'மதவெறி கண்டன நாள்! மண்டலும் - கமண்டலும்'
காணொலி சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை
சென்னை, பிப்.2 பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் பசு மாட்டிற்கு இருக்கின்ற பாதுகாப்பு மனிதனுக்குக் கிடையாது; தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடையாது; பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடையாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மண்டலும் - கமண்டலும்
காணொலி சிறப்புக் கூட்டம்
கடந்த 30.1.2022 அன்று மாலை ''மதவெறி கண்டன நாள் - மண்டலும் - கமண்டலும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி சிறப்புக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நண்பர்களே, இந்தக் கமண்டல் என்று சொல்லு கின்ற நேரத்தில், கமண்டலுக்கு ஏற்பட்டிருக்கின்ற சூழல் என்ன? அதுதான் மதவெறி.
மதவெறிக்காக எல்லாவற்றையும் ஒழிப்பார்கள்!
அந்த மதவெறிக்காக எல்லாவற்றையும் ஒழிப்பார் கள் என்பதற்கு உதாரணம்தான் - சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுடைய ஆட்சியை 10 மாதங்கள் கூட நீடிக்க முடியாத அளவிற்கு ஆக்கியது.
மண்டலுக்காக திராவிடர் கழகம் எத்தனைப் போராட்டங்கள், எத்தனை மாநாடுகளை நடத்தி யிருக்கிறது தெரியுமா?
இந்தியா முழுவதும் 16 போராட்டங்களை நடத்தியிருக்கின்றோம்.
திராவிட மண் - சமூகநீதி மண்!
அதற்கு முன்னாலே, 1928 ஆம் ஆண்டிலிருந்து நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம் ஒரு பாரம்பரியமாக வந்ததினாலே, தென்மாநிலங்களில் திராவிட மண் இருக்கிறது - அது சமூகநீதி மண்.
அதேநேரத்தில், வடமாநிலங்களில் அது இல்லை என்று சொல்லும்பொழுது அங்கே எப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டிருக்கிறது?
ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும்.
வி.பி.சிங் அவர்களைப்பற்றி அண்மையில் வந் திருக்கின்ற அருமையான வாழ்க்கை வரலாறு நூல் - இதுவரையில் வராத அளவிற்கு சிறப்பானது.
How Viswanatha Prathap Singh Shook India - The Disruptor
இந்தியாவை எப்படி அதிர்ச்சியடையச் செய்தார் வி.பி.சிங் - மண்டல் மூலமாக, மற்ற மற்ற செயல்கள் மூலமாக.
ஒரு கலகக்காரர் என்று மற்றவர்கள் சொன்னார்கள்.
சமூகநீதிக் குரல் வடபுலத்திலும்
கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது!
வி.பி.சிங் அவர்கள், பெரியாருடைய தத்துவத்தை, சமூகநீதித் தத்துவத்தை உள்வாங்கியவர். அதனால் தான் காங்கிரசிலிருந்து வெளியேறி, பிறகு ஆட்சிக்கு வந்த சூழலில், சமூகநீதிக்காக மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய அளவிற்கு சூழ்நிலை வந்தது. அந்த நிலை ஏற்படுவதற்கு முன்பாக, சமூக நீதிக் குரல் வடபுலத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது லோகியா போன்றவர்களால்.
60 சதவிகிதம் நாங்கள் இருக்கிறோம்; மற்றவர்களை யெல்லாம் சேர்த்தால் 80 சதவிகிதம்.
சமநிலையற்றவர்கள் எப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்க முடியும் என்ற அளவிற்கு வந்த பொழுதுதான், அந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தன.
மண்டல் பிரச்சாரம் வலுப்பெற்று வந்தவுடன், குஜராத்திலேயும் அந்த உணர்வு வந்தது.
பீகார் மேனாள் முதலமைச்சர்
கர்ப்பூரி தாக்கூர்
கர்ப்பூரி தாக்கூர் போன்றவர்கள், சோசலிச கட்சியிலே லோகியா போன்றவர்கள், லாலுபிரசாத் போன்றவர்கள், முலாயம்சிங் போன்றவர்கள், சந்திர ஜித் போன்றவர்கள், கான்ஷிராம் போன்ற வடபுலத் தலைவர்கள் சமூகநீதிக் குரலை உருவாக்கி நாம் அங்கு சென்றவுடன், பெரியாருடைய தத்துவத்தைப் புரிந்து, அவர்கள் குரல் கொடுத்தார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் மதவெறியை உண்டாக்க வேண்டும் என்று நினைத்தார்கள்; அங்கே சமூகநீதிக் குரலை வேகமாகப் பரப்ப முடியவில்லை. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் உணர ஆரம்பித்தார்கள்.
பீகாரில், கர்ப்பூரி தாக்கூர், 20 சதவிகிதத்தைக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் நடைபெற்ற நம்முடைய மாநாடுகளில் அவர் பங்கேற்று இருக்கிறார்.
118 உயிர்கள் பலிவாங்கப்பட்டு இருக்கிறது
கர்ப்பூரி தாக்கூர், பீகாரில் 20 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தார் என்பதற்காக போலீஸ் சுட்டதில் 118 உயிர்கள் பலிவாங்கப்பட்ட அந்த விவரங்கள் எல்லாம் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன.
குஜராத்திலே மாதவ்சிங் சோலங்கி, 1985 இல் இட ஒதுக்கீடு கொடுத்தபொழுது, மிகப்பெரிய அளவிற்குப் போராட்டங்கள் நடந்து, 275 உயிர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றன.
இந்த சூழல்கள் எல்லாம் வடமாநிலங்களில்தான்.
சமூகநீதி என்பதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்ற மண் - பெரியார் மண்!
ஆனால், சமூகநீதி என்பதை மற்றவர் களுக்குச் சொல்லிக் கொடுக்கின்ற மண் - பெரியார் மண்.
எனவே, இந்தியா முழுவதும், அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திலிருந்து அந்த உணர்வுகள் பரவ ஆரம்பித்தன. 1951 இலிருந்து அதற்கான விதைகள் விதைக்கப்பட்டன.
எப்படி தென்னாட்டிலே மட்டும் இப்படி இருக்கிறார்கள்? நாம் இப்படி இருக்கிறோமே என்று வடமாநிலத்தவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக பெரியார், வடபுலத் திற்கு நகர ஆரம்பித்தார். அதனுடைய விளை வாகத்தான், மண்டல் அறிக்கைக்குப் பிறகு பேரெழுச்சி ஏற்பட்டது.
ராம்விலாஸ் பஸ்வான்
மண்டல் செயல்பாட்டிற்காக நாம் போராடி, ராம் விலாஸ் பஸ்வான் போன்றவர்கள் இங்கே வந்து நம்மிடையே தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அவரும், மற்ற நண்பர்களும் இணைந்து உணர்த் திய பின்பு வி.பி.சிங் அவர்கள் அதனைத் தொடர்ந்தார்.
அரசியல் ரீதியாக கலைஞர் அவர்கள், தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக, முதலமைச்சராக இருந்த நேரத்தில், கூட்டணி ஏற்பட்டது.
ஒரு பக்கத்திலே தி.மு.க. - இன்னொரு பக்கத்திலே தி.க. -வி.பி.சிங் அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்களோடு நல்ல அறிமுகம் ஆனது.
பதவிக்கு ஆபத்து என்றார்கள்;
பரவாயில்லை என்றார் வி.பி.சிங்!
தமிழ்நாடு வி.பி.சிங் அவர்களை விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு, சமூகநீதிக் காவலராக பார்க்கக்கூடிய அளவிற்கு வந்தது.
அவரை ஒழிக்கவேண்டும் என்று நினைத்து, அவருடைய ஆட்சியைக் கவிழ்த்தார்கள்.
வி.பி.சிங் அவர்கள் மண்டலை நடைமுறைப் படுத்தப் போகிறேன் என்று சொன்னவுடன், அத்வானி சொல்கிறார், மண்டலை நடைமுறைப்படுத்தாதீர்கள் என்றார். அவருடைய நண்பர்கள் எல்லாம் சொல் கிறார்கள், இதனால் உங்களுடைய ஆட்சிக்குக் கேடு ஏற்படும் என்று.
நான் முடிவு செய்துவிட்டேன். இனிமேல் ஒரு போதும் அதை நான் தள்ளி வைக்கமாட்டேன் என்று முடிவெடுத்து, வி.பி.சிங் அவர்கள் மிகத் தெளிவாக மண்டலை நடைமுறைப்படுத்தினார்.
Mandal Vs Mandir
அதைத்தான் அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார்,
Mandal Vs Mandir என்ற தலைப்பில், ஒரு அத்தியாயத்தையே எழுதியிருக்கிறார்.
ராமர் கோவில் என்ற பிரச்சினையை அதற்கு முன்பாக ஆரம்பித்தாலும், இதை முக்கிய காரணமாக கலவரத்திற்கு எடுத்துக்கொண்டார்கள்.
இப்பொழுதும் அந்த சூழல்கள் வந்திருக்கின்றன என்றாலும், அந்த நிலை இப்பொழுது இல்லை.
சமூகநீதி என்பது
சமூக விஞ்ஞானம்!
உச்சநீதிமன்றமே மாநிலங்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய அளவிற்கு நிலைப்பாடு வந் திருக்கிறது.
சமூகநீதி சரித்திரத்தை வெல்ல முடியாது. சமூகநீதி என்பது ஒரு நியாயத்தின் அடிப்படை யைக் கொண்டது. சமூக விஞ்ஞானம் அது.
அந்த சமூக விஞ்ஞானம், அரசமைப்புச் சட்ட ரீதியாக இருக்கக்கூடிய உரிமை. அந்த உரிமையை, நம்முடைய திராவிட இயக்கம்தான் வலியுறுத்தியது.
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நம்முடைய முதலமைச்சர்தான் என்பதை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்
அண்மையில், அகில இந்தியாவினுடைய தலை வர்கள் எல்லாம் கூடி, நம்முடைய முதலமைச்சரைப் பொறுத்தவரையிலே, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்தான் என்பதை அடையாளப்படுத்தி இருக் கிறார்கள்.
இந்த உணர்வுகளுக்கெல்லாம் காரணம் என்ன?
மண்டல், சமூகநீதி மேலே வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் - கமண்டலை, இப்பொழுது வேறுவிதமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்பதுதான்.
ஆகவே, அவர்களைப் பொறுத்தவரையில், எப் படியாவது இதைத் தடுக்கவேண்டும். சாதாரணமாக விடக் கூடாது என்பதற்காகத்தான், பொருளாதார அடிப்படை என்று சொல்லுவார்கள்; நேரிடையாக இதை எதிர்க்க முடியாது என்பதற்காக, இட ஒதுக் கீட்டை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள்.
இந்தக் காலகட்டத்தையெல்லாம் நாம் தாண்டி வருவது என்பதும் மிக முக்கியமான அடிப்படை யாகும்.
ஆகவே நண்பர்களே, இன்றைக்கு அந்த மத வெறியை நாம் எதிர்க்கவேண்டும் என்று சொல்வது, வெறும் மதவெறி என்பது மட்டுமல்ல - அந்த மத வெறியை அதன்மூலமாக சமூகநீதிக்கு எதிரான தத்துவத்தை நிலைநாட்டி, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், ஜாதி முறை, வருணாசிரம தர்ம முறை நிலைக்கவேண்டும் என்பதற்கான அத்துணை முயற் சிகளையும் திட்டமிட்டு அவர்கள் செய்துகொண்டி ருக்கிறார்கள்.
இது வெறும் மதவெறிக் கண்டன
நாள் அல்ல!
எனவேதான், இது வெறும் மதவெறிக் கண்டன நாள் என்பதில்லை. அதற்குள்ளே இருக்கின்ற செய்தி களை, அதனுள்ளே பொதிந்திருக்கின்ற செய்திகளை ஒவ்வொன்றாக நாம் வெளியே கொண்டு வர வேண்டும்.
சமூகநீதிக்கு மிகப்பெரிய குழிதோண்டி புதைப் பதுதான் அவர்களுடைய பணியாக இருக்கின்றது.
எனவேதான், சமூகநீதியை நாம் மிகப்பெரிய அள விற்குப் பாதுகாக்கவேண்டுமானால், இந்தக் கும்பல், இந்த மதவெறிக் கும்பலை, மதவெறியை விதைத்துக் கொண்டிருப்பவர்களின் ஆதிக்கத்தை இல்லாமல் செய்யவேண்டும்.
கோட்சேக்களுக்கு இங்கே இடமில்லை
கோட்சேக்களுக்கு இங்கே இடமில்லை என்று இன்று காலையில், எப்படி நம்முடைய முதலமைச்சர் சொல்லியிருக்கிறாரோ, இந்தக் குரல் வடக்கே ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
இப்பொழுது ஒரு நல்ல திருப்பம்.
நாம் அதிர்ச்சியடைய வேண்டிய அவசியமில்லை.
நாம் சந்தேகப்படவேண்டிய அவசியமேயில்லை.
ஒரு நல்ல திருப்பம்.
எனவே, இந்த அளவிற்கு இந்த செய்தியை முடித்துக்கொண்டு, அடுத்த செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.
நடைபெறவிருக்கின்ற அய்ந்து மாநில தேர்தல் களைப்பற்றி தோழர்கள் இங்கே சொன்னார்கள்.
இதற்கு விடியல் ஏற்படவேண்டும், மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்று சொன்னார்கள்.
நிச்சயமாக அந்த மாற்றங்கள் வரும் - வருவதற் குரிய அறிகுறிகள் ஏராளமாக இருக்கின்றன.
அவர்களின் திட்டம் கொஞ்சம்
கொஞ்சமாகக்
கீழே போய்க்கொண்டிருக்கிறது
அதற்கு என்ன அடையாளம் என்று சொல்ல வேண்டும் - இதைப்பற்றி தனியாகக்கூட பேசக்கூடிய அளவிற்கு இருந்தாலும், அய்ந்து மாநில தேர்தல்கள் இருக்கிறதே - இதிலே ஏதோ ராமர் கோவில் கட்டி விட்டோம் என்று தொடக்கத்தில் சொன்னார்கள்; நாங்கள் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிவிட் டோம்; ஆகவே, ராமனைக் காட்டி, கமண்டலைக் காட்டி, ராமர் கோவிலைக் காட்டி, மதவெறி உணர்வுகளை வைத்து, அவர்கள் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டார்கள் அல்லவா - அது கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே போய்க்கொண்டிருக்கிறது.
இதுதான் நல்ல செய்தியாகும்!
இன்றைய தினம் - கமண்டல் கீழே போகிறது.
அவர்கள் நினைத்தார்கள், மதவெறியை உண் டாக்கி, அதன்மூலமாக அய்ந்து மாநில தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என்று அவர்கள் நினைக்கக்கூடிய அளவிலே இருந்த சூழல், அங்கே மாறிக் கொண் டிருக்கிறது.
பசு மாட்டிற்கு இருக்கின்ற பாதுகாப்பு
மனிதனுக்குக் கிடையாது
உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தில்தான் 403 இடங்கள். இந்தியாவிலேயே சட்டப்பேரவை தொகுதி கள் அதிகமாக இருக்கக்கூடியது. அந்த 403 இடங்கள் கொண்ட சட்டப்பேரவையில், யோகி ஆதித்யநாத் என்ற ஒரு சாமியாரைக் கொண்டு வந்து வைத்து, மிகப் பெரிய அளவிற்கு ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் உயிரை பலி வாங்கிக் கொண்டுள்ளார்கள்.
பசு மாட்டிற்கு இருக்கின்ற பாதுகாப்பு மனிதனுக்குக் கிடையாது; தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடையாது; பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடையாது என்பதை இன்றைக்கு அவர்கள் எப்படி கொண்டு போகிறார்கள்.
நாம் ராமன் கோவிலைக் காட்டியே ஓட்டு வாங்கி விடலாம் என்று திட்டம் போடுகிறார்கள். அந்த எண்ணம், கொஞ்சம் கொஞ்சமாக கீழிறக்கத்திற்கு வந்திருக்கிறது; கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.
முற்றிலும் மாறிக் கொண்டிருக்கின்றது!
அங்கே இருக்கின்ற தலைவர்கள் தொடக்கத்தில் எப்படி இருந்தார்கள் என்றால், ஒருவர் ராமரைச் சொன்னவுடன், அங்கே இருக்கின்ற மாயாவதி அம் மையார், நான் பரசுராமனோடு பேசிக் கொண்டிருக் கிறேன், ராமனின் இன்னொரு அவதாரத்தோடு - என்று சொன்னார்.
இதே அகிலேஷ் யாதவ் அவர்கள், கிருஷ்ணன் என் கனவில் இரவோடு இரவாக வந்து என்னோடு பேசுகிறார் என்றார்.
கடவுள்கள் தேர்தலிலே நிற்பது போன்ற அள விற்கு, ஒரு அவதாரம், இன்னொரு அவதாரத்தை எதிர்ப்பதுபோன்று, அங்கே தொடக்கத்தில் அந்த நிலை இருந்தது - உ.பி. அரசியலில்!
ஆனால், இப்பொழுது அது முற்றிலும் மாறிக் கொண்டிருக்கின்றது என்பது ஒருநல்ல செய்தி.
தொடர்ந்து ஓர் ஆய்வு செய்த நிலையில், உங் களுக்கு நான் சொல்கிறேன், குறுகிய நேரத்தில். இதைப்பற்றி உண்மையில்கூட தலையங்கம் எழுதி யிருக்கிறேன்.
உத்தரப்பிரதேசத்தில், அகிலேஷ் யாதவ், மிகப் பெரிய அளவிற்கு அந்த அமைப்பை உருவாக்கி இருக்கிறார்.
பிற்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தில், சமூகநீதி மிகப்பெரிய அளவிற்கு வந்த நேரத்தில், அவர்கள் ஆட்சி அமைத்த நேரத்தில், ஓர் இளைஞராக இருந்தவர் அவர்.
(தொடரும்)
No comments:
Post a Comment