உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தேநீர் குடித்துக் கொண்டிருந்த ராஜூ என்பவரை சாலையில் திரிந்த பசுமாடு தாக்கியது.
இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது இறந்துவிட்டார். அன்றிலிருந்து அவரது தாயார் உணவு சாப்பிடுவதையே நிறுத்திவிட்டு மன நோயாளியாக மாறிவிட்டார்,
இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் வழக்கமாகிவிட்டன. அங்கு பசுவதைத் தடை இருப்பதால், கால்நடைகளின் எண்ணிக்கையில் பெருக அது வழிவகுத்துள்ளது.
அம்மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதியன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நிலையில், இது ஒரு தேர்தல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்துக்கள் பசுவைப் புனிதமாக கருதுகின்றனர். ஆனால், சில காலம் முன்பு வரை, விவசாயிகள் பலர் தங்கள் பழைய மாடுகளை இறைச்சிக் கூடங்களுக்கு எடுத்துச் சென்றனர். "எங்கள் பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்தியவுடனோ, வயல்களை உழுவதற்கு ஏற்றதாக இல்லாமல் போனவுடனோ நாங்கள் அவற்றை விற் றோம். அதுவே பணநெருக்கடியாக உள்ள காலத்தில் எங்களுக்கு உதவும் ஒன்றாக இருந்தது," என விவசாயிகள் கூறுகின்றனர்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, அதன் வலதுசாரி இந்துத்துவாக் கொள் கைக்கு ஆதரவாக, பசுவதையைக் கடுமையாகத் தடுத்துள்ளது. பசு வதை உத்தரப் பிரதேசம் உட்பட 18 மாநிலங்களில் சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது. எருமை இறைச்சியினை பெரும் பான்மையாக ஏற்றுமதி செய்யும் உ.பி.-யில், இது மிகப்பெரிய வணிகமாக இருக்கிறது. இருப்பினும் 2017ஆம் ஆண்டு பாஜக தலைவரான முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு, அங்கு சட்டவிரோதம் என்று கூறி பல இறைச்சிக் கூடங்களை மூடினார்.
பசு வியாபாரிகளில் பலர் முஸ்லிம்கள் அல்லது தலித்துகள் (முன்னர் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்; இந்து ஜாதிய படிநிலையின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் என கருதப்படுபவர்கள்). பெரும்பாலும் பா.ஜ.க அல்லது உள்ளூர் வலதுசாரி குழுக்களுடன் தொடர்புடைய ஆட்களால், இவர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அதனால், மாடுகளை வாங்கவோ, கொண்டு செல்லவோ பயந்து பலர் அத்தொழிலைக் கைவிட்டனர். விவசாயிகள் இப்போது பழைய, பலனளிக்காத மாடுகளைக் கைவிடுகின்றனர்.
"இப்போது மாடுகளை வாங்குபவர்கள் யாரும் இல்லை, அதனால், யாரும் அவற்றை விற்க முடியாது," என்று விவசாயி பூஜன் கூறுகிறார். அவரும், மற்றவர்களும் வயதான கால்நடை களை அருகிலுள்ள காடுகளில் விட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த கால்நடைகள் உ.பி-யில் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் அடிக்கடி சுற்றித் திரிவதைப் பார்க்கலாம். அங்கு அவை பசி கொண்டதாகவும், ஆக்ரோஷமாகவும் மாறுவதாக விவசாயிகளும், உள்ளூர்வாசிகளும் கூறுகின்றனர். அப்படிப் பட்ட ஒரு மாடு ராம் ராஜூவின் வீட்டு முற்றத்தில் நுழைந்துள்ளது. அவரும், அவரது குடும்பத்தினரும் பயந்து கூச்சலிட, அது அவரைத் தாக்கியுள்ளது.
சமீபத்தில், தனது வயலில் இருந்து துரத்த முயன்ற போது, வீதிகளில் உலவும் பசுக் கூட்டத்தால் தாக்கப்பட்டார் பூஜன். "அவற்றில் இரண்டு மாடுகள், என்னைத் தரையில் தள்ள முயன்றன. நான் என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினேன்," என்று அவர் கூறினார். அப்போது அவர் கம்பி வேலியைத் தாண்ட முயற்சி செய்தபோது, கையில் காயம்பட்டதைக் காட்டினார். பூஜன் இந்து மதத்தைச் சேர்ந்தவர்; அவர் பசு ‘புனிதமானது' என்று நம்புகிறார். ஆனால், அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவால் விரக்திய டைவதாகவும் அவர் கூறுகிறார்.
வீதிகளில் உலவும் பசுக்கள் பயிர்களை நாசம் செய்வதாகவும், சாலை விபத்துகளை ஏற்படுத்துவதாகவும், மக்களைக் கொல்லுவ தாகவும் அவரைப் போன்ற விவசாயிகள் கூறுகின்றனர்.
அதே போல் பூனம்துபே என்பவர் கூறும் போது, "சாலையில் திரிந்த பசு ஒன்றால் எனது கணவர் கொல்லப்பட்டார். தற்போது மகன் ஆதரவற்றவனாக இருக்கிறான். எங்களை யார் கவனித்துக் கொள்வார்கள்?" என்று கேட்கிறார்.
36 வயதான பூபேந்திர துபே, 2020ஆம் ஆண்டில், கோவிட் தொற்றுக் காலத்தின் முதல் அலையின்போது வேலையை இழந்து தனது கிராமத்திற்குத் திரும்பியுள்ளார். தனது மகனுக்கு இனிப்புகள் வாங்க உள்ளூர் சந்தைக்கு அவர் சென்றபோது, பசு ஒன்று அவரைத் தாக்கியதில் அவர் இறந்தார். 80 வயதான ராம் காளி, 2019ஆம் ஆண்டு, பசுவால் தாக்கப்பட்டதில் இருந்து கோமா நிலையில் உள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்தில், அவரது ஒரே மகன் கோவிட்-19 தொற்று நோயால் இறந்ததுகூட அவருக்கு இன்னும் தெரியாது என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பெரும்பான்மை விவசாயிகள் வாக்களிக்கும் தொகுதியாக இருக்கும் கிராமப்புற மாநிலமான உ.பி.யில் எதிர்க் கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.
ஆளும் பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் சமீர் சிங் கூறுகையில், இந்த பிரச்சினையை சமாளிக்க அரசு "புதிய உத்திகளை வகுத்து வருகிறது" என்றார். "இந்த விலங்கு இந்து கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், இவற்றை வீதிகளில் சுற்றும் மாடுகள் என்று அழைக்கக்கூடாது. நம்மை சார்ந்த முதியவர்களுக்கு வயதாகும்போது இறந்து போகட்டும் என்று விட்டுவிட மாட்டோம். அப்படி இருக்கும்போது, நாம் மாடுகளை எப்படி சாலையில் இறக்க விட முடியும்?" என்கிறார் அவர்.
ஆக பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் மனிதர்களைவிட மாடுகளே மதிக்கத்தக்கவையாம். இந்தப் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரலாமா? சிந்திப்பீர்!
No comments:
Post a Comment