நெகிழ்ச்சியான நிகழ்வு!: "சி.எம். சார் ஹெல்ப் மீ!" - நீட் எதிர்ப்பில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஆந்திர மாணவன் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

நெகிழ்ச்சியான நிகழ்வு!: "சி.எம். சார் ஹெல்ப் மீ!" - நீட் எதிர்ப்பில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஆந்திர மாணவன் கோரிக்கை

சென்னை,பிப்.4- மருத்துவக்கல்வியில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின்  செல்லும் பாதையில்CM Sir Help Me! எனும் பதாகையுடன்  நின்றஆந்திர மாணவர் ஒருவர் தமிழ்நாடு முதலமைச்சரிடம் நீட் விலக்கில் ஆந்திரமாநிலத்துக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்தியா போன்ற ஏழை, எளிய விளிம்புநிலை மக்கள் வாழும் நாட்டில், ஜாதியின் பெயரால் சமத்துவமற்ற தன்மை நிலவும் நாட்டில், நீட் போன்ற பொது நுழைவுத் தேர்வு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவிற்கு தடையாக விளங்குகிறது. அதனால்தான், தமிழ்நாட்டில் இருந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அது தொடர்பாக  குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றதோடு, உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்றது.

அப்படிப் பெற்ற கல்வி உரிமையை நீட் தேர்வு பறிக்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடை போடும் நீட் தேர்வை  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.. ஸ்டாலின்  தலை மையிலான அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

 இந்தியப் பிரதமரை 17.6.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அளித்தார். மேலும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்டமுன்வடிவு 13.9.2021 அன்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அச்சட்டமுன் வடிவு  குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக  தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காத்திட தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று (3.2.2022) தலைமைச் செயலகம் வரும் வழியில், டி.டி.கே.சாலையில்,  தமிழ்நாடு முதல மைச்சர் மு.. ஸ்டாலினை ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட் டத்தை சேர்ந்த மாணவன் என்.சதிஷ், CM Sir Help Me என்ற பதாகையுடன் சந்தித்து,  முதலமைச்சர்  நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு நன்றி தெரிவித்து, தனது ஆதரவையும் தெரிவித்தார்.

மேலும், தான் ஆந்திர மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றி ருந்தும்,  நீட் தேர்வு காரணமாக மருத்துவப் பட்டப்படிப்பு படிக்க இயலாமல் போய்விட்டது, ஆகையால் உங்கள் போராட்டம் ஆந்திர மாநிலத் திற்காகவும் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடுமுதலமைச்சர் மு..ஸ்டாலின் அம்மாணவனிடம் நீட் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

இது தொடர்பாக, அம்மாணவனுக்கு நன்றி தெரிவித்து, அகில இந்திய அளவிலும் இதற்காக குரலை தான் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

 எனவே நம்பிக்கையோடு ஊருக்கு செல்லுமாறு கேட்டுக் கொண் டார். அம்மாணவரும்,  முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டார்.   

இந்நிகழ்வைக் கண்ட பொதுமக்கள் மிகுந்த நெகிழ்ச்சியடைந்தனர்.

No comments:

Post a Comment