கமண்டலுக்கும் - மண்டலுக்கும் ஒத்துப் போகாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 3, 2022

கமண்டலுக்கும் - மண்டலுக்கும் ஒத்துப் போகாது!

 'திராவிட மாடல்' என்பது தமிழ்நாட்டில் தொடங்கி,

இந்தியா முழுவதும் வரக்கூடியதைத்தான் மண்டல் ஏற்படுத்துகிறது!

'மதவெறி கண்டன நாள்! மண்டலும் - கமண்டலும்'

காணொலி சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை

சென்னை, பிப்.3   கமண்டலுக்கும் - மண்டலுக்கும் ஒத்துப் போகாது; திராவிட மாடல் என்பது தமிழ் நாட்டில் தொடங்கி, இந்தியா முழுவதும் வரக்கூடிய தைத்தான் மண்டல் ஏற்படுத்துகிறது என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மண்டலும் - கமண்டலும்

காணொலி சிறப்புக் கூட்டம்

கடந்த 30.1.2022 அன்று மாலை ''மதவெறி கண்டன நாள் - மண்டலும் - கமண்டலும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி சிறப்புக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

பலமான ஒரு கூட்டணியை அமைக்கவேண்டும்

நாளைக்குக்கூட ஒரு பார்முலா எப்படி வரவேண் டும் என்றால், எந்தெந்த மாநிலத்தில், யார் யாருக்கு, எந்தக் கட்சிக்கு, பா...வை தோற்கடிக்கக் கூடிய சக்தி இருக்கிறதோ, அவர்களோடு கூட்டுச் சேர்ந்து, பலமான ஒரு கூட்டணியை அமைக்கவேண்டும் என்று மற்றவர்கள் முன்வந்தால், எளிதாக நடக்கக் கூடிய வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன.

அதற்கு எடுத்துக்காட்டு, உத்தரப்பிரதேசத்திலே இப்பொழுது உருவாகி வருகிறது என்பதுதான் மிக முக்கியமானது.

மண்டல் மீண்டும் வந்திருக்கிறார்.

ஒருமுறை அல்ல, ஒன்பது முறை வேண்டுமானாலும் பதவியை இழக்கத் தயார்

ஒருமுறை வி.பி.சிங் அவர்கள் சொன்னார்,

''நான் மண்டலுக்காக பிரதமர் பதவியை இழந் திருக்கிறேன். ஒருமுறை அல்ல, ஒன்பது முறை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கிறேன்.

இன்றைக்கு நான் பிரதமராக இல்லாமல் இருக்க லாம். ஆனால், மண்டல் காற்று எப்பொழுதும் வீசிக் கொண்டே இருக்கும்; மண்டல் காற்றை இவர்களால் தடுக்க முடியாது'' என்று சொன்னார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் வி.பி.சிங்.

இன்றைக்கு அது வேகமாகக் கிளம்பி, எந்த அள விற்கு வந்திருக்கிறது என்று சொன்னால் நண்பர்களே,

அகிலேஷ் யாதவ் தலைமையில் கூட்டணி 

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையும் ஒருமுகப் படுத்தி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தையும், எஸ்.சி., எஸ்.டி., .பி.சி., மைனாரிட்டி - நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்கிறோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கிட்டத்தட்ட இன்றைக்கு அகிலேஷ் யாதவ் தலை மையிலே அங்கே கூட்டணி  உருவாகியிருக்கின்றது.

அந்த வாய்ப்புகள் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்கிறது.

அதற்கு முன்பாக, என்னென்ன குற்றங்களைச் சொன்னார்கள்?

அது யாதவர்கள் கட்சி என்றார்கள். அதற்கு இடமில்லாமல், மற்றவர்களை, எல்லோரையும் இணைத்து, யார் யாருக்கு எவ்வளவு வாய்ப்புகளைக் கொடுக்க முடியுமோ, அவ்வளவு வாய்ப்புகளைக் கொடுத்தார்கள்.

அதற்கு முன்பாக அவர்கள் எப்படி பிரச்சாரம் செய்தார்கள்?

M-Y - முஸ்லிம் - யாதவா என்றார்கள்.

ஆனால், இப்பொழுது அந்தக் குறைபாடுகள் எல்லாம் இல்லாத அளவிற்கு, தெளிவாக செயல்பட்டு, ஒரு பலமான போட்டி நிலவுகிறது. பலமான எதிர்க்கட்சிகள் இணைந்து பலமான ஆளுங்கட்சியாக ஆகும் அளவிற்குப் பெரிய கிலியை உருவாக்கக் கூடிய நிலைக்கு இன்றைக்கு அங்கே நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பா... என்கிற மூழ்குகின்ற கப்பலிலிருந்து வெளியேறுகிறார்கள்!

ஏற்கெனவே பலர், பா... மூழ்குகின்ற கப்பல் என்பதற்காக - அமைச்சர்களாக இருந்த வர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளியே  வந்துவிட்டார்கள். அவர்கள் எல்லாம் மக்கள் தலைவர்களாக அந்தந்தப் பகுதியில் இருந்தார்கள். அவர்களையெல்லாம் நம்பித் தான் யோகி ஆதித்யநாத் இருந்தார். இப்பொழுது என்ன செய்வது என்று நினைத்து அவர் திணறு கிறார்.

அதோடு மிகப்பெரிய அளவிற்கு நம்முடைய முதலமைச்சர்  மு..ஸ்டாலின் அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள்.

'திராவிட மாடல்'

சமூகநீதியும், பொருளாதார நீதியும் கலந்ததுதான் 'திராவிட மாடல்' என்று.

அந்த திராவிட மாடல்தான்  உத்தரப்பிரதேசத்திற்கு உகந்தது; அங்கே பெரியார் வேண்டும் என்று டில்லி யில் இருக்கின்ற செய்தியாளர்கள் எழுதக்கூடிய அள விற்கு, இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு மாறுதல். அந்த உணர்வுகள் வந்துவிட்டன.

நாங்கள் ஏதோ ஆசைக்காக, ஒருவருக்காக சொல்கிறோம் என்று நினைக்கவேண்டாம்.

கடந்த 27 ஆம் தேதி 'இந்து' பத்திரிகை யில் வெளிவந்திருக்கின்ற மிக முக்கியமான கட்டுரை.

The Substance of the U.P. Election

உத்தரப்பிரதேசத் தேர்தலுடைய மிக முக்கியமான ஓர் அடிப்படை.

Smoke signals from Uttar Pradesh could pose a challenge to Hindutva politics beyond the State.

ஹிந்துத்துவாவினுடைய கொள்கைக்கு மிகப் பெரிய அளவிற்கு அறைகூவல் வந்திருக்கிறது.

கமண்டலுக்கு அறைகூவல் வந்திருக்கிறது.

இதை நாம் சொல்லவில்லை. நம்முடைய ஆசை யும் அல்ல. ஆதாரத்தோடு பத்திரிகையாளர் Seema Chishti, is a  journalist writer based in New Delhi    என்பவர் எழுதியிருக்கிறார்.

அந்தக் கட்டுரையில் வந்த ஒரே ஒரு செய்தியை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Historically, the land economy of Uttar Pradesh was centred on the exploitative and unreformed zamindari system. The thick overlap between land ownership, economic strength and social hierarchy made social reform next to impossible, unlike Kerala, Tamil Nadu and Maharashtra, which saw vibrant social movements led by the likes of Sree Narayana Guru, Periyar and Jyotiba Phule, respectively, leavening the soil for a more egalitarian order. What Tamil Nadu Chief Minister M.K. Stalin has recently termed the ‘Dravidian model’, where social reform was successfully welded into economic uplift, or what Kerala saw in terms of multiple initiatives such as the People’s Plan, focussing on a bottom-up or capabilities approach, never made it to Uttar Pradesh.

அவர்களுடைய பொருளாதார அடிப்படை வரலாற்று ரீதியாக கொடுக்கப்பட்டது, ஜமீந்தாரி, நிலவுடைமை ஆதிக்கக்காரர்கள் என்னும் நிலை மத்தியில் வந்தது.

மராட்டியத்தில் ஜோதிபாபூலேவும், தமிழ்நாட்டில் பெரியாரும், கேரளத்திலே நாராயண குருவும் செய்த தைப்போல, அங்கே ஒரு சீர்திருத்தம் இதுவரையில் பரவாமல் இருந்த சூழலில்தான், அங்கே இப்போது இப்படிப்பட்ட  ஒரு சூழல், அடிப்படை வந்திருக்கிறது.

ஆனால், அதற்கென்ன விடியல் ஏற்படப் போகிறது?

.பி.யில் 'திராவிட மாடல்' போன்ற நிலை ஏற்படவேண்டாமா?

உத்தரப்பிரதேசத்தில் இதுவரை  'திராவிட மாடல்' போன்ற நிலை ஏற்படவேண்டாமா? இங்கே முதல மைச்சர் ஸ்டாலின் அவர்கள் சொன்னதைப்போல, பொருளாதாரத்தையும், சமூகநீதியையும் இணைத்த ஒரு கொள்கை. அதுதான் திராவிட மாடல். அந்தக் கொள்கைகள்தான் அங்கே வரவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. அந்த வாய்ப்பை  ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உண ருகிறார்கள்; சிறுபான்மை சமுதாய மக்கள் உணரு கிறார்கள்.

உணர்ச்சி அலை  எழும்பொழுது,

கமண்டல் திணறுகிறது

எனவே, அங்கு வெளியேறியவர்கள் எல்லாம் எதைப்பற்றி பேசுகிறார்கள்?

எங்களுக்கு  சமூக அநீதி இழைக்கப்பட்டது. நாங்கள் பா...வில்  இருந்தோமே தவிர, எங்களை அலட்சியப்படுத்தினார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் சேர்ந்து நினைக்கக் கூடிய அளவிற்கு உணர்ச்சி அலை  எழும் பொழுது, கமண்டல் திணறுகிறது.

வெறும் ராமன் கோவிலை வைத்துக் கொண்டே நாம்  ஆட்சியைப்  பிடித்துவிடலாம் என்கிற எண்ணம், இப்போது சிதறு தேங்காய்ப் போன்று ஆகிக் கொண்டிருக்கிறது.

வேறு ஏதாவது வித்தைகள், சாம, பேத, தான, தண்டத்தை செய்து,  அதிசயங்கள் நிகழ்ந்தா லொழிய  அவர்களுடைய எண்ணம் ஈடேறாது. தமிழ்நாட்டில் நடந்ததுபோன்றுதான்  மிகப் பெரிய அளவில் மாறுதல்கள் வரும்.

கமண்டலுக்கும், மண்டலுக்கும்

ஒத்துப் போகாது

எனவேதான், மண்டல் இன்றைக்கும் அடித்தளத் திலே இருக்கிறார். மண்டல் எப்பொழுதுமே கமண்ட லத்தைவிட மாட்டார்.

கமண்டலுக்கும், மண்டலுக்கும் ஒத்துப் போகாது.

கமண்டல், சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்று சொன்னால்.

மண்டல், சூத்திரனை அர்ச்சகனாக்கிக் காட்டியது. மண்டல் - சமூகநீதி.

சமூகநீதியில்  மிக முக்கியமானது - பஞ்சமனை அர்ச்சகனாக ஆக்கிக் காட்டியது.

யார் இதுவரையில் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு இருந்ததோ, அவர்கள் உள்ளே நுழையக் கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கி வைத்தி ருக்கிறார்கள். பெண்களுக்கும் அந்த வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

எனவேதான் நண்பர்களே,  கங்கை புனிதமான நதி என்று சொன்னார்களே,  அந்த நதியில்தானே, கோவிட் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்குச் சுடுகாடுகள் இல்லை என்பதினால் போட்டார்கள்;

அதுமட்டுமல்ல, மக்கள் எப்படி இருக்கிறார்கள்?

இன்று காலையில் வந்திருக்கக்கூடிய ஒரு மிக முக்கியமான செய்தியைச் சொல்லி என்னுரையை நிறைவு செய்கிறேன்.

''நாங்கள் ஒருபோதும் பி.ஜே.பி.யை ஆதரிக்கமாட்டோம்'' என்று சொல்கிறார்கள்

'தி டெலிகிராப்', 'தி இண்டியன் எக்ஸ்பிரஸ்' நாளி தழ்களில் அந்த செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

BJP candidates face black flags, stones, mud in west UP, FIR lodged -


''உத்தரப்பிரதேச மாநில மேற்கு பகுதி, விவசாயிகள் அதிகமாக இருக்கின்ற பகுதியாகும். அங்கு பாரதீய கிசான் சங்க தலைவர் மற்றும் அந்த  அமைப்பினர் தெளிவாக, ''நாங்கள் ஒருபோதும் பி.ஜே.பி.யை ஆதரிக்கமாட்டோம்'' என்று சொல்கிறார்கள்.

அதேபோன்று பலமான பகுதிகளான கிழக்கு, மேற்கு பகுதிகளில் இவர்களால் காலூன்ற முடிய வில்லை.

பி.ஜே.பி., ஓட்டுக் கேட்பதற்காக செல்லுகின்ற நேரத்தில், அவர்களுக்கு, வாக்காளர்களான மக்கள் கருப்புக்கொடி காட்டுகிறார்கள்'' என்கிறது அந்தச் செய்தி.

இதற்கு என்ன காரணம்?

வேலை இல்லாத மக்கள், வேலை இல்லாத சூழல் எப்படி ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னால் நண் பர்களே, ஒரு சிறு தகவலை உங்களுக்குச் சொல்கிறேன்.

அய்ந்து மடங்கு வேலை இல்லா நிலை பெருகி யிருக்கிறது என்பதை இன்றைக்கு உணர்ந்திருக் கிறார்கள்.

இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் அரசாங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள். அவை கட்டுரைகளாக வந்திருக்கின்றன.

எனவேதான், சமூகநீதி என்பது, பொருளாதார நீதி கலந்த சமூகநீதி. இதை கமண்டலால் சந்திக்க முடியாது.

வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை இரண்டு கோடிக்கு மேலே பெருகியுள்ளது

வெறும் ராமர் கோவிலைக் காட்டி, ராமனைக் காட்டி மட்டும்   வெற்றி பெற்று விட முடியாது. அந்த வகையிலே உத்தரப்பிரதேச மாநிலத்தில், வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை இரண்டு கோடிக்கு மேலே பெருகியுள்ளது.

முதன்முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மோடி என்ன சொன்னார்?

ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்னார்.

ஆனால், என்ன நடந்தது?

இருக்கின்ற வேலை வாய்ப்புகள்தான் பறிபோயின.

அதனை மக்கள் இப்பொழுது புரிந்துகொண் டார்கள்.

அன்றைக்கு இருந்த மயக்கம் - மயக்க மருந்து கொடுத்ததைப்போல சொன்னது, இன்றைக்குத் தெளிவாகிவிட்டது.

7 சதவிகிதம் எங்கே?

2 சதவிகிதம் எங்கே?

அதுமட்டுமல்ல, மிகப்பெரிய அளவிற்கு பொரு ளாதார அடிப்படையிலே, 2018 இல் 6.92 சதவிகிதமாக இருந்த மாநில பொருளாதார வளர்ச்சி என்பது, உற் பத்திப் பொருள்கள் - அது இப்பொழுது 1.95 - 2019-2021  வரையில்.

7 சதவிகிதம் எங்கே?

2 சதவிகிதம் எங்கே?

ஆக, 7 சதவிகிதமாக இருந்தது - 2 சதவிகிதமாக குறைந்தது.

அதேபோலத்தான், இந்தக் கரோனா தொற்று கால கட்டத்தில்,  குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் குழந்தைகள் மரணம் ஒருபக்கம் நடந்தது -  அது எல்லாவற்றையும்விட,

திராவிட மாடல்தான் இன்றைக்கு நாட்டுக்கே எடுத்துக்காட் டாக இருக்கின்றது என்பதை அவர்கள் எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள்.

சமூகநீதிதான் இன்றைக்கு மய்யப் பொருளாக ஆக்கப்பட்டு இருக்கிறது

உத்தரப்பிரதேசத்தில் 45 சதவிகிதம் உயர்ஜாதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்தான். இதுதான் இன்றைய ஆட்சி.

யார் சொல்லுகிறார்கள்?

வெளியேறியவர்கள் சொல்லுகிறார்கள்.

எனவேதான், சமூகநீதிதான் இன்றைக்கு மய்யப் பொருளாக ஆக்கப்பட்டு இருக்கிறது.

அந்த சமூகநீதிக்கு இவர்கள் எதிரிகள் என்பதை வாக்காளர்கள் மத்தியிலே தெளிவாக உணர்த்து கிறார்கள்.

எனவே, கமண்டல் என்பது இருக்கிறதே, அதை வைத்துக்கொண்டு மண்டலைத் தள்ளிவிடலாம் என்று இவர்கள் நினைத்தார்கள்.

ஆனால், எதிர்விளைவாக - பூமராங் என்பது போன்று அடித்தால், அதே வேகத்தோடு திரும்பி வருவதைப்போல, இன்றைக்கு மிகத் தெளிவாக  மண்டல் வந்திருக்கிறது.

எனவே, இந்த மதவெறி ஒழிப்பு கண்டன நாளில், மனிதநேயத்தைப் பெருக்கக்கூடிய அளவிற்கு வரக் கூடிய நாளிலே, தெளிவான சூழல் உருவாகியுள்ளது.

இங்கே எப்படி ஒரு விடியல் முதலமைச்சர் கிடைத் தாரோ, அதேபோல அங்கேயும் வரக்கூடிய நிலை இருக்கிறது. இதே ஃபார்முலா அங்கே பின் பற்றப்படு மேயானால், 2024 இல் நடைபெறவிருக்கின்ற நாடாளு மன்றத் தேர்தல்கூட மிக எளிமையாக இருக்கும்.

ஏனென்றால், ஒவ்வொரு நாளும் வருகின்ற செய் திகள், பெகாசஸ் உள்பட எத்தனையோ செய்திகளை மக்கள் உணரக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.

அவர்கள் மத்தியிலே, பண பலம், படை பலம், பத்திரிகை பலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால், அதையும் தாண்டி, மிகப்பெரிய அள விற்கு,  Mind Power  of  the People.  அவர்கள் அனு பவித்திருக்கிறார்கள். இன்றைக்கு அதை உணரு கிறார்கள். அப்படிப்பட்ட  ஒரு சூழல் இன்றைக்கு இருக்கின்றது.

கறை படிந்த அத்தியாயத்திற்கு முடிவு

எனவேதான், காந்தியார் நினைவு நாளில், மத வெறிக் கண்டன நாள் என்பது மட்டுமல்ல நண்பர் களே, மனிதநேயம் பெருகவேண்டுமானால், எவ்வ ளவு விரைவில் இந்தக் காவி அத்தியாயத்திற்கு

முடிவெடுக்க முடியுமோ - கறை படிந்த அத்தியாயத்திற்கு முடிவு ஏற்பட முடியுமோ -அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால்தான், மனிதநேயம் தழைக்கும் - உண்மையான ஜனநாயகம் அங்கே பிழைக்க முடியும். தெளிவான ஒரு சூழல் இருக்க முடியும்.

மதச்சார்பின்மை இன்றைக்குக் கேலிக்கூத்தாக்கப்பட்டு இருக்கிறதே- அவை அத்தனையும் மாற்றப்படும்.

எதற்காக கடைசி காலத்தில், காந்தியார் அவர்கள் தன்னுடைய  உயிரைத் தியாகம் செய்தாரோ, அந்த காந்தியாருடைய தியாகம் வீண் போகாது; எந்த சமூகநீதிக்காக அவர் தன்னுடைய உயிரை பலி கொடுத்தாரோ -  கேள்வி கேட்டதற்காக, அவர் ஒரு ஹிந்துவாக இருந்தாலும், வருணாசிரம தர்மத்தை ஆதரித்தவராக இருந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை.

நீங்கள் சமூகநீதியை எதிர்த்தீர்கள்.  எங்களது கல்வி வாய்ப்புகள், உத்தியோக வாய்ப்புகள் எல்லாம் மற்றவர்களுக்கு உரியதாகவேண்டும் என்று சொன்னீர்கள்.

''மற்றவர்கள் படிக்கக்கூடாது என்பது எங்களுடைய தர்மம்; மீறி படித்தால், நாக்கை அறுக்கவேண்டும்; காதிலே ஈயத்தை காய்ச்சி  ஊற்றவேண்டும் என்பது எங்கள் தர்மம். அந்த சனாதன தர்மத்திற்கு நீங்கள் விரோதமாக நடந்தீர்கள். ''

மண்டல் பெரு உரு எடுக்கும்.

எனவே, உங்களுக்கு இடமில்லை என்று சொன்னதற்கு, நேர் விரோதமான சூழல் நிச்சயமாக இப்பொழுது உருவாகும்.

எனவேதான் திராவிட மாடல் என்பது தமிழ்நாட்டில் தொடங்கி, இந்தியா முழுவதும் வரக்கூடியதைத்தான் மண்டல் ஏற்படுத்துகிறது.

மண்டலுக்கு முன்னால், கமண்டல் சிறு ஆயுதமாக இருக்கும். மண்டல் பெரு உரு எடுக்கும்.

இதுதான் நிலை.

எனவேதான், இந்த நாளில், தெளிவான இந்தச் செய்தியை சொல்லி,  உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க  சமூகநீதி!!

வருக புதிய சமுதாயம்!

நன்றி,வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment