மயிலாடுதுறை வட்டம், திருவாவடுதுறை யில் உள்ள ஆதினகர்த்தரின் பட்டினப் பிரவேசம் 7.2.2022 அன்று நடக்க இருப்பதாகத் தகவல் அறிந்த நிலையில், மனிதனை மனிதன் தூக்கிச் சுமக்கும் மனித உரிமை மீறலைக் கண்டிக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆ.ச.குணசேகரன் 3.2.2022 அன்று கடிதத்தை முறைப்படி கொடுத்தார்.
காவல்துறை மறுப்பு
அத்தகு போராட்டத்திற்கு அனுமதி மறுத்து மயிலாடுதுறை காவல்துணைக் கண்காணிப்பாளரால் கடிதம் கொடுக்கப் பட்டது. (7.2.2022).
கழகத் துணைத் தலைவரின் கடிதம்
அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) அவர்களுக்கும், அதன் நகல் மயிலாடுதுறை துணைக் கண்காணிப்பாளருக்கும் ‘ஆன்லைன்’ மூலம் கீழ்க்கண்ட கடிதம் அனுப்பப்பட்டது.
பெறுநர்:
காவல்துறை தலைமை இயக்குநர்,
சென்னை
அன்புடையீர்! வணக்கம்.
பொருள்: மனித உரிமைக்கு எதிராக மனிதனை மனிதன் சுமக்கும் - பட்டினப் பிரவேசம் - தடுப்பு மறியல் பற்றி....
பார்வை: காவல் துணைக் கண்காணிப் பாளர் மயிலாடுதுறை உட்கோட்டம் அவர்களின்
ந.க.எண். 09/800-M-V / 2022 நாள்: 7.2.2022
மயிலாடுதுறை உட்கோட்டம் குத்தாலம் காவல் நிலைய சரகம் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் இன்று (7.2.2021) பட்டினப் பிரவேசம் நடத்த உள்ளார்.
(1) பட்டினப் பிரவேசம் என்பது மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமைக்கு எதிரானதாகும்.
(2) இதே ஆதீனகர்த்தர் 40 ஆண்டுகளுக்குமுன் பட்டினப் பிரவேசம் நடத்த முயன்றபோது, திராவிடர் கழகம் மறியல் - போராட்ட அறிவிப்புக் கொடுத்த நிலையில், பட்டினப் பிரவேசத்தை நடத்தாமல் நிறுத்திக் கொண்டார். இந்நிலையில், இப்பொழுது மீண்டும் நடத்துவது எப்படி என்பது முக்கியமானது - கவனிக்கத்தக்கது.
(3) திருப்பனந்தாளில் தருமபுர ஆதீனகர்த்தர் பட்டினப் பிரவேசம் நடத்திட முற்பட்டபோது, திராவிடர் கழக போராட்டத்தால் பட்டினப் பிரவேசத்தை நிறுத்திக் கொண்டார் (12.2.2020).
(4) நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர் பட்டினப் பிரவேசம் தன் மனைவியுடன் நடத்தத் திட்டமிட்ட நிலையில், திராவிடர் கழகம் மறியல் - போராட்டம் அறிவித்த நிலையில், காவல்துறை தலையிட்டு பட்டினப் பிரவேசம் நடத்துவது இல்லை என்று எழுதி வாங்கியது (30.1.2022).
(5) உண்மை நிலைகள் இவ்வாறு இருக்க, திருவாவடுதுறை ஆதீனம் பட்டினப் பிரவேசம் நடத்திட காவல்துறை அனுமதியளிப்பதும், மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமைக்கு எதிராக நடத்தப்படும் திராவிடர் கழகத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதும் அதிர்ச்சிக்கு உரியது.
(6) திருப்பனந்தாள், திருப்புகலூர் பட்டினப் பிரவேசத்துக்கு ஒருவகை அணுகுமுறை, திருவாவடுதுறைக்கு வேறு மாறான அணுகுமுறையைக் காவல் துறை மேற்கொள்வதுபற்றி மறுபரிசீலனை செய்யக் கோருகிறோம்.
(7) மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஷா ஒழிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு.
(8) சங்கராச்சாரியார்களே பல்லக்கைத் துறந்துவிட்டனர்.
(9) தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் பாடுபட்ட திராவிட இயக்க மண்ணிலே- தமிழ் மண்ணிலே, அதுவும் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்து - அரசு அதிகாரிகள்முதல் கடைநிலைப் பணியாளர்கள்வரை உறுதிமொழி எடுக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்து செயல்படுத்திய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் ஓர் ஆட்சியில் - சமூகநீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரான பட்டினப் பிரவேசத்தை அனுமதித்து, மனித உரிமை, சுயமரியாதை அடிப்படையில், போராடுவதற்கு அனுமதி மறுப்பது சாலச் சிறந்த செயல் அல்ல என்பதைத் தெரிவித்து, திருப்பனந்தாள், திருப்புகலூரில் பட்டினப் பிரவேசத்தை நிறுத்த ஆவன செய்ததுபோல,
திராவிடர் கழகம் மற்ற கட்சிகளும், அமைப்புகளும் இணைந்து திருவாவடு துறையில் இன்று (7.2.2022) நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு இடம் கொடுக்காமல் ஆவன செய்யக் கோருகிறோம்.
தங்கள்
(கலி.பூங்குன்றன்)
துணைத் தலைவர்
நகல்: காவல் துணைக் கண்காணிப்பாளர்,
மயிலாடுதுறை
காவல்துறை அதிகாரி சொன்னது என்ன?
7.2.2022 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் மயிலாடுதுறை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடமும், கழகத் துணைத் தலைவரிடமும் கைப்பேசி வழியாக, ‘பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது - அரசு தரப்பில் எங்களுக்குத் தாக்கீது வந்துள்ளது’ என்றும் கூறினார்.
காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் கழகத் துணைத் தலைவரிடம்
கூறியது என்ன?
இரவு 7.30 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கைப்பேசி மூலம், திராவிடர் கழகத் துணைத் தலைவரிடம் ‘பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதியில்லை; பட்டினப் பிரவேசம் நடக்காது; உங்கள் கழகத் தோழர்களைக் கலைந்து செல்லச் சொல்லுங்கள்; என் பேச்சை நம்புங்கள்’ என்று உறுதிபடக் கூறினார்.
துணைத் தலைவர் கூறியது என்ன?
‘எங்கள் தோழர்களால் பிரச்சினை ஏற்படாது; அதே நேரத்தில் பட்டினப் பிரவேசம் தொடர்பாக அதிகாரிகள் அதிகாரப் பூர்வமாக கழகப் பொறுப்பாளர்களிடம் சொல்லும் வரை கழகத் தோழர்கள் அங்கு இருப்பார்கள் - அவர்களால் எந்த அசம்பாவிதமும் நடக்காது; நான் உறுதி கூறுகிறேன்’ என்று கழகத் துணைத் தலைவர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் கூறினார்.
திராவிடர் கழகத் தோழர்கள் கைது
அதற்கு மேல் இரவு 8.45 மணிக்கு திராவிடர் கழகத் தோழர்களை கைது செய்து, குற்றாலத்தில் ஒரு மண்டபத்தில் வைத்தனர்.
காவல்துறையின் நயவஞ்சக நாடகம்
பிறகு நடந்ததுதான் காவல்துறையின் நயவஞ்சக நாடகம் என்பது புரிந்தது.
இரவு 9.45 மணிக்கு காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் மற்றும் நூற்றுக்கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்போடு பட்டினப் பிரவேசம் “சாங்கோ பாங்கமாக” நடத்தப்பட்டுள்ளது.
இரவு 1 மணிக்கு கழகத் தோழர்கள் விடுதலை
இரவு ஒரு மணிக்கு கைது செய்யப்பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தொடர் நிகழ்ச்சிகள்
காட்டுவது என்ன?
இந்தத்தொடர் நிகழ்ச்சிகள் காட்டுவது என்ன? நிரூபிப்பது என்ன?
1. பட்டினப்பிரவேசத்துக்கு அனுமதியில்லை என்று காவல்துறை அதிகாரி சொன்னது என்ன? அது பொய்யான தகவலா? பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதியில்லை என்று அரசுத் தரப்பில் தாக்கீது வந்தது உண்மை என்றால் பட்டினப் பிரவேசம் எப்படி நடந்தது? அப்படியானால் அரசின் உத்தரவை மீறி, பட்டினப் பிரவேசம் நடத்திட காவல்துறை அதிகாரிகள் அனுமதியளித்தனரா?
காவல்துறைக்கும், ஆதீனகர்த்தருக்கு மிடையே நடந்தது என்ன? எது உண்மை என்று தெரிவிக்கப்பட்டாக வேண்டும்.
காவல்துறையும் -
பொதுமக்கள் மரியாதையும்
இதுதான் காவல்துறையின் அணுகுமுறை என்றால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எந்த அளவு மரியாதை ஏற்படும்? இது ஒரு நயவஞ்சக நாடகம் அல்லவா! - சினிமாவில் வில்லர்கள் நடந்து கொள்வது போல் இல்லையா இது?
திராவிடர் கழகத்தை ஏமாற்றிடவில்லை, ஏமாற்றியதாக காவல்துறைதான் நாண வேண்டும்.
இது ஏதோ திராவிடர் கழகத்துக்கு மட்டும் சம்பந்தப்பட்டட பிரச்சினை அல்ல. கை ரிக்ஷா ஒழிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் மனிதனை மனிதர்கள் சுமக்கும் அநாகரிகம் - அவமானம் - மனித உரிமை மீறலை அனுமதிக்கப் போகிறோமா?
தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் ஒரு நூற்றாண்டு பாடுபட்டது இதற்காகவா?
மனித உரிமைக்கும், சுயமரியாதைக்கும், சமத்துவத்துக்கும், கேரள மாநிலம் வைக்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்ற வைக்கம் வீரர் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மனிதனை மனிதன் சுமக்கும் மனித அவமரியாதை நடந்திருப்பது அவமானகரமானது.
அரசு தாக்கீதை மீறி காவல்துறை தன்னிச்சையாக செயல்பட்டதா? இதுகுறித்து தமிழ்நாடு அரசு தரும் விளக்கத்தைப் பொறுத்து, திராவிடர் கழகத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.
அரசியலைக் கடந்து கொள்கைக்காக தன் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடும் - பாடுபடும் திராவிடர் கழகம், கருப்புச்சட்டைத் தொண்டர்கள் என்பதையும் அறுதியிட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.
- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.2.2022
No comments:
Post a Comment