மதமாற்ற விவகாரத்தை ஆயுதமாக கையிலெடுக்கும் பா.ஜ.க. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

மதமாற்ற விவகாரத்தை ஆயுதமாக கையிலெடுக்கும் பா.ஜ.க.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் மதமாற்றம் செய்ததாகக் கூறி இரண்டு பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட பெண்கள் மதமாற்றத்துக்காக செல்லவில்லை. இரவில் நடந்த சம்பவத்தில் அந்தப் பெண்களின் வாகனங்களைப் பறித்து அனுப்பியுள்ளனர்,’ என்கிறார் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

 புதுக்கோட்டை மாவட்டம், இருந்திரப்பட்டி அருகே உள்ள திம்மம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவரின் வீட்டுக்கு கடந்த 21 ஆம் தேதி ராணி, தேவசாந்தி ஆகிய இரு பெண்கள் சென்றுள்ளனர். இவர்கள் அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சமாதானபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் மதமாற்றம் செய்ய வந்துள்ளதாகக் கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளரும் இருந்திரப்பட்டி ஊராட்சியின் மேனாள் தலைவருமான கணேஷ் பாபு என்பவர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது தாங்கள் வந்த வாகனத்தையும்  அலைபேசியையும் பறித்துக் கொண்டு தங்களை விரட்டிவிட்டதாகக் கூறி இலுப்பூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்

இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு உள்பட நான்கு பிரிவுகளில் கணேஷ்பாபு மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த ஜனவரி 29 ஆம் தேதி இரவில் கணேஷ் பாபு கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட பா..கவினர் இலுப்பூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டும் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். இதுதொடர்பாக 79 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அருள்மொழி கூறும்போது கடந்த ஜனவரி 21 ஆம் தேதியன்று இரண்டு கிறிஸ்துவ பெண்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்கள் அழைத்தார்கள் என்ற பேரில் அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளனர். ஆனால், மதமாற்றம் செய்ய வந்ததாகக் கூறி அவர்களின் இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டு கணேஷ் பாபு தரப்பினர் திட்டி அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக அந்தப் பெண்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம்,’’ என்றார்.

 இது இரவு நேரத்தில் நடந்த சம்பவம். அந்த இரண்டு பெண்களின் வாகனத்தையும் பறித்துவிட்டு அனுப்பியுள்ளனர். அங்கிருந்து அவர்கள் வீடு ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவர்கள் நடந்தேதான் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்,  அந்த பெண்கள் மதமாற்றம் செய்ய வரவில்லை. தங்களுக்குத் தெரிந்தவர்கள் அழைத்ததால் வந்துள்ளனர்.

எங்க ஊருக்குள் எப்படி வரலாம்?’ எனக் கேட்டு அவர்கள் இருவரையும் கணேஷ்பாபு தரப்பினர் அசிங்கப்படுத்தியுள்ளனர். அவர்களது வாகனத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் மதப் பிரச்னை உருவாகும் சூழல் ஏற்பட்டது. அதனால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’’ என்கிறார் டிஎஸ்பி.

ஆனால், புதுக்கோட்டையுடன் இந்த விவகாரம் நிற்கவில்லை. மதுரையிலும் மதமாற்றம் செய்ததாக சிலர் மீது பாஜகவினர் குற்றம்சாட்டிய மற்றொரு சம்பவமும் அண்மையில் நடந்துள்ளது.

மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள தேவாலயத்தில் மதமாற்றம் செய்ய சிலர் வந்ததாக கூறி பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவப் பகுதிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்களுடன் பாஜகவினர் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, பாஜக மாவட்ட துணைத் தலைவர் கண்ணன், மண்டல தலைவர் பாலமுருகன், இந்து முன்னணியை சேர்ந்த அரசு, சுரேஷ், செந்தில் நாதன், ஆதிசேஷன் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் சுமார் 200 பேர் வில்லாபுரம் தேவாலயம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பதற்றம் அதிகரித்ததால் அப்பகுதியில் கடைகள் சில மணி நேரம் அடைக்கப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற காவல்துறையினர் சிலருடன் பாஜகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறையினர் கொண்டு சென்று வைத்திருந்து விட்டு சில மணி நேரம் கழித்து விடுவித்தனர்.

கட்டாய மதமாற்றம் என்னும் பெயரால், பிறமதப் பிரச்சாரங்களைத் தடுத்து பதற்றமான சூழலை உருவாக்கி, தமிழ்நாட்டின் அமைதிச் சூழலைத் தகர்த்து, தான் காலூன்றப் பார்க்கிறது பா... இத்தகைய முயற்சியில் இன்னும் மோசமான அங்கம்தான் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல் என்னும் கிராமத்தில் இந்துத்துவா அமைப்புகள் செய்து வரும் அட்டூழியம், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த அரியலூர் மாணவி தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட போது காவல்துறைக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட காணொலியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி ஒட்டி அப்பெண் மறைந்த பிறகு வெளியிட்டு, கட்டாய மதமாற்ற முயற்சி என்று அதை ஆதாரப்படுத்தி மிகக் கேவலமான மதவாத அரசியலைக் கையிலெடுத்தது பா... பிறகு அம்மாணவி பேசிய மற்றொரு காணொலி வந்ததும் சமூக ஊடகங்கள் மூலம் உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

எனினும் இப்பிரச்சினையை வைத்து மதவாத சிந்தனையை விதைக்கும் முயற்சியில் தன்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயல்கிறது பா... - வழக்கு தொடர்பான விசாரணைகளும், முறையீடுகளும் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இப்படி பாஜகவினர் அடுத்தடுத்து  தமிழகத்தில் பிரச்சினையாகவே இருந்திராத மதமாற்ற விவகாரத்தை கையில் எடுத்திருப்பது    அதன் கெடு நோக்கத்தை மக்கள் மத்தியில் புரிய வைத்துள்ளது.  மதமாற்றம் என்பது அவரவரின் மனமாற்றத்தைப் பொறுத்தது.  இந்திய அரசமைப்புச் சட்டம் மதத்தைப் பின்பற்றவும், மதத்தை பரப்பவும் உரிமை வழங்கியுள்ளது. எனவே இன்றைய சூழலுக்குச் சற்றும் பொருந்தாத கட்டாய மத மாற்றம் என்ற சொல்லாடலைக் கையாள்கிறது பா...  ஜனநாயக நாட்டில் எவரொருவரையும் கட்டாயமாக மதமாற்றம் செய்ய முடியாது. இந்தச் சொல்லாடலே பொய்யானது.

எனவே, மதப்பிரச்சாரம் என்பதையே என்பதையே கட்டாய மதமாற்றம் என்று முத்திரைக்குத்தி வன்முறையை உருவாக்க முயல்கிறது பா... - மதமாற்றம். கூடாது எனச் சொல்லும் இவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாஎன்ற அமைப்பின் மூலம், இந்து மதத்துக்கு வாருங்கள்எனக் கூறுவது மதமாற்றம் அல்லாமல் வேறு என்ன?  இந்த விவகாரத்தில் சிபிசிஅய்.டி. விசாரணை கோரிய வழக்கில் சி.பி.அய் விசாரணை நடத்துவதற்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மதமாற்றம் என்று சொல்லிவிட்டு சட்டத்துக்குப் புறம்பாக மாணவியின் அடையாளத்தை பா...வினர் வெளியிட்டதும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. ஆனால் அது குறித்தும் ... தன் பொய்ப் பரப்புரையை முடுக்கி வருகிறது பா...

தொடக்க காலம் முதல் தமிழ்நாட்டில் கல்விக் கூடங்களில் பெரும்பாலானவை கிறிஸ்தவ மிசினரி பள்ளிகளே! 1830 முதல் விடுதலை பெற்ற பிறகு இன்றுவரை குறிப்பாக கல்வியறிவு பெறுவதில் தென் இந்தியாவில் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களின் பங்கு அதிகம். ஆகையால் தான் கடந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே, தென் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் வட இந்திய மாநிலங்களைவிட அதிகக் கல்வி நிறுவனங்கள் இருந்தன.

  ஆனால் இந்து அமைப்புகள் கல்வி விவகாரத்தில் என்ன செய்தனர்? சேரன்மாதேவி குருகுலம், வாரணாசி இந்து கல்வி நிலையம், மகாராட்டிராவில் உள்ள ஆச்சாரியா சிக்ஷா கேந்திரா போன்றவற்றில் பார்ப்பனர்களுக்குத் தனி வசதியுடன் கூடிய வகுப்பறை, பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு திண்ணையில் கல்வி, தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவர்களுக்கு ஓலைப்பாயிலும் சணல் விரிப்பிலும் சாலை ஓரம் அமரவைத்து - கல்வி தராமல் அவர்களை விறகு பொறுக்கவும், சாணி அள்ளவும், எச்சில் இலைகளை அள்ளவும் கூறி எஞ்சிய நேரத்தில் ஏதோ ஒப்புக்குக் கல்வி என்ற பெயரில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் என்று கூறி கல்வி போதித்த நிகழ்வுகள் எல்லாம் அந்த அந்த மாநிலத்தில் பதிவாகி உள்ளன.

கல்வியைத் தடுத்த கும்பல், இப்போது அப்பணியில் ஈடுபட்டிருப்போரைக் குறி வைத்து நகர்கின்றனர். இதன் முக்கியநோக்கம் கிறிஸ்தவ கல்வி நிலையங்களுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டியது - அதன் மூலம் நடுத்தர ஏழைகளின் கல்வி உரிமையை பறிக்கவேண்டும், அதே நேரத்தில் மதவிவகாரத்தைக் கையில் எடுத்து கட்சியை வளர்க்க முயற்சிக்கிறது. இதுதான் பா...வின் திட்டம். ஒரு போதும் அது நிறைவேறப் போவதில்லை.

No comments:

Post a Comment