அவசியமில்லாமல் சாப்பிடுவது உடலுக்கு தேவையானதை விட அதிக கலோரிகளை நுகர வைத்துவிடும். எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அவசியமில்லாமல் சாப்பிடும் வழக்கத்தை கட்டுப் படுத்திவிடலாம்.
மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில் அதிகம் சாப்பிடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பசி இல்லாவிட்டாலும் கூட பிடித்தமானவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடவும் செய்கிறார்கள். அப்படி அவசியமில்லாமல் சாப்பிடுவது உடலுக்கு தேவையானதை விட அதிக கலோரிகளை நுகர வைத்துவிடும்.
உடல் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மன நல பிரச்சினைகள் என எண்ணற்ற பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். ஒருசில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இப்படி அவசியமில்லாமல் சாப்பிடும் வழக்கத்தை கட்டுப் படுத்திவிடலாம்.
மெதுவாக சாப்பிடுங்கள்: முக்கியமான வேலைக்கு நடுவே சாப்பிடும்போது கவனம் முழுவதும் வேலை மீதே பதிந்திருக்கும். அவசரம் அவசரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு வேலை செய்ய தொடங்கிவிடுவார்கள். இந்த வழக்கம் தவறானது. அவசரப்படாமல் மெதுவாக சாப்பிடும்போது உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும். அதாவது மெதுவாக சாப்பிடுபவர்கள் குறைவாகவே சாப்பிடுவார்கள். ஏனென்றால் வயிறு நிரம்பிவிட்டது என்பதை மூளைக்கு தெரியப்படுத்துவதற்கான ரசாயனங்களை வெளியிடுவதற்கு சுமார் 20 நிமிடங்களாவது ஆகிவிடும்.
ஆனால் வேகமாக சாப்பிடும்போது திருப்தியாக சாப்பிட்டதற்கான சமிக்ஞை மூளையை சென்றடைய முடியாமல் போவதால் அதிகமாக சாப்பிட்டு விடுவீர்கள். மெதுவாக சாப்பிடும்போது குறைவாக சாப்பிட விரும்புவீர்கள். ரசித்தும் சாப்பிடுவீர்கள். சாப்பிட உட்கார்ந்ததும் மனதை அலைபாயவிடாமல் கவனம் முழுவதையும் சாப்பிடும் தட்டு, உணவின் நிறம், சுவை மீது பதியுங்கள். உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள். அதிக முறை மெல்லுங்கள். உணவை கையால் சாப்பிடுவதற்கு பதிலாக ஸ்பூன் உபயோகிக்கலாம். அது இயல்பாகவே சாப்பிடும் அளவை குறைப்பதற்கு வழிவகுக்கும்.
கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள்: பெரும்பாலானோர் டி.வி, செல்போன் பார்த்தபடியே சாப்பிடும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். சிலர் வேலைகளை செய்து கொண்டே சாப்பிடவும் செய்கிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவதாக கருதலாம். ஆனால் தேவைக்கு அதிகமாகவே சாப்பிட்டு விடுவீர்கள். சில சமயம் ஆரோக்கியமற்ற உணவாக அது இருக்கக்கூடும். இவை இரண்டுமே உடல் நலத்திற்கு உகந்தது அல்ல. சாப்பிடும்போது கவனம் முழுவதும் உணவு மீது மட்டும்தான் இருக்க வேண்டும்.
சிறிய தட்டு பயன்படுத்துங்கள்: ஜப்பானிய உணவு முறையை பின்பற்றுமாறு உணவியல் நிபுணர்கள் பரிந்துரைப்பதுண்டு.ஜப்பானியர்கள் பொதுவாக தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுவார்கள். சாப்பிடுவதற்கு சிறிய தட்டுகள், கிண்ணங்களை பயன் படுத்துவார்கள். எல்லோருமே தட்டில் வைக்கப்படும் உணவில் 92 சதவீதத்தை சாப்பிட்டு முடித்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவ, தட்டின் அளவை குறைக்கும்போது அதில் வைக்கப்படும் உணவின் அளவும் குறைந்து போய்விடும். ஜப்பானியர்கள் பெரும்பாலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்வதில்லை.
அமெரிக்காவில் உள்ள வயதான ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (51.6%) அதிக எடை கொண்டவர்கள். 43.1% பெண்களும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். ஆனால் ஜப்பானில், வயதான ஆண்களில் 16 சதவீதம் பேரும், பெண்களில் 20.2 சதவீதம் பேரும் மட்டுமே அதிக எடை கொண்டவர்கள். ஜப்பானில் உடல் பருமன் பிரச்சினை கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு அவர்கள் கடைப்பிடிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்களே காரணமாகும்.
உணவு தேர்வு முறை: பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளையே அதிகம் பேர் வாங்கி சாப்பிடுகிறார்கள். அதற்கு மாற்று பொருட்களை தேர்வு செய்வதற்கு முயற்சிக்கலாம். உதாரணமாக சிப்ஸ்க்கு பதிலாக நட்ஸ் வகைகளை வாங்கலாம். சாக்லேட்டுக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை தேர்வு செய்யலாம். பெரிய பொருட்களுக்கு மாற்றாக சிறிய பொருட்களை வாங்க முயற்சிக்கலாம். அவை அதிகமான கலோரிகளை உட்கொள்வதை குறைப்பதற்கு வழிவகுக்கும்.
பொதுவாக மன அழுத்தத்தில் இருக்கும்போது அதிகமாக சாப்பிடக்கூடும். அந்த சமயத்தில் உணவு தேர்வில் கவனம் தேவை. ஒரு கிண்ணம் பழமா? அல்லது ஒரு கிண்ணம் அய்ஸ்கிரீமா? பீட்சாவா? சாலட்டா? என்பதை பொறுத்துத்தான் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
No comments:
Post a Comment