மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சியே மக்களாட்சி ஒன்றிய அரசு மக்களுக்காக செய்ய வேண்டிய சேவைகளை வசதியாக மறந்து விட்டது மாநிலங்களவையில் திருச்சி சிவா உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 3, 2022

மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சியே மக்களாட்சி ஒன்றிய அரசு மக்களுக்காக செய்ய வேண்டிய சேவைகளை வசதியாக மறந்து விட்டது மாநிலங்களவையில் திருச்சி சிவா உரை


புதுடில்லி, பிப்.3 மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சியே மக்களாட்சி ஒன்றிய அரசு மக்களுக்காக செய்ய வேண்டிய சேவைகளை வசதியாக மறந்து விட்டது என மாநிலங்களவையில் திருச்சி சிவா உரை நிகழ்த்தினார்.

நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா ஆற்றிய உரை வருமாறு:

துணைத்தலைவர் அவர்களே, நான் குடியரசுத் தலைவர் உரை குறித்து பேசவந்துள்ளேன். குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி கூறும் விதமாக எனக்கு முன்பு பேசிய கீதா மற்றும் மாலிக் இருவருமே தற்போது அவையில் இல்லை. குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி கூறும் விதமாக நான் பேசுகிறேன்

 அவரின் உரையில் பாராட்டும் விதமாக நான் தேடிப்பார்த்தும் ஒன்றுமே காணப்படவில்லை. ஆனால் அதில் இரண்டு கருத்துக்களை கவனித்தேன். ஒன்று அவர் திருக்குறளை மேற்கோள் காட்டினார். மற்றொன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பற்றியது.இந்த இரண்டைத்தவிர வேறு எதுவும் பாராட்டுதலுக்கு உரியவை என்று நான் கருதவில்லை. 

குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது அதிகபட்ச கற்பனைகளை கலந்து சொல்லுவார்கள். அதுபோல் தான் இன்று அவர்கள் அளவுகடந்த கற்பனை கதைகளைச் சொல்கிறார்கள். அவை நடைமுறைக்கு முற்றிலும் ஒத்துவராது. நான் குடியரசுத்தலைவர் பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிக்கூறியதை குறிப்பிட விரும்புகிறேன். 

 எனது சிந்தனை மக்களின், விடுதலை சமத்துவம் மற்றும் பாலினச்சமன்பாடு. மக்களாட்சி என்பது அரசை நிறுவது மட்டும் அல்ல, இன்றியமையாத சேவைகளைச் செய்வதும் கூட, ஆனால் இது வெறும் எழுத்தில் மட்டும் தான் உள்ளது. நடைமுறையில் இவர்கள் செயல்படுத்தவில்லை. நான் புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த முழக்கம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன், 

 மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சியே மக்களாட்சி, ஆம் இந்த அரசு மக்களால் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் மக்களுக்காக செய்யவேண்டிய  சேவையை வசதியாக  மறந்துவிட்டனர். 

அதே போல் அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மறந்துவிட்டனர். இந்த அரசின் கொள்கைகள் அனைத்துமே மக்களின் நலனுக்கு எதிரானவைகள். அய்யா எங்கள் கட்சியின் நிறுவனர் அண்ணா முதலமைச்சர் ஆன பிறகு டில்லியில் அவர் கொடுத்த முதல் பேட்டியில் ஒரு ஊடகவியலாளர் அவரிடம் ”உங்களின் பொருளாதாரக் கொள்கை என்ன” என்று கேட்டார்.

 அதற்கு அண்ணா கூறினார், செல்வந்தர்களிடமிருந்து பெற்று வறியவர்களுக்கு பங்கிடுவது என்றார். அது மிகவும் புகழ்பெற்ற பேட்டியாகும் அது நாடு முழுவதும் பிரபலமானது. 

ஆனால் இன்று இந்த அரசு ஏழைகளிடமிருந்து பிடுங்கி செல்வந்தர்களிடம் கொடுக்கிறது.  இவர்கள் ஒருமாத ஜி.எஸ்.டி, இமாலய சாதனை வசூல் என்கிறார்கள். இந்தப் பணம் யார் கொடுத்தது. ஏழைகள் மற்றும் நடுத்தரமக்கள் அவர்கள் எதைவாங்கினாலும் எங்கு இருந்தாலும் அவர்களிடமிருந்து வசூலித்த பணம் தான் அந்த வரி. ஆனால் நடந்தது என்ன? இந்த அரசு முக்கியமான பிரச்சினைகளைக் குறித்துப் பேசவே மறுக்கிறது. 

சிறுகுறு தொழில்கள் அழிந்து வருகின்றன. கோவிட் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு விலைவாசி உயர்வு, எப்போதும் இல்லாத அளவு  பெட்ரோலியப் பொருட்கள் விலை 69 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்த அரசு 4.91 லட்சம் கோடிகள் லாபம் ஈட்டியுள்ளது. 2014 ஆம் ஆண்டிலிருந்து 25 லட்சம் கோடிகளை பெட்ரோலியப் பொருட்கள் மூலம் லாபம் ஈட்டியுள்ளது. இது குறித்து நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த பிரச்சினைகள் மட்டும் அல்ல சிறுபான்மையினர் உரிமைகள் பறிக்கப்படுகிறது மற்றும் அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்படுகிறது. இது மிகவும் வேதனைக்குரியது 

நாட்டின் பொருளாதாரம்  அபகரிக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறது 

இந்தியா ஒரு விவசாய நாடு ஆனால் இன்று இது முதலாளிகளின் நாடாக மாறிவிட்டது.  நமது விவசாயிகளின் நிலை என்ன? அவர்கள் கடுமையான மழை வெயில் மற்றும் நடுங்கும் குளிரில் இருந்து போராட்டம் நடத்தினார்கள் ஒரு ஆண்டாக நடத்தினார்கள் காரணம் நீங்கள் கொண்டுவந்த விவசாயிகளின் நலனுக்கு எதிரான சட்டம். ஆனால் நீங்கள் அய்ந்து மாநிலத்தேர்தல்களை கருத்தில் கொண்டு அந்த சட்டத்தை திரும்பப் பெற்றீர்கள். 

 இது விவசாயிகளோடு கலந்து ஆலோசனை நடத்தி எடுக்கப்பட்ட முடிவு என்பதை யாருமே ஏற்க மாட்டார்கள்.  அங்கே 700 உயிர்கள் பலியானது. இந்த அரசு குறைந்தபட்சம் அவர்களுக்கான மரியாதையை செலுத்தியிருக்கலாம் குறைந்த பட்சம் அனுதாபமாவது தெரிவித்திருக்கலாம். 

மீண்டும் பாபாசாகேப் அம்பேத்கரின் சொற்களை குறிப்பிடுகிறேன். 

 நாம் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளை மதிக்கிறோம். இந்த அரசு ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களின் உரிமை மற்றும் உயிர்களை மதிக்கவேண்டும். ஆனால் 700 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளது .ஆனால் இந்த அரசு எந்த ஒரு விவாதமும் இன்றி விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளது. 

 இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்களா?  சம்யுக்த கிசான் மோர்ச்சா விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு அமைப்பு அவர்கள் கொடுத்த ஊடகவியலாளர் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த அரசு விவசாயிகளை மீண்டும் ஒருமுறை கைவிட்டுவிட்டது. 

குடியரசுத் தலைவரின் உரை மீண்டும் ஏமாற்றம் தரும் வெற்று வாக்குறுதிகளால் நிரம்பி உள்ளது, சிறுகுறு தொழில்கள் மற்றும் விவசாயிகளின் குறைந்த பட்ச வருவாய் குறித்து எதுவுமே இடம்பெறவில்லை. ஆனால் இந்த அரசு கூறுகிறது. 

விவசாயிகளின் வருவாயை 200 மடங்கு அதிகரிக்கிறோம் என்று கூறுகிறது. ஆனால் இப்போது  அது குறிப்பிடப்படவில்லை. முன்பு கூறியது. 2022ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை 200 மடங்காக மாற்றுவோம். என்றது, ஆனால் இன்று நாம் 2022-இல் நிற்கிறோம். ஆனால் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கவில்லை. ஆனால் அவர்கள் வாங்கும் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது, டி ஏ பி மற்றும் யூரியா 1200 ரூபாயாக இருந்தது இன்று 2000 ரூபாயாக விலை கூடிவிட்டது.  700 ரூபாயாக இருந்தது 1500 ரூபாயாக மாறி விட்டது, ஆனால் விவசாயிகளின் வருவாய் உயரவில்லை. உண்மையில் 80 விழுக்காடு மக்கள் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்கள். பொருளாதாரக்குறிப்புகளின் படி இந்தியா பொதுத்துறை மற்றும் விவசாயத்துறையின் மூலம் மட்டுமே பொருளாதார வளர்ச்சி பெறும் என்கிறது. 

கோவிட் பரவல் காலத்தில் கூட மக்களுக்கு உணவுத்தேவையை விவசாயிகள் தான் நிறைவேற்றினார்கள். அதே நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்களை விற்று வருகிறீர்கள் நீங்கள்.  5ஜி வசதியை தனியாரிடம் கொடுக்கிறீர்கள். இதுவரை 4ஜி வசதிகளை பி.எஸ்.என்.எல். மற்றும் எம்டிஎன் எல்-லுக்கு கொடுக்கவில்லை 

 இது அமைதியாக அரசுநிறுவனத்தை அழிக்கும் வேலை ஆகும். இதன் மூலம் எல்லோரும் பிஎஸ் என்.எல்.எம்.டிஎன். எல்-லிடமிருந்து தனியாருக்கு செல்கின்றனர். 

 தற்போது எல்லோருமே டிஜிட்டல் உலகில் வாழ்கின்றனர். அவர்களுக்கு 5ஜி வசதி தேவைப்படுகிறது. ஆனால் அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்றுவரை 4ஜி வசதியைக் கொடுக்கவில்லை.  அவர்களிடம் போதுமான அளவு உள்கட்டமைப்பு உள்ளது ஆனால் அவர்களின் உள்கட்டமைப்பு இதர தனியார் நிறுவன சேவைக்காக வாரிவழங்கப்படுகிறது, இப்போது நீங்கள் 5ஜி வசதியையும் அவர்களிடமே தருகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? 

 நீங்கள் அனைத்தையுமே அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றீர்கள். எல்.அய்.சி.யின்  சொத்துமதிப்பு ரூ.35 லட்சம் கோடி - அதன் லாபங்களை பாலிசிதாரர்களுக்கு பங்கிட்டுக்கொடுக்கிறது, அரசுக்கு அதன் பங்கைக் கொடுக்கிறது.  ஆனால் அதனைக் கொலை செய்யப்பார்க்கிறீர்கள், ஆனால் நீங்கள் பொதுமக்களுக்கும் அரசுக்கும் நன்மை செய்யும் எல்.அய்.சி நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்கிறீர்கள் 

 என்ன நடந்துகொண்டு இருக்கிறது இங்கே? இந்தியா மிகவும் இளமையான நாடு. மிகப்பெரிய மக்களாட்சி நாடு - 64 விழுக்காடு மக்கள் உழைக்கும் வர்க்கத்தினர். அவர்களுக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் 

நீங்கள் ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தை கொண்டுவரும் போது கூறினீர்கள் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றீர்கள் ஆனால் இன்று 2.5 கோடி பேருக்கும் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக புள்ளிவிபரம் கூறுகிறது.    . 

 நீங்களே கூறுகிறீர்கள் 65 லட்சம் வேலைவாய்ப்புகளை 5 ஆண்டுகளில் உருவாக்குவோம் என்றீர்கள். அதாவது 12 லட்சம் வேலை வாய்ப்பு ஓராண்டில் தருவதாக கூறுகிறீர்கள் 

 நிதி அமைச்சர் பெருமையுடன் கூறுகிறார் 25 ஆண்டுகளுக்கான புளுபிரிண்ட் என்று கூறுகிறார். பிரதமர் வந்து கூறுகிறார் இது நூற்றாண்டுகால திட்டம் என்கிறார். 

 யார் இதுபற்றி கேட்கிறார்கள்? யார் இது பற்றி பேசுகிறார்கள்? யாருக்காக பேசுகிறார்கள் ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர். செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர். அந்தப் பணக்காரர்கள் தற்போதும் பெரும் முதலாளிகள் ஆகிவிட்டனர். இதைத்தானே இந்த நாடு தற்போது பார்க்கிறது. 

 பொருளாதார புள்ளி விபர அமைச்சரகம் தெளிவாக கூறுகிறது,   சமீபத்தில்  தற்காலிக ஆண்டு வளர்ச்சி விகிதம் 13.56 விழுக்காடு. டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது இது 1.5 விழுக்காடாக இருந்தது இது அவர்கள் கொடுத்த புள்ளிவிபரம்.  இதுதான் வளர்ச்சியின் உண்மையான நிலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.மக்களிட்ம வருவாய் இல்லை. நீங்கள் கையிலெடுக்கும் பல்வேறு செயல்பாடுகளால் மக்கள் சொல்லொண்ணாதுயரம் அடைகின்றனர். வேலையிழப்பு போன்றவைகள்,  நீங்கள் எப்படி வேலையில்லாத மக்களை சந்திக்கப் போகிறீர்கள். நீங்கள் இந்த விவகாரம் குறித்து பேசுவதே இல்லை. ஆனால் நீங்கள் பேசுவது எல்லாம் தேவையில்லாதவைகள்.  உங்களின் செயல்பாடுகள் கார்ப்பரேட்டுகளுக்கானது. 

 நடுத்தரவர்கத்தினருக்கு என்ன செய்கிறீர்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் என்ன ஆனது. ஒன்றுமில்லாமல் அழிந்து வருகின்றது. அவர்களின் தொழில்வளங்கள் அனைத்துமே பணமதிப்பிழப்பால நொறுங்கிவிட்டது இதை நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள். அந்தப் பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் ஜி.எஸ்.டி கொண்டுவந்துவிட்டீர்கள். ஜி.எஸ்.டி வரி வசூலில் கடுமைகாட்டினீர்கள். மக்களிடம் வரிவாங்குவதில் கொடுமைப்படுத்தினீர்கள். ஆனால் மாநில அரசுகளுக்கு கொடுக்கவேண்டிய பங்கை மறுக்கின்றீர்கள். 

 பல மாநிலங்களுக்கு நீங்கள் பங்கை கொடுக்கவில்லை. எனது மாநிலம் வரிப்பங்கை வேண்டி கேட்டு நிற்கிறது.  இங்கு உள்ள பல மாநில பிரதிநிதிகளுக்குத் இந்த அரசு மாநிலப்பங்கீட்டைமுழுமையாக கொடுக்கவில்லை என்று தெரியும்.  அப்படி என்றால் வரிவசூல் செய்யும் பணத்தை எல்லாம் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் இந்த பணத்தை எல்லாம் வராக்கடனில் சேர்த்து கார்ப்பரேட்டுகளை காப்பாற்றப் பயன்படுத்துகிறீர்கள்

 சாதாரணமாக ஏழை மாணவர் கல்விக்கட்டணத்தை கட்ட இயலாமல் நிற்கிறார். அவரை கொடுமைப்படுத்துகிறீர்கள். அவரது சேமிப்பு முடக்கப்படுகிறது. அவருக்கு தொழில் செய்யவோ அல்லது இதர முன்னேற்றத்திற்கான எந்த உதவியுமே எதுவும்செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. ஏழை மாணவர் கடன் வாங்கி அதை கட்ட இயலாத நிலையில் அவரைக் கொடுமைப்படுத்துகிறீர்கள்.  ஆனால் கார்ப்பரேட்டுகள் ஆயிரம் கோடிகளை கடன் வாங்குகின்றனர். அவர்களின் கடனை வராக்கடனாக தள்ளுபடி செய்கிறீர்கள்.  என்ன இந்த அரசின் பாலிசி என்று தெரியவில்லை.  இதனால் தான் நான் சொல்கிறேன் ஏழைகளிடமிருந்து பிடுங்கி செல்வந்தர்களுக்கு கொடுக்கிறீர்கள். இது பொதுவுடமை நாடு அல்ல, நீங்கள் பல வார்த்தைகளை அள்ளிவீசினீர்கள். எதிர்க்கட்சி தலைவர் கூறியது போல் உங்களுக்கு பொதுவுடைமை, சமத்துவம், கூட்டாட்சி போன்ற சொற்கள் எரிச்சலூட்டுகிறது. இது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். 

 நாங்கள் இவர்களை குற்றம் சொல்லவில்லை. பொய் குற்றச்சாட்டுகள் அல்ல இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கூறுகிறோம். இந்த அரசு தேர்தெடுக்கப்பட்ட பிறகு இதன் வேலை நாட்டை முன்னோக்கிகொண்டு செல்லவேண்டியது, ஆனால் இவர்களோ நாட்டை மீண்டும் பின்னோக்கி கொண்டு செல்கின்றனர். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, பெரும்பாலானமக்கள் ஏழைகள் மற்றும் நடுத்தரமக்கள். இவர்களை அரசு காப்பாற்ற மறுக்கிறது. இவர்களுக்கு என்ன எதிர்காலம் நான் இரண்டு மூன்று முக்கியமானவைகளை இங்கே மேற்கோள் காட்ட உள்ளேன். 

(தொடரும்)


No comments:

Post a Comment