‘‘ஆணவக் கொலைகளும் - உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பும்’’
காணொலி சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சென்னை, பிப். 5 எதையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்களோ -அண்மைக்கால நீதிமன் றத் தீர்ப்புகள் அவற்றையே சொல்லுகின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
‘‘ஆணவக் கொலைகளும் - உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பும்!’’
கடந்த 4.12.2021 அன்று மாலை ‘‘ஆணவக் கொலை களும் - உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பும்‘‘ எனும் தலைப்பில் காணொலிமூலம் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அருமைத் தோழர்களே, எனக்கு முன் மிகச் சிறப்பாக, தீர்ப்பைப்பற்றி ஒரு வகுப்பெடுப்பதைப்போல, மிக ஆழமான கருத்துகளைத் தெளிவாக எடுத்துவைத்து விளக்கிய, கழகப் பிரச்சார செயலாளர் தோழர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,
இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
பார்வையாளர்களில் முதன்மையானவராக இருக் கக்கூடிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
அருமை இயக்கப் பேச்சாளர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த தோழர்களே, பொதுமக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வழக்கினுடைய - தீர்ப்பினுடைய மிக முக்கியமான பல்வேறு அம்சங்களை - மிக ஆழமாக, இந்தத் தீர்ப்பை முழுமையும் படித்துத் தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பில்லாத மக்களுக்கு - பொலிட்டிக்கல் எஜூகேசன் என்று சொல்வதைப்போல, ஒரு சமூக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய முறையில் அமைந்த அந்த உரையைக் கேட்டீர்கள்.
பெரிதும் வடபுலங்களில்தான்!
அதிகமாக நடைபெற்று இருக்கின்றன
அந்த வழக்குகளில் உள்ள சில முக்கியமான கருத்துகளையொட்டி, “ஆணவக் கொலைகள்’’ என்று நாம்தான் பெயரிட்டோம். அந்த ஆணவக் கொலை களைப்பற்றி ஏறத்தாழ 15, 20 ஆண்டுகாலங்களில் தொடரப்பட்ட வழக்குகளில், பெரிதும் வடபுலங்களில் தான் ஆணவக் கொலைகள் அதிகமாக நடைபெற்று இருக்கின்றன.
சிலர் இதை திசை திருப்புவதற்காக, ஊடகங்களிலும், மற்றவைகளிலும்கூட, “என்ன, பெரியார் ஜாதி ஒழிப்பிற்காகப் பணியாற்றினார்? இப்படி ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றனவே - அப்படியென்றால், பெரியாருடைய கொள்கைகள் தோற்றுவிட்டன என்று ஒப்புக்கொள்கின்றீர்களா?” என்பதுபோன்ற கேள்வி களை கேட்டார்கள்.
அப்பொழுது ஒன்றை நான், தெளிவாக, உதாரணமாக சொன்னேன்.
அவசரப்பட்டு விமர்சனம் செய்யக்கூடாது!
ஆணவக் கொலைகள் ஜாதி மறுப்புத் திருமணங் களுக்காக நடைபெறுகின்றன என்பது சில இடங்களில் உண்மை - மறுக்கப்பட முடியாத உண்மையும்கூட. ஆனால், அதனால் பெரியாருடைய ஜாதி ஒழிப்புக் கொள்கை தோற்றுவிட்டது அல்லது எடுபடவில்லை என்று அவசரப்பட்டு விமர்சனம் செய்வது, முழுமையாக இந்தப் பிரச்சினையை புரிந்துகொள்ளாதவர்களாகவோ அல்லது புரிந்துகொண்டும் திசை திருப்பக் கூடியவர் களாகவும் இருக்கவேண்டும் என்பதைத்தான் சுட்டிக் காட்டினேன்.
அதற்கு ஒரு நல்ல உதாரணத்தை அவர்களுக்கு விளங்கும்படியாக அப்பொழுது சொன்னோம் நாங்கள்.
“5 ஆயிரம் கார்கள் (மகிழுந்துகள்) சாலைகளில் ஓடு கின்றன. அப்படி ஓடி, அவரவர்களுடைய இலக்குகளை அடைகின்றனர். சென்னையிலிருந்து புறப்பட்டு திருச் சிக்குப் போய்ச் சேருகிறோம். ஆனால், அவை செய்தி களாகவில்லை. மேற்சொன்ன 5 ஆயிரம் கார்களில் அங்கொன்றும், இங்கொன்றும் விபத்துகள் ஏற்பட்டு இருக்கலாம்; அல்லது அதிகபட்சமாக 10 இடங்களில்கூட விபத்துகள் நடைபெற்று இருக்கலாம்.
விபத்துதான் செய்தியாகுமே தவிர, அடைகின்ற இலக்கினை சுகமாகப் போய்ச் சேர்ந்தவர் களைப்பற்றியோ, நிம்மதியாகப் போய்ச் சேர்ந்தவர் களைப் பற்றியோ செய்திகள் வருவதில்லை - அது இயல்புதான்”.
இப்படி சொல்வதினால், விபத்துகளை நியாயப்படுத்த முடியாது; நடக்கட்டும் என்றும் விட்டுவிட முடியாது. அதையும் இல்லாமல் செய்யவேண்டும் என்பதுதான் ஓர் அரசின் இலக்கு.
அதுபோல, ஆணவக் கொலைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாகக்கூட நடைபெறக்கூடாது.
நம்முடைய இயக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் சேர்ந்த
அறைகூவல் சவால்கள்
மனித சமுதாய சமத்துவத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் தெளிவாக நிலைநாட்டவேண்டும் என்றால், அது நம்முடைய இயக்கங்களுக்கும், கொள் கைகளுக்கும் சேர்ந்த அறைகூவல் சவால்கள்தான்; அதை நாங்கள் மறுக்கவில்லை.
ஆகவேதான், இதை எல்லா ரூபத்திலும் தடுத்து நிறுத்திடப் போராடிக் கொண்டிருக்கின்றோம்; அந்த இளைஞர்களைப் பாதுகாக்கவும்; அவர்களுக்கு ஆதர வாகக் குரல் கொடுக்கவும் தீவிரமாக செயலில் இறங்கி னோம்.
தருமபுரியில் அவ்வளவு பெரிய கலவரங்கள் நடைபெற்ற நேரத்தில், மற்றவர்கள் உள்ளே செல்ல முடியாமல் இருந்த நேரத்தில், திராவிடர் கழகம் எப்படிப்பட்ட பணியை செய்தது என்பதை, திட்டமிட்டே சில ஊடகங்கள் மறைத்தன.
நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வில்லை. யாருடைய சான்றிதழ்களுக்காகவும் இயக்கம் இல்லை. நம்முடைய மனச்சான்றுக்காக நாம் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
நம்முடைய இயக்கத்தினுடைய ஜாதி ஒழிப்பு இலக்கு, இலட்சியம் நிறைவேறவேண்டும்
அப்படிப்பட்ட சூழ்நிலையில், எடுத்த கொள் கைகள் வெற்றியடையவேண்டும். நம்முடைய இயக்கத்தினுடைய ஜாதி ஒழிப்பு - இலக்கு, இலட்சியம் அது நிறைவேறவேண்டும்.
‘பிறவியினால் பேதம்‘ என்பது உலகத்தில் எங்குமில்லாத கொடுமை. ஒரு மனிதன் உயர்ந்த வன், அவன் உழைக்காதவனாக இருந்தாலும்கூட.
இன்னொரு மனிதன் தாழ்ந்தவன், அவன் 24 மணிநேரமும் உழைப்பவனாக இருந்தாலும்கூட
இது என்ன கொடுமையான சமுதாயம்?
அதே சமுதாய ஜாதி அடிப்படையில், ஒன் றுக்குக் கீழ் இன்னொன்று என்று அடுக்கு ஜாதி முறை. தனக்குக் கீழே எவன் இருக்கிறான் என்று பார்த்து, இவன் ஏதோ ஒரு போதையில் இருப்பவன் போல உணரக்கூடியவன். தனக்கு மேலே யார் இருக்கிறான் என்பதைப்பற்றி, அதை உணர முடியாதவனாக இருக்கின்றான் என்பதைப்பற்றித் தான் சிறப்பாக எடுத்துக்காட்டினார்.
ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்புதான்!
தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத் தைத் தொடங்கியதினுடைய நோக்கம், மீண்டும் அரசிய லுக்குப் போவதில்லை; சமூகப் பணியைத்தான் செய் வேன் என்று சொன்ன நேரத்தில், ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்புதான். இவை இரண்டும் ஒரே நாணயத்தினுடைய இரு பக்கங்கள் போன்று.
விளக்கம் சொன்னார்கள் - ‘பிறவி பேதம்‘ என்று.
அந்தப் பிறவி பேதம் என்பது இருக்கிறதே -
உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்பதும் பிறவி பேதம்
ஆண் உயர்ந்தவர் - பெண் தாழ்ந்தவர் என்பதும் பிறவி பேதம் தான்.
அங்கே உயர்ஜாதியினரின் ஆதிக்கம்; இங்கே ஆணின் ஆதிக்கம் - இவ்வளவுதான் வேறுபாடு.
எனவே, ஆதிக்க மனப்பான்மை எங்கும் இருக்கக் கூடாது. நட்புரிமை இருக்கவேண்டிய இடத்தில்; கூட்டுறவு உணர்வு இருக்கின்ற இடத்தில் கொடுமை இருக்கக் கூடாது.
சேரன்மாதேவி குருகுலத்தில் தொடங்கி...
எனவே, அந்த சமுதாய மாற்றத்திற்காகத்தான் 1924 இல், காங்கிரசில் உடன் உண்ணல் - சமமாக உண்ணுவது என்று சொல்லக்கூடிய உண்ணுவதிலே சமத்துவம் இல்லை என்பதற்காக சேரன்மாதேவி குருகுலத்தில் தொடங்கி,
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தெருவில் நடப்பதற்கு உரிமையில்லை; நாய்களுக்கும், பன்றி களுக்கும், கழுதைகளுக்கும் உள்ள உரிமை மனிதர் களுக்கு இல்லையே ஏன்? என்று கேட்டு, சத்தியாகிரகம் செய்து, அதற்காக இரண்டு முறை சிறை சென்று, ஓராண்டு காலமாக அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி, வெற்றி பெற்றார் வைக்கம் வீரர் தந்தை பெரியார்.
அன்றைக்குத் தொடங்கி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் வரையில் வந்த நேரத்தில், இன்னமும் தமிழ்நாட்டில், ஜாதி உணர்ச்சி மேலோங்கலாமா?
இன்றைக்கு ஏராளமான இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்கிறார்கள். சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில், ஓராண்டுக்கு சுமார் 300 மணவிழாக்கள் விளம்பரமே இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன.
ஆணவக் கொலை என்று நாம்தான் பெயரிட்டோம். நமக்கு அடுத்து இடதுசாரி நண்பர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் இதனை ஏற்றுக் கொள்கிறார்கள்.
மற்றவர்கள் எல்லாம், கவுரவக் கொலை என்று அதனை சொல்கிறார்கள்.
கொலையில் என்ன “கவுரவக் கொலை?”
கொலை என்பதே குற்றமானது; அதில் என்ன கவுரவம் என்பது.
உலகத்தில் வேறு யாராவது கேட்டால், சிரிப்பார்கள்!
தற்கொலை, படுகொலை போன்ற வார்த்தைகளைத் தான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், கவுரவக் கொலை - உலகத்தில் வேறு யாராவது கேட்டால், சிரிப்பார்களே!
அதனை மாற்றி, நம்முடைய இயக்கம், முற்போக் காளர்கள்தான் ‘ஆணவக் கொலை’ என்று பெயரிட் டோம்.
ஜாதி ஆணவம், எங்கள் ஜாதி பெரிது? இன்னமும் ஜாதிப் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி வெறியை ஊட்டிக்கொண்டிருந்தால், எப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கும் என்பதற்கு, இந்த வழக்குகள் - தீர்ப்புகள் எச்சரிக்கை மணி அடிக்கின்றன.
இதற்கு முன்பு திராவிடர் இயக்கம், குறிப்பாக திராவிடர் கழகம், நம்முடைய இயக்கங்கள் - உச்சநீதிமன்றத்தினுடைய பல தீர்ப்புகளை எதிர்த்துப் பேசியிருக்கின்றன.
ஆனால், இப்பொழுது காலங்கள் மாறுகின்றன; அப்படி மாறி வருகின்ற நேரத்தில், பெரியார் கருத்துகள், அம்பேத்கர் கருத்துகள், முற்போக்குச் சிந்தனைகளைத் தவிர்க்க முடியாமல், அங்கே இடம்பெறவேண்டிய வையாக இருக்கின்றன. எந்த ஜாதிக்காரர்கள் என்பது முக்கியல்ல; இன்னும்கேட்டால், உயர்ஜாதி நீதிபதிகளாக இருந்தாலும்கூட.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ஒரு வழக்கை எடுத்துக்கொண்டு, அதிலே பல வழக்குகள் எப்படி யெல்லாம் நடந்தன என்பதைப்பற்றி இங்கே நம்முடைய வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் எடுத்து விளக்கினார்.
அந்த வழக்கினுடைய சாராம்சத்தில், கடைசியாக வந்த உத்தரப்பிரதேச வழக்குகளைப்பற்றி சொன் னார்கள் அல்லவா! தலைகீழாகத் தொங்கவிட்டது; நீதி பதியைக் கொன்றது; பிறழ் சாட்சியங்களால் தப்பித்தது என்பதைப்பற்றியெல்லாம் சொன்னார்களே,
அதற்கு முன்னால், பல வழக்குகளைப்பற்றிப் பேசுகிறார்கள், மூன்று நீதிபதிகள்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு நவம்பர் 26 இல்!
அப்படி வருகின்ற நேரத்தில், நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும். அந்தத் தீர்ப்பு நவம்பர் 26 ஆம் தேதியன்று கொடுக்கப்பட்டது, உச்சநீதிமன்றத் தினால் - அந்த நிகழ்வு நடைபெற்று பல ஆண்டுகளுக்குப் பின்னால்.
அந்தத் தீர்ப்பிலே முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டியது - அதே தேதியில் (1957)
தந்தை பெரியார் அவர்கள் ஜாதி ஒழிப்பிற்காக அவகாசம் கொடுத்து, நீங்கள் ஜாதியை ஒழியுங்கள்; சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா? பார்ப்பான் இருக்கலாமா? பறையன் இருக்கலாமா? பள்ளன் இருக்கலாமா? சக்கிலியன் இருக்கலாமா? மேல்ஜாதிக் காரன் இருக்கலாமா? பிராமணன் இருக்கலாமா?
ஒருவன் தொடக்கூடியவன், தொடக்கூடாதவன்; படிக்கக்கூடியவன், படிக்கக்கூடாதவன்; பார்க்கக் கூடியவன், பார்க்கக் கூடாதவன்; நெருங்கக் கூடியவன், நெருங்கக்கூடாதவன் என்ற பேதங்கள் இருக்கலாமா?
இதனைப் போக்க வேண்டும் என்பதற்காக, அரச மைப்புச் சட்டத்தில் ஜாதியை ஒழிக்க வகை செய்யுங்கள் என்று சொன்னார்கள்.
தங்களிடம் உள்ள ஓட்டைகள், குறைபாடுகள் என்ன என்பதைப்பற்றி அவர்கள் சிந்திக்கத் தயாராக இல்லை!
அன்றைக்குப் பெரியார் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டு, நாங்கள் திருத்துகிறோம்; நீங்கள் அரசமைப்புச் சட்ட நகலை எரிக்காதீர்கள் என்று சொல்ல மனமில்லை அவர்களுக்கு. அதற்குப் பதிலாக, அரசமைப்புச் சட்ட நகலை எரித்தால், தண்டனை என்றுதான் சொன் னார்களே தவிர, தங்களிடம் உள்ள ஓட்டைகள், குறைபாடுகள் என்ன என்பதைப்பற்றி அவர்கள் சிந்திக்கத் தயாராக இல்லையே!
அதைவிட, மற்றவர்களுடைய இழிவைப்பற்றி, எப்படியெல்லாம் அந்த வலியை அவர்கள் பொறுத்துக் கொண்டு குமுறுகிறார்களோ - அந்த நோய்க்கு மருந்துகொடுக்கவேண்டும் என்று நினைக்கவில்லை.
மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கவேண்டிய ஒருவருக்கு - இப்படி நீ அழுதால், புலம்பினால் தண்டனை என்று சொன்னால், அது மனிதநேயமா?
அப்படிப்பட்ட சூழ்நிலையில், தந்தை பெரியார் அவர்களுடைய பிரச்சாரத்தினால், இந்த நாட்டில் பல்வேறு சிந்தனைகள் முழுக்க முழுக்க எப்படி வந்திருக்கிறது என்றால், ஒரு காலத்தில் இந்த சிந் தனையைப்பற்றியே தெளிவே இல்லாமல், நியாயப் படுத்திய தீர்ப்பாளர்கள் இருந்தார்கள்.
இன்றைக்கு அப்படியல்ல - அதுவே தலைகீழாக மாறி - இன்றைக்கு ஜாதி ஒழியவேண்டும் - ஜாதி என்பதை எவ்வளவு விரைவாக ஒழிக்கவேண்டுமோ, அவ்வளவு விரைவில் ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
எதையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்களோ, அண்மைக்கால நீதிமன்றத் தீர்ப்புகள் அவற்றையே சொல்லுகின்றன
அது ஒரு காட்டுமிராண்டித்தனமான ஏற்பாடு - ஒரு மனநோய் என்று எவ்வளவு கடுமையாக அதைப் பேச முடியுமோ அவ்வளவு கடுமையான அளவிற்கு - உலகத்தினுடைய மற்ற பகுதிகளை ஒப்பிட்டு - எதை எதையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் சொன் னார்களோ, அவற்றையே அண்மைக்காலத் தீர்ப்புகள் சொல்லுகின்றன.
இது இந்த இயக்கத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி. இந்தக் கொள்கைக்குக் கிடைத்த, நியாயத்திற்குக் கிடைத்த முதல் அங்கீகாரம்.
அந்த வகையில் நண்பர்களே, இங்கே குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ஒரு பகுதியை சொல்கிறேன்.
அருள்மொழி அவர்கள் அந்த வழக்கினுடைய விவரங்களையெல்லாம் உங்களுக்குச் சொன்னார்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment