நெல் கொள்முதல் நிலையங்களில் தவறு செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 10, 2022

நெல் கொள்முதல் நிலையங்களில் தவறு செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை

அமைச்சர் அர.சக்கரபாணி எச்சரிக்கை

சென்னை, பிப்.10 நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல் கொள்முதலுக்காக சிப்பத் துக்கு 30 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பத்திரிகையில் வந்த கட்டுரையை முதல்-அமைச்சர் படித்துவிட்டு என்னை அலைபேசியில் அழைத்தார். இதுபோன்று தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்த கட்டுரை ஆசிரியரிடமும் அவர் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

தவறு எங்கு நடந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் முதல்-அமைச்சர், நெல் கொள்முதலில் எவ்விதத் தவறும் நடைபெறக்கூடாது என்பதற்காக நெல் கொள்முதல் நிலை யங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்; நெல் கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு கொடுக்கப்பட்டு வந்த ரூ.3.25 என்ற ஊதியத்தை ரூ.10 ஆக உயர்த்தியதோடு பருவகால பட்டியல் எழுத்தர்களுக்குத் தினப் படியாக ரூ.120 மற்றும் பருவகால உதவுபவர்களுக்கும் காவலர்களுக்கும் தினப்படியாக ரூ.100 கூடுதலாக வழங்க ஆணையிட்டார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்று நெல் விவசாயிகளிடம் இருந்து மூட்டைக்கு 40 ரூபாய் பெற்றதை நிறுத்துவதோடு, நம் ஆட்சியில் விவசாயிகளிடம் இருந்து ஒரு பைசா கூட பெறக்கூடாது என்ற நோக்கத்திற்காகத்தான் ஆண்டொன் றுக்கு அரசுக்கு ரூ.83 கோடி கூடுதல் செலவானாலும் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது என்று கூறி என்னை அழைத்து ஊதியத்தைக் கணி சமாக உயர்த்திக் கொடுத்துள்ளதால் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி இனி நெல் கொள் முதல் நிலையங்களில் தவறு நடக் காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அவ்வாறே செய்ததோடு ஆய்வுக் கூட்டங்கள் வாயிலாகவும் அனைவ ருக்கும் இது தெரியப்படுத்தப்பட்டது. நெல் கொள்முதல் தொடர்பாக புகார் ஏதுமிருந்தால் கட்டணமில்லாத் தொலைபேசி (18005993540) எண் ணிற்குத் தெரிவிக்கவும் கேட்டுக்கொள் ளப்பட்டது.

ஊக்கத் தொகை உயர்வு

கடந்த 10 ஆண்டு காலமாக நடந்த ஆட்சியில் மாநில அரசு நெல் கொள் முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கவில்லை. ஆனால், விவசாயிகளின் உண்மையான நண்ப ரான முதல்-அமைச்சர், சன்னரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை 30 ரூபாய் உயர்த்தி ரூ.100 ஆகவும், பொது ரகத்திற்கு 25 ரூபாய் உயர்த்தி ரூ.75 ஆகவும் 1.10.2021 முதல் விவசாயிகளுக்கு வழங்க ஆணையிட்டார்.

கடந்த ஆட்சியில் 7.1.2020 அன்று நெல் கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கான ஊதியம் மூட்டை ஒன்றுக்கு 55 பைசா மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 31.12.2021 அன்று முதல்-அமைச்சரால் நெல் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழி லாளர்களுக்கான ஊதியம் மூட்டை ஒன்றுக்கு ரூ.6.75 உயர்த்தி வழங்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் அர. சக்கர பாணி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment