த கட்டைவிரல், “அது ஒரு பெரிய கதை தம்பிங்களா. நீங்க போயி விளையாடுங்க..!” என்றது. “நாங்க அப்புறமா விளையாடுறோம். உங்கதைய மொதல்ல சொல்லு..!" என்றான் அமீர்.

“ஆமாமா... சொல்லு. நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்..!” கோரஸாய் எல்லாக் குழந்தைகளும் கேட்டார்கள். குழந்தைகள் ஆர்வத்தோடு கேட்கவே மறுக்க முடியாமல், தன் கதையைச் சொல்லத் தொடங்கியது அந்தக் கட்டைவிரல்.

அஸ்தினாபுரம் அழகான நாடு. அந்த நாட்டை ஆண்டு வந்தார் பாண்டு மன்னன். அவருக்கு அய்ந்து மகன்கள்.

முதலாமானவன் விதுரன். அடுத்தவன் பீமன், மூன்றாவது அர்ஜூன், நான்காவது நகுலன், அய்ந்தாவதாக சகாதேவன்.

நாட்டை ஆளும் அரசனின் வாரிசுகள் மட்டுமல்ல; நாளை நாட்டை  ஆளப் போகிறவர்களும் ஆயிற்றே. சும்மா இருந்துவிட முடியுமா..? அய்ந்து புதல்வர்களுக்கும் முறையாக அனைத்துப் பயிற்சிகளையும் அளிக்க வேண்டுமென்று முடிவு செய்தார் பாண்டுமன்னன்

 வெள்ளித் தட்டுகளில் பொன், பொருள், பழ வகைகளோடு புறப்பட்டார். உடன்  சென்றனர் அய்ந்து புதல்வர்களும்.

அரச குலகுரு துரோணாச்சாரியார் கம்பீரமாய் அமர்ந்திருந்தார். எதிரே சென்று வணங்கிய பாண்டு மன்னன்,

“அய்யா.... துரோணாச்சாரியாரே... வணக்கம். எம் புதல்வர்களைத் தங்களிடம் ஒப்படைக்கின்றேன். அவர்கள் அனைத்து வித்தைகளையும் முறைப்படி கற்க ஆவன செய்தருளுங்கள்...' என்றார்.

“என் வசம் ஒப்படைத்து விட்டீர்கள் அல்லவா. இனி, உமக்கு கவலை வேண்டாம். இவர்கள் அனைத்து வித்தைகளையும் திறம்படக் கற்று, உம்மையும் இம் மண்ணையும், மக்களையும் நலமுடன் காத்து, என்றும் மகிழ்ந்திருக்கும்படிச் செய்வார்கள்" என்றார் துரோணாச்சாரியார். 

அய்ந்து புதல்வர்களும் துரோணாச்சாரியாரின் காலில் விழுந்து வணங்கி, ஆசி பெற்றனர்.

ஏகலைவன் வேட்டுவ குலத்தைச் சேர்ந்த சிறுவன். பாறை ஒன்றின்மீது உட்கார்ந்திருந்தான்.

அவனது தந்தை வேட்டைக்குச் செல்வதைப் பார்த்ததும், வேகமாய் கீழிறங்கி ஓடி வந்தான். “தந்தையே.... நானும் உங்களுடன் வேட்டைக்கு வருகிறேன்..!” என்றான் ஏகலைவன். “வேண்டாம்... மகனே. நீ சிறுவன். உனக்குப் போதிய பயிற்சி கிடையாது. காட்டிற்கு வந்தால் பல்வேறு வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும். நீ வீட்டிலேயே இரு...!" என்று தந்தை அவனைச் சமாதானம் செய்தார்.

என்ன சொல்லியும் ஏகலைவன் கேட்கவில்லை. “நான் உங்களுக்கு எந்தத் தொல்லையும் தர மாட்டேன்... தந்தையே. நீங்கள் வேட்டை யாடுவதை அமைதியாக அருகிருந்து பார்ப்பேன்..!” என்று மன்றாடினான் ஏகலைவன்.

வேறுவழியின்றி தந்தையும் ஏகலைவனை அழைத்துக் கொண்டு, காட்டிற்கு புறப்பட்டார்.

காட்டிற்குள் தந்தை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் உற்றுக் கவனித்தபடியே பின்தொடர்ந்தான் ஏகலைவன்.  

விலங்குகள் நடந்துபோன காலடித் தடங்கள் பற்றியும். அவற்றின் குரலொலி பற்றியும் தந்தை சொன்ன அனைத்து தகவல்களையும் கூர்ந்து கேட்டுக் கொண்டான்.  சந்தேகம் உண்டான இடங்களில் சில கேள்விகளையும் கேட்டுத் தெளிவு பெற்றான்.

 மரத்தின் பின்னே மறைந்திருந்து, விலங்குகளின் சத்தம் வருகிற திசை நோக்கி குறி தவறாமல் அம்பு விடும் தந்தையின் வில்வித்தைத் திறனை வியந்து பார்த்தான் ஏகலைவன்.

களைப்பே தெரியாமல் தந்தையோடு சேர்ந்து, காடு முழுக்கச் சுற்றி வந்தான் ஏகலைவன். 

(வளரும்)


No comments:

Post a Comment