'முரசொலி'யின் முத்துக்குவியல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 10, 2022

'முரசொலி'யின் முத்துக்குவியல்!

'முரசொலி' நாளிதழ் - திராவிடர் இயக்கம் - கலைஞரால் பெற்ற அறிவுக் கொடை - திராவிடர் கலங்கரை விளக்கு! கலைஞர் அதனை தமது மூத்த முதற் பிள்ளையாகவே கருதி, ஆயிரமாயிரம் சோதனைகள் வந்த போதிலும் தொடர்ந்து நடத்தி, ஆலமரமாய் வளர்த்தார்.

அதன் விழுமிய வேர்கள்தான் நமது திராவிட இயக்கக் கொள்கைச் செல்வங்கள் 'முரசொலி' மாறன், முரசொலி செல்வம் சகோதரர்களும் ஆவர்.

'முரசொலி'  களஞ்சியத்திலிருந்து நூறு பொறுக்கு மணிகளான தொடர் கட்டுரைகளின் தொகுப்புதான், சில மாதங்களுக்குமுன் வெளி வந்த "முரசொலி - சில நினைவலைகள்' என்ற முரசொலி செல்வம் அவர்கள் எழுதியுள்ள அருமையான நவில் தொறும் நூல்!

லட்சக்கணக்கில் விற்பனையாகும் நாளே டுகள் பல உள்ளன - நாட்டில். அவற்றுக்கு லட்சியம் கஜானா நிரம்புவது, பாலிசி - சர்க்குலேஷன் பாலிசி, தான்.

எதிர்நீச்சல் போடும் நாளேடுகளோ லட் சியங்களுக்காக எந்த விலையையும் கொடுத்து வெற்றி நடை - வீர நடைபோடும் ஏடுகள்.

87 ஆண்டுகள் கடக்கும்  தந்தை பெரியாரின் அருட்கொடை  அறிவுக் கொள்கலன் 'விடுதலை' போன்று அடுத்த தலைமுறைகளின் வாழ்வை மாற்றி அமைக்க நாளும் வலுவூட்டி, பரபரப்பு செய்திகளை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துவது இவ்வேடுகளின் இலக்கு அல்ல.

மாறாக, கொள்கைப்போரில் விழுப் புண்களை விழுமியங்களாக முன்னிறுத்தி வெற்றி பெறுபவை இவை. 'முரசொலி'யின் நீண்ட பயணத்தில் அது சந்தித்த அடக்கு முறைகளும், சோதனைகளும், பிறகு ஆட்சிக் கான சாதனைகளாக "கெமிக்கல்" மாற்றத்தை உருவாக்கியதை, இத்தலைமுறை இளைஞர்கள் தெரிந்து புரிந்து கொண்டால், நெருப்பாற்றை நீந்துவது எப்படி என்பதை அவர்கள் கற்றுக் கொள்ளும் நல்வாய்ப்பு ஏற்படும்.

அவ்வகையில் நண்பர் முரசொலி செல்வம் அவர்கள் தீட்டியுள்ள நூறு கட்டுரைகளும் - வரலாற்றுச் சுவடுகள். திராவிடர் இயக்கம் சோதனைத் தீயினால் புடம் போட்ட தங்கமாக உயர்ந்து நிற்பது எப்படி  - வெற்றி பெற்றது  எப்படி என்பதை புரிய வைக்கும் புதிய பாடநூல்.

504 பக்கங்கள் - 'படித்தேன்' என்று சொல்லி மகிழலாம்.

தனது கருத்துரிமை காக்க, சட்டமன்றத்தின் கூண்டுக்குள் நிற்க வைத்த நேரத்திலும், முரசொலி செல்வம் தலைகுனியவில்லை - நெஞ்சை நிமிர்த்தி நின்றார். சந்தித்தார்!

காரணம் பெரியாரும், அண்ணாவும், கலை ஞரும் கற்றுத் தந்த பாடங்களைப் படித்து பக்குவப்பட்டு ஆசிரியர் பொறுப்பேற்ற காரணத்தால்!

'வானளாவிய அதிகாரம்' பற்றி பேசியவர்கள் வரலாற்றில் காணாமற் போனாலும், முரசொலி முழங்கிய வண்ணம் இன்றும் அதன் அன்றாடக் கடமையை தொடர்கிறது.

அரசியல் சமூகவியல், சுயமரியாதை நம் திராவிடர் இயக்கச் சொத்து - பாரம்பரிய வாரிசுகள் உரிமை கோருவதில் எந்தத் தவறும் இல்லை.

உரியவருக்கு உள்ள தகுதி கொள்கையில், தியாகத்தில் - அது எப்படி? அதற்கான பதில் தான் இந்த அருமையான அரசியல்  நிகழ்வுகள் அகலமும், ஆழமும்  நிறைந்த தொகுப்பு. 'சீதைப் பதிப்பகம்' அருமையாக வெளியிட்டுள்ளது!

இந்நூலில் உள்ள பல செய்திகள் (வாங்கிப் படியுங்கள் - வரலாறு புரியும்)வரலாற்றுச் சுவடுகள்.

'நெருக்கடி காலத்தில்' விடுதலை, முரசொலி போன்ற கொள்கை நாளேடுகள் சென்சார் என்ற தணிக்கை கொடுமை கத்திரிக்கோலில் சிக்கிய போது தமது எதிர்ப்பை எப்படி கலைஞர் லாவகமாகச் செய்தார் தெரியுமா?

இதில்  "விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்; வெண்டைக்காய், உடலுக்கு நல்லது" என்று தலைப்பிட்டு வெளியான "முரசொலி" நாளேடு தந்த 'அறிவுச் சூடு' சென்சாருக்கு எப்படி என்ற சுவையானதை அறிய படிக்க வேண்டும் இந்த நூலை.

முரசொலி செல்வம் அவர்களது அரசியல் விளக்க நூல். 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று' என்ற பாடம் தரும் நூல்.

அவசியம் படித்துப் பயன் பெறுக! ஆசிரியருக்கு பாராட்டுகள்!!

No comments:

Post a Comment